Shadow

அசோக் அமிர்தராஜ் – ஐ.நா.வின் இந்திய நல்லெண்ணத் தூதர்

Ashok Amritaraj as UN ambassador

இந்தியாவில் நீடித்த வளர்ச்சி திட்டங்களுக்கான இந்தியாவின் நல்லெண்ணத் தூதராக, பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளரும், சர்வதேச விம்பிள்டன் டென்னிஸ் வீரருமான அசோக் அமிர்தராஜ் ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்டுள்ளார். ஹைட் பார்க் எண்டர்டெய்ன்மெண்ட் குழுமத்தின் தலைவராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருக்கும் திரு. அமிர்தராஜ், ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்ட இந்தியாவின் முதல் தூதர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல், இப்பெருமையினைப் பெறும் முதல் திரைப்படத் தயாரிப்பாளர் என்பதும் அவருக்குக் கிடைத்துள்ள கூடுதல் அங்கீகாரம்.

சென்னையில் பிறந்து, சர்வதே அளவில் புகழ்பெற்ற தயாரிப்பாளரான அஷோக் அமிர்தராஜ் தனது 30 வருட திரையுலக வாழ்வில் 100க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்துள்ளார். அவரது வெற்றிகரமான திரை வாழ்க்கையில் உலகளாவிய பாராட்டுகளையும், 2 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான வசூலையும் அவர் படங்கள் பெற்றுள்ளன. இந்தியாவையும், ஹாலிவுட்டையும் திரைப்படம் மற்றும் ஊடகம் மூலமாக இணைப்பதில் முன்னோடியாக இருந்தவர் அமிர்தராஜ்.

இந்தக் கெளரவத்தை ஏற்றுக்கொண்ட திரு. அமிர்தராஜ் பேசியபோது, “நீடித்த வளர்ச்சி திட்டங்கள் குறித்த விழிப்புணர்வினை அதிகரிக்க, இந்தியாவில் ஐக்கிய நாடுகள் சபையில் பணியாற்றுவதை ஆர்வமுடன் எதிர்நோக்குகிறேன். நான் பிறந்த தேசத்துக்காக சேவை செய்யவும், ஊடகத்தின் சக்தியைக் கொண்டு சமூகத்துக்குத் தேவையான பலவகையான விஷயங்களை உருவாக்கவும் எனக்குக் கிடைத்த அற்புதமான வாய்ப்பு இது. “

திரு.அமிர்தராஜை ஐக்கிய நாடுகள் சபை குடும்பத்துக்கு வரவேற்ற குடியுரிமை ஒருங்கிணைப்பாளர் யூரி அஃபானாசேவ் பேசுகையில், “நீடித்த வளர்ச்சி திட்டங்களை வீரியத்துடன் பரிந்துரைக்க திரு.அமிர்தராஜுடன் சேர்ந்து பணியாற்றுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். மேலும், இந்தியாவில் வளர்சிக்கான சவால்களை எதிர்கொள்ள புதிய கண்டுபிடிப்புகளையும், நவீன தீர்வுகளையும் தருவதில் அவருடைய ஆதரவையும் எதிர் நோக்குகிறோம்” என்றார்.

செப்டம்பர் 2015, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில், 193 நாடுகள் உலகளாவிய லட்சியம் ஒன்றை ஏற்றுக்கொண்டனர். அது 2030 நீடித்த வளர்ச்சிக்கான திட்டம். மக்களுக்கான, உலகுக்கான, செழிப்புக்கான, அமைதிக்கான ஒரு செயல் திட்டம் அது. இந்த லட்சியத்தை வடிவமைப்பதிலும், அதன் வெற்றியிலும் இந்தியாவின் பங்கு முக்கியமானது.

நீடித்த வளர்ச்சி திட்டங்கள் அடுத்த நிலைக்குச் செல்ல, அரசாங்கம், அமைப்புகள் என சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் ஆக்கப்பூர்வமான உரையாடலை நடத்துவது அவசியம். நீடித்த வளர்ச்சித் திட்டங்களின் லட்சியத்தை 2030க்குள் அடைய ஐக்கிய சபையின் நல்லெண்ணத் தூதர்கள் வேகம் மற்றும் அர்ப்பணிப்பை உருவாக்க முயற்சி செய்கின்றனர். மேலும், இதில் புதிதாக இணைபவர்களுக்கு ஈடுபாட்டையும் உருவாக்குகின்றனர்.

சமூக மாற்றத்துக்கு ஊடகத்தின் சக்தியைப் பயன்படுத்த முடியும் என்பதில் அதிக நம்பிக்கை கொண்ட திரு.அமிர்தராஜ், ’சான்ஸ் ஆஃப் அ லைஃப்டைம் (Chance of a Lifetime)’ என்கிற தொலைக்காட்சி தொடரைத் தயாரித்து வழங்கினார். இதில், நீர், எய்ட்ஸ், பாலின சமத்துவம், குடிபெயர்தல் மற்றும் கல்வி குறித்து இளம் இயக்குநர்கள் படம் எடுத்துப் போட்டியிட வாய்ப்புத் தரப்பட்டது. இதன் வெற்றியாளர்க்ள் கான்ஸ் திரைப்பட விழாவில் கெளரவிக்கப்பட்டனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் மாற்றத்துக்கான இளைஞர்கள் கூட்டத்தில், திரு. அசோக் அமிர்தராஜ், ஐக்கிய நாடுகள் சபையின் குடியுரிமை ஒருங்கிணைப்பாளர் திரு. யூரி அஃபானாசேவுடன் கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளார்.