
19வது ஆசிய ஸ்குவாஷ் சேம்பியன்ஷிப் போட்டி, மூன்றாம் முறையாகச் சென்னையில் நிகழ்கிறது. இப்போட்டியை, ஸ்குவாஷ் ரேக்கட்ஸ் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா மற்றும் ஏஷியன் ஸ்குவாஷ் ஃபெடரேஷனுடன் இணைந்து, தமிழ்நாடு ஸ்குவாஷ் ரேக்கட்ஸ் அசோசியேஷன் நடத்துகிறது. இதற்கு முன்னர், இப்போட்டி 2002இலும், 2010இலும் சென்னையில் நடந்துள்ளது.
ஸ்குவாஷ் போட்டியை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும், ஸ்குவாஷைப் பிரபலப்படுத்தவும், ஆசிய ஸ்குவாஷ் சேம்பியன்ஷிப் போட்டியைச் சென்னை ராயப்பேட்டையிலுள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடத்துகின்றனர். இன்று முதல் 30 ஆம் தேதி வரை 5 நாட்கள் போட்டிகள் நடக்கவுள்ளன. ஏற்கெனவே, 2011 இனாகரல் உலகக் கோப்பையையும், 2012 U-21 உலகக் கோப்பையையும் எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அப்பொழுது மக்கள் மத்தியில் கிடைத்த ஆரவார வரவேற்பினை மனதில் கொண்டே, மதிய வேளையில் காலிறுதிப் போட்டிகளை மாலின் மத்தியில் இம்முறை நடத்துகின்றனர். உலகக் கோப்பை போட்டிகள் நடத்தப்பட்டிருந்தாலும், ஆசிய ஸ்குவாஷ் சேம்பியன்ஷிப் போட்டி, மக்கள் மத்தியில் மாலில் நடப்பது இதுவே முதல் முறை. இதற்காக, கண்ணாடி கோர்ட்டினை மாலின் மத்தியில் அழகுற வடிவமைத்துள்ளனர்.
ஹாங் காங், மலேஷியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் என 12 நாடுகள் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளன. இந்தியா சார்பாக செளரவ் கோஷல், ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பலிகல் (கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் மனைவி), விக்ரம் மல்ஹோத்ரா, மகேஷ் மங்கோன்கர், ஹரிந்தர் பால் சந்து, வேலவன் செந்தில்குமார், சாச்சிகா இங்கலே, சுனன்யா குருவில்லா, ஊர்வசி ஜோஷி, லக்ஷ்யா ஆகியோர் கலந்து கொள்கின்றனர். ஜோஷ்னா சின்னப்பா, மூன்று முறை அரையிறுதிப் போட்டிக்குத் தேர்வாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும், 1996இல் மிஷா க்ரெவல் என்பவர் பெற்ற வெள்ளிப் பதக்கம் தான் இந்தியா சார்பில் விளையாடப்பட்ட சிறந்த போட்டியாக உள்ளது.
ஹாங் காங்கைச் சேர்ந்த ஆன்னி அவ்-வும், மேக்ஸ் லீ-யும் தான் மிரட்டும் போட்டியாளர்கள். பாகிஸ்தான் விளையாட்டு வீரர்கள் இம்முறை கலந்து கொள்ளவில்லை. விசா கிடைக்கவில்லை எனக் காரணம் சொல்லப்பட்டாலும், அவர்களிடமிருந்து, கலந்து கொள்வது குறித்து எந்த மின்னஞ்சலும் ஏஷியன் ஸ்குவாஷ் ஃபெடரேஷனுக்கு வரவில்லை.
வாய்ப்புள்ளவர்கள், எக்ஸ்பிரஸ் அவென்யூவிற்குச் சென்று விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். கிரிக்கெட்டில் இருந்து மெல்ல மற்ற விளையாட்டிலும் திசை திரும்பும் இந்த ஆரோக்கியமான நேரத்தில், இந்தியா ஆசிய ஸ்குவாஷ் சேம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்ல மனதார வாழ்த்துகிறோம்.