Search

ஒரு ஃபைனலின் கதா – ஐ.பி.எல். 2019

ipl-2019---final-katha

கோலகலமாகத் தொடங்கிக் கொண்டாட்டமாக முடிந்திருக்கிறது இந்தியாவின் கோடைத் திருவிழாவான ஐ.பி.எல்.

மூன்று முறை சாம்பியனான இரு அணிகளும், நாலாவது முறை சாம்பியனாக வென்று சாதனை படைக்கக் காத்திருந்தனர். ஒன்பது முறை இறுதியாட்டத்தில் விளையாடும் ஒரே வீரரைத் தலைவராகக் கொண்ட அணி Vs நாலு முறை இறுதியாட்டத்தில் விளையாடி நாலு முறையும் வெற்றி பெற்ற ஒரே வீரரைத் தலைவராக கொண்ட அணி.

‘Odd years-ஆன 2011, 2013, 2017இல் நாங்க தான் சாம்பியன்ஸ், அதனால 2019இல் நாங்க தான் சாம்பியன்ஸ்’ என மும்பை ஃபேன்ஸ் புஜத்தைத் தூக்க, ‘நாங்க இதுவரை பைனல் வராத ரெண்டு வருஷமும் இந்தியா பொது தேர்தல் நடந்த 2009, 2014 தான் (தடை செய்யப்பட்ட இரண்டு ஆண்டுகள் தவிர), அதையே மாத்திட்டோம், இதை மாத்த மாட்டோமா?’ என சென்னை ரசிகர்கள் பதிலுக்குத் தொடை தட்டினர்.

நடப்பு தொடரில் மோதிய மூன்று ஆட்டங்களிலும், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர்கிங்ஸை வென்றிருந்தது. சென்னை ரசிகர்கள் “சிவாஜி” ரஜினி டெம்லட்டையும், மும்பை ரசிகர்கள் “தலைநகரம்” வடிவேலு டெம்ப்லட்டையும் போட்டு மாறி மாறி உசுப்பேற்றிக் கொண்டிருக்க, டாஸ் வென்று பேட்டிங்கை எடுத்தார் ரோஹித் சர்மா. ‘நாங்க டாஸ் ஜெயிச்சிருந்தாலும், பந்து வீச்சை தான் தேர்தெடுத்திருப்போம்’ என தோணி சமாதானப்பட்டுக் கொண்டார் (இதுக்கு எதுக்குடா டாஸ் போட்டு டைம் வேஸ்ட் பண்ணிங்க? பேசி ஒரு முடிவுக்கு வந்திருக்கலாமில்ல!).

சென்னைக்காக தீபக் சகார் முதல் ஓவர் வீசினார். இந்தத் தொடர் முழுக்க, பவர்ப்ளேவில் நிறைய ‘டாட்’ பால் போட்ட அனுபவம், முதல் ஓவரில் தெரிந்தது. இரண்டு ரன் மட்டுமே கொடுத்தார். இரண்டாவது ஓவரை வீசின தாக்கூர் ஓவரில், சிக்ஸ் பறக்க விட்டு, பந்தைத் தொலைத்தார் ரோஹித் (இதுவே நம்ம கல்லி கிரிக்கெட்டா இருந்தா, ‘நீ தானே அடிச்ச, நீயே போய் பந்தை தேடு’ என ரோஹித்தை அலைய விட்டு டயர்ட் ஆக்கியிருக்கலாம். ஐ.பி.எல் ஆச்சே புது பால் கொடுத்துவிட்டார்கள்).

மூன்றாவது ஓவரை திரும்பவும் சகார் வீச, ‘என்ன பவர்ப்ளேவில் நிறைய டாட் பால் போடுவியா?’ எனக் கோவப்பட்ட டி’காக் அந்த ஓவரில் மூன்று சிக்ஸைப் பறக்க விட மும்பையின் ஸ்கோர் ஏற ஆரம்பித்தது. நாலாவது ஓவரை ஹர்பஜன் வீச, அந்த ஓவரில் மும்பைக்கான முதல் ஃபோரை ரோஹித் அடித்தார். அது வரை அடிச்ச நாலு பௌன்டரியுமே சிக்ஸ் தான்! ஐந்தாவது ஓவரைத் திரும்பவும் தாக்கூர் வீச வந்தார். அந்த ஓவரில் பௌன்ஸர் போட, அதை சிக்ஸ் பறக்க விட்டார் டிகாக். “ஐய்யய்யோ உங்க வேகத்துக்கெல்லாம் பௌன்ஸர் போடக் கூடாது, ஈஸியா சிக்ஸ் அடிச்சிருவங்க” என நம்ம தமிழ் கமென்ட்ரி எக்ஸ்பேர்ட்ஸ் ஆர்.ஜே. பாலாஜி தலைமையில் அறிவுரை வழங்க, “சும்மா மைக் கிடைச்ச எதையாவது, பேசிகிட்டு இருக்காதீங்கடா”என அடுத்த பால் இன்னொரு பவுன்ஸர் போட்டு டிகாக் விக்கெட்டை எடுத்தார் தாக்கூர். ஆறாவது ஓவரைத் திரும்பவும் சகார் போட வர, வானவேடிக்கைக்கு மும்பை ரசிகர்கள் தயாராக, ‘ஒரு தடவை தான் மிஸ்ஸாகும், ஒவ்வொரு தடவையுமில்ல’ என, அந்த ஓவரின் இரண்டாவது பாலில் விக்கெட் எடுத்து விக்கெட் மெய்டினாக முடித்தார்.

தோனி மிகச்சிறந்த கேப்டன் என்பதற்கு இன்னொரு உதாரணம் இந்த மேட்ச். தன் அணி வீரர்கள் மேல் அவர் வைக்கும் நம்பிக்கையும், அதுக்கு வீரர்கள் திரும்பத் தரும் பெர்ஃபாமன்ஸூம் தான் சென்னையின் பலம். பந்து வீச்சாளர் இருவரையும், பந்து வீசம் முனையை மாற்றி, மும்பையின் இரு விக்கெட்டுகளையும் எடுத்தது சென்னை.

ஓப்பனர்ஸ் போனா என்ன? சூர்யகுமார் இருக்கார். இந்த சீசனில் சென்னைக்கு எதிராக இரண்டு 50 அடித்திருக்கிறார். கிஷன் சின்னப்பையனாலும் நல்லா அடிப்பான் என மும்பை ரசிகர்கள் சமாதானமாக, களத்தில் கிஷன், சூர்யகுமார் இருவரும் ரன் எடுக்கறது முக்கியமா, விக்கெட் காப்பத்துறது முக்கியமா எனக் குழப்பத்திலேயே ஆட, மும்பையின் ரன்ரேட் எவ்வளவு வேகமா ஏற ஆரம்பித்ததோ, அதே வேகத்தில் குறையத் தொடங்கியது.

180-200 ரன்கள் வருமென நினைத்த ஸ்கோர், இப்பொழுது 160-170 க்கே போராட வேண்டியிருக்கே என மும்பை ரசிகர்கள் வருத்தப்பட, ‘சேச்சே, கவலைப்படாதிங்க நான் இருக்கேன்’ என கிஷன் ப்ராவோ ஓவரில் இரண்டு ஃபோர் அடித்தார். அடுத்த ஓவரில் சூர்யகுமார் ஒரு ஃபோர் அடிக்க, 180 ரன்கள் கன்ஃபார்ம் என ரசிகர்கள் நிமிர்ந்து உட்கார, அடுத்த ஓவரை வீசிய தாஹிர், இரண்டாவது பந்தில், சூர்யகுமாரை போல்ட் செய்துவிட்டு வழக்கம் போல ஓட ஆரம்பித்து விட்டார். அவுட்டான பேட்ஸ்மேன் பௌலியனுக்குப் போறதுக்கு முன்னாடி இவர் ஒருமுறை போய் விட்டு வந்துவிடுகிறார். இந்த விக்கெட் மூலம், இந்தத் தொடரில் அதிக விக்கெட் எடுத்து “Purple cap”யைத் தன் வசப்படுத்தினார்.

அடுத்த வந்த க்ர்னால் பாண்டியவை, ‘ஓ! பௌன்ஸர் போட்ட விக்கெட் கிடைக்குதா? ரொம்ப ஈஸியா உள்ளதே!’ என ஒரு பௌன்ஸர் வீசி, அவரே அழகான கேட்ச் பிடிச்சி வழி அனுப்பி வைத்தார் தாக்கூர்.

அடுத்த வந்த பொல்லார்ட், தாஹிர் ஓவரில் சிக்ஸ்கள் அடித்து அட்டகாசமாக ஆரம்பித்தார். ‘போங்கப்பா, எனக்கு விளையாடவே பிடிக்கலை, சோம்பேறித் தனமா இருக்கு’ என ஒரு சோம்பலான ஷாட் அடிச்சு தஹிர் ஓவரில் அவுட் ஆனார் இஷன். களத்தில் ஹார்திக், பொல்லார்ட் இருக்க, ‘ஹல்க்கும், அயர்ன் மேனும் ஒண்ணு சேர்ந்திட்டாங்க. இனிமே சரவெடி தான்’ என நிமர்ந்து உட்கார, அதுக்கு ஏத்த மாதிரி தாக்கூர் வீசின பதினெட்டாது ஓவரில் சிக்ஸ், ஃபோர்ரா பறக்க, அந்த ஓவர் முடிவில் மும்பை 136 ரன் குவித்திருந்தது. இன்னும் ரெண்டு ஓவர் இருக்கு. எப்படியும் குறைச்சப்பட்சம் 25-30 உறுதி என சென்னை -28 இல் சின்னப்பசங்க டீமோட பெட் மேட்ச் கிடைத்த சந்தோஷத்தில் குதிக்கும் சிவா டீம் போல சந்தோஷத்தில் இருந்தது மும்பை.

பத்தொன்பதவது ஓவரை தீபக் சகார் வீச, முதல் பாலை ஃபோர் அடித்துத் தொடங்கி வைத்தார் ஹர்திக். வடுகப்பட்டி ராமசாமியைத் தேடி, ‘நரி ஊளையிட்டுருச்சி, பணம் கிடைச்சிரும்’ என்ற மனநிலையில் மும்பை இருந்தது. ஆனா அடுத்த பாலில் ஹர்த்திக் LBW ஆக, ‘சேச்சே, பேட்டில் பட்டுருச்சிப்பா’ என ஹர்திக் ரெவ்யூ கேட்க, ‘ஆமா, தாத்தா நானும் கேட்டேன், எனக்கும் சத்தம் கேட்டுச்சு’ என மும்பை இந்தியன்ஸின் பிரத்தியேக வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சுரேக்கர், நாட்டாமையிடம் முறையிடும் சிறுவனாக மைக்கில் கத்த, ‘தம்பி, அதெல்லாம் ஒண்ணும் படலை, ஒழுங்கு மரியதையா கிளம்பு’ என மூன்றாவது நடுவர் மஞ்சுரேக்கர் தலையில் தட்டாத குறையாகத் தீர்ப்பு வழங்கிவிடுகிறார்.

அடுத்து ராகுல் சகார் களமிறங்க, தர்மத்தின் தலைவன் பேக்ரெளண்ட் மியூசிக் மைண்டில் ஓடியது. அது ராகுல் மனதிலும் ஓடியிருக்கும் போல! ‘என்னயிருந்தாலும் அண்ணண் பாலை அடிக்கிறது தப்பு’ என இரண்டாவது பாலில் கேட்ச் ப்ராக்டிஸ் கொடுத்து அவுட்டாகி, நான் ‘பொல்லாதவன்’ தம்பியில்லை, ‘வானத்தை போல’ தம்பியென நிரூபித்தார். அடுத்த வந்த மிச்சேல் ரன், அடுத்த ரெண்டு பாலிலும் பந்தைத் தேடிக் கொண்டிருக்க, அந்த முதல் ஃபோர் தவிர, வேற எதுவும் ரன் அளிக்காமல் சகார் அந்த ஓவரை முடித்தார். முதல் இரண்டு ஓவரில் 22 ரன்கள் கொடுத்த தீபக், அடுத்த ரெண்டு ஓவரில் வெறும் நாலு ரன்கள் கொடுத்து, மூன்று விக்கெட்கள் எடுத்தார்.

கடைசி ஓவரை ப்ராவோ வீச, அடித்தால் ஃபோர், சிக்ஸ் தான், சிங்கள் கிடையாதென பொல்லார்ட் ரன் ஒட மறுக்க, மிச்சேல் மட்டும் இந்தப் பக்கத்திலிருந்து, அந்தப் பக்கத்திற்கு தனியே ஓடிவிட்டு வந்தார். ஆனா அதற்கெல்லாம் ரன் தர முடியாதென ஸ்ட்ரிக்ட் ஆஃபிஸராக அம்பயர் சொல்லிவிட்டார்.

அடுத்து வீசின பந்து வைடாகப் போக, ‘அதெல்லாமில்ல நீ நகர்ந்திட்டே’ என அம்பயர் சொல்ல, அடுத்த பாலில் வித்தாயசமா பொஷிசனில் நின்று பௌலர், அம்பயர் என எல்லாரையும் வெறுப்பேற்றினார் பர்த் டே பேபி பொல்லார்ட். ‘ரன் அடிச்சு, எட்டு பாலாச்சுடா’ என யாரோ ஞாபகப்படுத்தியது போல் அடுத்த பாலில் ரன் ஓடி, இரண்டாவது ரன் ஓடும்பொழுது மிச்சேல் அவுட் ஆனார்.

கடைசி ரெண்டு பாலிலும் ஃபோர் அடிச்சு, ‘இதுற்குத்தான் காத்திருந்தேன்’ என பொல்லார்ட் கெத்து காட்ட, 20 ஓவர் முடிவில் 149 ரன் குவித்து, சென்னைக்கு 150 ரன்னை இலக்காக கொடுத்தது.

சென்னைக்கு டு பிளசிஸும், வாட்சனும் களமறிங்க, மிச்சேல் முதல் ஓவரை வீசினார் . அந்த ஓவரில் ஓரு ஃபோருடன் ஏழு ரன்களைக் குவித்தது சென்னை.

‘காலையில் முதல் பஸ்ஸில் ஊருக்குப் போகனும், நைட் சீக்கரமாகத் தூங்கு’ என யாரோ டுபிளசிஸிடம் சொல்லியிருப்பாங்க போல. மேட்சைச் சீக்கரமாக் முடிக்க நினைத்து க்ருனால் பாண்டியா வீசிய நாலாவது ஓவரில் அதிரடியாக சிக்ஸும், ஃபோரும் வெளுத்தார். அதே வேகத்தில் ஊருக்குப் போகும் ஞாபகத்தில் அந்த ஓவரில் நடையைக் கட்டினார்.

‘மத்த மேட்ச்னா தாங்க கொஞ்சம் அப்படி, மத்தப்படிக்கு ஐ லவ் பைனல்ஸுங்க’ – கணக்காக வாட்சன் மறுபடியும் தன் அதிரடியைக் காட்டினார். மாலிங்கா ஓவரில் இரண்டு ஃபோரும், ஒரு சிக்ஸும் அடித்தார். அந்த ஓவர் முடிவில், மலிங்கா 2-0-22-0. தீபக் சகாருக்கு இருந்தது போலவே!
மறுபுறம் ரெய்னா, ஹர்பஜனிடம் தமிழ் படிச்சிட்டு வந்திருப்பார் போல. ‘பொறுத்தார் பூமி ஆள்வார்’ என்பதற்குச் சான்றாக தேமேவென அமைதியாக இருந்தார். நடுவில் மிக்சேல் வீசிய பந்தில் அவுட் ஆக, ரெவ்யூ செய்து அந்தக் கண்டத்தில் இருந்து தப்பினார்.

மிச்சேல் வீசிய அடுத்த ஓவரில், வாட்சன் கொடுத்த கேட்ச்சை, பௌலிங்கில் மட்டுமில்லை, இன்னைக்கு ஃபீல்டிங்கிலும் நான் தான் கில்லி என கோட்டை விட்டார் மாலிங்கா. ‘என்னடா ரன்-அவுட்டும் பண்ண மாட்டிங்கிறீங்க, கேட்ச்சையும் பிடிக்க மாட்டேங்கிறீங்க, நானும் முதல் பஸ்ஸுக்கு ஊருக்குப் போக வேணாமா?’ என வாட்சன் உள்ளபடிக்குக் கடுப்பாகிவிட்டார்.

ராகுல் சகாரின் அடுத்த ஓவரில் ரெய்னா LBW ஆக, அதான் முன்னாடியே ரெவ்யூ பண்ணித் தப்பினோமே, இன்னொரு தடவை தடவை தப்ப மாட்டோம என ரெவ்யூக்குப் போனார். ரெண்டு லட்டு திண்ண ஆசைப்பட்டு பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அடுத்த வந்த ராயுடுவும், பௌன்ஸர் போட்டால் இப்படித்தான் கீப்பரிடம் கேட்ச் கொடுக்கவேண்டும் என டெமோ காட்டினார்.

அடுத்து தோனி களத்திற்கு வந்தார். இந்தத் தொடரில் தொடர்ந்து நன்றாக விளையாடின பேட்ஸ்மேன். எப்படியும் ஜெயிக்க வைத்து விடுவார், என்ன கடைசி ஓவர் வரைக்கும் மேட்சைக் கொண்டு போவார், மத்தப்படி ஓ.கே தான் என ஆஸ்தான சென்னை ரசிகர்கள் பேசிக்கிட்டு இருக்கற நேரத்தில் அது நடந்தது. வாட்சன் அடித்த பந்து மாலிங்காவிடம் சென்றது. ‘என்னடா, எப்ப பார்த்தாலும் எங்கிட்டயே வர?’ என வாட்சன் மேல கடுப்பாகி, மாலிங்கா அவர் ஓவர் த்ரோ பண்ண, தோனி இரண்டாவது ரன்னுக்கு ஆசைப்பட்டு மறுக்கா ஒட, ஏற்கெனவே வாட்சனை டைரக்ட் ஹிட் அடித்து அவுட் பண்ண முடியாத கடுப்பில் இருந்த இஷன், இம்முறைய டைரக்ட் ஹிட்டாக்க, மூன்றாவது நடுவரிடம் தீர்ப்பு போனது.

ஒரு கோணத்தில் அவுட் எனவும், இன்னொரு கோணத்தில் அவுட் இல்லை என்கிற மாதிரி ஒரு குழப்பத்திலேயே இருக்க, மூன்றாவது நடுவர், தீர்ப்பு சொல்ற நேரம் வந்துவிட்டதென தோளில் துண்டைப் போட்டு அவுட் கொடுத்து விட்டார்.

‘ஐய்யய்யோ’ என தீவிர சென்னை ரசிகர்கள் தலையில் கை வைக்க, ‘அப்பாடா, தோத்துட்டா சொல்றதுக்குக் காரணம் கிடைத்துவிட்டது’ என முட்டுக்கொடுக்கும் சென்னை ரசிகர்கள் நெஞ்சில் கை வைத்துக் கொண்டார்கள். இந்தத் தீர்ப்பு வருகின்ற வரைக்கும், ரோஹித்தின் முகம், ‘உன்னை பெஸ்ட் பௌலர்னு நினைச்சி டீமில் எடுத்த என்னை…’ என அப்ரசன்டீகளிடம் மாட்டின கான்ட்ராக்டர் நேசமணி கணக்காக இருந்தது.

ராகுல் சகார் வீசிய அடுத்த ஓவரில், வாட்சன் கொடுத்த ரிட்டன் கேட்ச்சைத் தவறவிட்டார். ‘அடேய்களா! இன்னும் நான் ஹிட் விக்கெட் மட்டும் தான்டா ட்ரை பண்ணலை’ என வாட்சன் மைண்ட் வாய்ஸில் ஓடியிருக்கும்.

கடைசி 5 ஓவரில் 62 ரன் தேவைப்பட, மேட்ச் மும்பை பக்கமிருக்க, ‘இங்க பாரு. தீபக் சகாரும் இரண்டு ஓவரில் 22 ரன் கொடுத்தான். அடுத்த ரெண்டு ஓவர் சூப்பரா போட்டான். நீயும் அதே மாதிரி பண்ணு’ என ரோஹித் மாலிங்காவிடம் பந்தைக் கொடுக்க, ‘ஆமா, மனசுல தோனின்னு நெனைப்பு’ என மாலிங்கா மனதில் திட்டிக் கொண்டே போட, அது வரைக்கும் தடவிக் கொண்டிருந்த ப்ராவோ முதல் பாலில் சிக்ஸ் அடிக்க, வாட்சன் தொடர்ச்சியாக மூன்று ஃபோர் அடிக்க, ரோஹித் மறுபடியும் கான்ட்ராக்டர் நேசமணி மனநிலைக்குப் போய்விட்டார். அடுத்த ஓவரில் பும்ரா வீசிய முதல் பந்தில், வாட்சன் மறுக்கா கொடுத்த கேட்ச்சை, ‘என் பந்திலேயே பிடிக்கலை, உன் பந்திலா பிடிக்கப் போறேன்’ என ராகுல் சாகர் சொல்ல, பும்ராவை விட வாட்சன் கடுப்பாகி இருப்பார்.

தோனிக்கு அப்புறம் சிறந்த கேப்டன் ரோஹித் தான் என அவரோட ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்க, ‘அதெல்லாம் ஏன் நீ சொல்ற, அதெல்லாம் நீ சொல்லக் கூடாது’ என கான்ட்ராக்டர் நேசமணி மோடிலிருந்து மாறி மதுரை முத்து பாண்டி மோடில் பதினெட்டாவது ஓவரை க்ருனால் பாண்டியாவிடம் கொடுத்தார். அப்போது சென்னைக்கு, வெற்றி பெற மூன்று ஓவரில் 38 ரன்கள் தேவை.

க்ருனால் பாண்டியாவும், கேப்டனின் நம்பிக்கையைக் காப்பாற்றும் விதமாக, வெறும் மூன்று சிக்ஸ் மட்டுமே கொடுத்தார். பத்தொன்பதாவது ஓவரை, மும்பையின் காப்பான் பும்ரா வழக்கம் போல சிறப்பாக வீச, இராண்டாவது பந்தில் ப்ராவோ விக்கெட்டையும் எடுத்தார். அதுவரை பும்ராவின் ஓவரில் ஒரு பௌண்டரி கூட அடிக்கவில்லை சென்னை. ‘என்னடா, பும்ரா ஓவரில் உங்களுக்கு, பௌண்டரி அடிக்க தெரியலை, என்னைப் பார்த்துக் கத்துக்கோங்க’ என டி’காக் கைக்கு வந்த ஓவரின் கடைசி பந்தை அழகாக க்ளெவ்ஸில் தட்டி சென்னைக்கு நாலு ரன் பைஸில் பெற்று தந்தார்.

கடைசி ஒவரில் சென்னைக்கு 9 ரன் தேவைப்பட்டது. ரோஹித் மறுபடியும் கான்ட்ராக்டர் நேசமணி மோடுக்குப் போய் மாலிங்காவிடம் பந்தைத் தந்தார். தன் முந்தைய ஓவரின் கடைசி பந்து தந்த படிப்பனை காரணமாக, ஓவர் -த- விக்கெட்டில் போடாமல், அரெளண்ட் – த – விக்கெட்டில் போட்டார். முதல் பாலில் வாட்சன் ஒரு ரன் எடுக்க, அடுத்த பாலில் ஜடேஜா ஒரு ரன் எடுக்க, மூன்றாவது பந்தில் வாட்சன் ரெண்டு ரன் எடுக்க, கடைசி மூன்று பந்தில் ஐந்து ரன்கள் தேவைப்பட்டது.

அப்பொழுது வாட்சனுக்குத் திரும்பவும் முதல் பஸ் ஞாபகத்திற்கு வர, நாலாவது பந்தில் ரெண்டாவது ரன்னுக்கு ஓடி, ரன்-அவுட்டானார். கூட ஓடின ஜடேஜாவது, ‘இன்னும் ரெண்டு பந்து தான், கண்டிப்பா முதல் பஸ்ஸைப் பிடிச்சிடலாம்’ எனச் சொல்லியிருக்கலாம். So sad.

இரண்டு பந்தில் நாலு ரன் தேவைப்பட, தாக்கூர் ஐந்தாவது பந்தில் ரெண்டு ரன் எடுக்க, கடைசி பந்தில் இரண்டு ரன் தேவைப்பட, ஊர் சபை கூடி விவாதிக்க ஆரம்பிக்க, முதல் வேலையாக டி’காக் கீப்பிங் க்ளெவ்ஸை கழட்ட சொல்லி விட்டார்கள். ‘க்ளெவ்ஸ் இருந்தால்தானே தட்டிவிட்டு பைஸ் கொடுப்பே? இப்ப என்ன பண்ணுவே! என்பது போல் இருந்தது அவர்களின் ராஜதந்திரம்.

ஒரு பக்கம் நீத்தா அம்பானி பூஜை பண்ண, மறுபுறம் சாக்ஷி தோனி ராசி கல் மோதிரத்தை உருட்ட, இன்னொரு புறம் ரித்விகா ரோஹித் விரல்களைக் கன்னாபின்னாவென மடக்கிப் பிரார்த்திக்க..

மாலிங்கா கடைசி பந்தை வீச..

அது நேராக தாக்கூரின் காலில் பட..

மாலிங்கா LBW கேட்க..

நடுவர் ஒற்றை விரலை உயர்த்த..

மும்பை இறுதியாட்டத்தில் இரண்டாவது முறையாக ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, நாலாவது முறையாக சாம்பியன் மகுடம் சூடியது.

சோ வாட்? வெற்றியோ, தோல்வியோ கடைசி ஓவரின் கடைசி பந்து வரை மேட்ச்சினைக் கொண்டு செல்லும் சி.எஸ்.கே.வின் கதாவில் என்றுமே சுவாரசியத்திற்குப் பஞ்சம் இருந்ததில்லை. மலிவாக, சுவாரசியத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டிராமல், இவ்வுலகிற்கு இரண்டு தமிழ்ப் புலவர்களைக் கொடுத்த சி.எஸ்.கே. அணியின் கதா, வருங்காலத்திற்குப் படிப்பிணையாக விளங்கும் ஒரு காவியம் என்றால் அது மிகையில்லை.

– இராஜேஷ் ஜெயப்பிரகாசம்