
ஆந்திராவின் யமசிங்கபுரத்தில் யமதர்மராஜாவைக் குலதெய்வமாக வணங்கித் திருட்டுத் தொழிலைச் செய்யும் திருடர் குலத்தின் தலைவர் விஜய் சேதுபதி. பாண்டிச்சேரியில் ஒரு வீட்டில் திருடும் பொழுது, சுவரில் மாட்டப்பட்டிருக்கும் புகைப்படத்தில் நாயகியைப் பார்க்கிறார். சென்னையில் படிக்கும் நாயகியை, நண்பர்களின் உதவியுடன் கல்லூரியிலிருந்து யமசிங்கபுரத்துக்கு கடத்திக் கொண்டு செல்கிறார்.
கடத்தப்படும் நாயகியை மீட்க கெளதம் கார்த்திக் தன் நண்பன் டேனியலுடன் இணைந்து யமசிங்கபுரத்துக்கு இருவரணிப் படையாகச் செல்கிறார்.
விஜய் சேதுபதியின் யதார்த்த இயல்புடன் கலந்த நடிப்பு எப்போதும் போல நம்மைக் கவர்கிறது. நிறுவுமுறைத் திரைப்படத்துக்குத் தகுந்த பாணியில் நடித்துக் கொடுத்திருந்தாலும், தனக்கே உரிய வித்தியாசமான கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுக்கும் அவரது உத்தி இப்படத்துக்குக் கைகொடுத்திருக்கிறது.
மெளன ராகம் கார்த்திக்கை நினைவூட்டும்படி படு இயல்பாகவும் டிரெண்டியாகவும் கெளதம் கார்த்திக் நடிக்க, அவருடன் கைகோர்த்துக் கலகலக்க வைத்து ஸ்கோர் செய்திருக்கிறார் டேனியல். கெளதம் கார்த்திக், நாயகி நிஹாராவிடம் ஒவ்வொரு முறையும், ‘ஒரு விஷயம் சொல்லணும். அதை நல்லநாள் பார்த்து சொல்றேன்’ எனத் தலைப்பைப் பதிய வைக்கிறார்.
ஸ்ரீசரவணின் ஒளிப்பதிவும், கோவிந்தராஜின் படத்தொகுப்பும் படத்தின் பல இடங்களில், கதையின் புள்ளியில் ஒருங்கிணைய சிரமப்படுகிறது. கோவிந்தராஜ் படத்தின் நீளத்தைச் சுருக்கியிருக்கலாம்.
ஜஸ்டின் பிரபாகரனின் இன்னிசையும் பின்னிசையும் படத்தின் தன்மையை மென்மையாக்கி நம்மை அமர்த்துகிறது. ஏதோ வித்தியாசமான முறையில் பொழுதுபோக்கு புனைவம்சமாக முயற்சி செய்திருப்பதைப் பாராட்டலாம். கிட்டத்தட்ட இயக்குநர் எதிர்பார்த்ததை அடைந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆனால் ஜூனியர் என்டிஆர், பவன் கல்யாண், ஆந்திரா என்று பாதிக்குப் பாதி வம்படியாக படம் தெலுங்கு தேசத்திற்கு இழுத்து செல்லப்படுவதும்; படம் தொடங்கிய முதலிலியே பால்வழி அண்டத்தை விவரிக்கும் பொருட்டு இந்தியா எனும் ஒற்றை தேசம் மாநிலங்களாக பிரிக்கப்பட்டது நினைவூட்டப்பட்டிருப்பதெல்லாம் படத்தின் இருவேறு மொழி வியாபாரத்துக்கு உதவிய வகையில் படம் ஒரு குறிப்பிட்ட மரபு-மாநில-மொழி சமூகத்தினரின் ஆழ்மனதில் ஒட்டுவதில்லை.
“யமகுல வேந்தன்” விஜய் சேதுபதி நாயகியை ஏன் கடத்துகிறார்? அதற்கு நாயகியின் தாய் ஏன் சம்மதிக்கிறார்? நிஹாராவைத் தேடிச் செல்லும் கெளதம் கார்த்திக் அவரை மீட்டாரா? போன்ற கேள்விகளுக்கு, “ஒரு நல்ல நாள் பார்த்துச் சொல்றேன்” என்ற வாசகம் பதிலாகச் சொல்லப்படுகிறது.
இறுதியில் இருபத்தைந்து வருடங்களுக்கு பின்னோக்கிச் சென்று, தெலுங்குப் படப் பாணியில் ஒரு அசுவாரசியமான கதை சொல்லப்படுகிறது. ஆந்திராவின் பழமரபுவாசிகளைச் சுற்றி, நிகழும் இக்கதையை மிகைப்புனைவு (Non realistic Fiction) பாணியில் சொல்வதற்கு முற்பட்ட புதுமுயல்வு பொழுதுபோக்கம்சம் நிறைந்திருந்தாலும், ‘பெரிய கண்ணகி!’ என்று ஆந்திர யமசிங்கபுரவாசி சொல்லும்போது, வெளிப்படும் முரணைப் போல், இன்னும் பல முரண்களும் படத்தின் ஒட்டாத கதைமரபும் உள்ளிருந்து குரல் கொடுக்கிறது. எனினும் இரண்டரை மணிநேரம் சொச்ச படத்தைப் பொறுமையுடன் பார்க்கச் சிரமப்பட வேண்டியுள்ளது.
– சிவசங்கர்