Shadow

பாபா பிளாக் ஷீப் விமர்சனம்

புட் சட்னி யூ-டியூப் சேனல் மூலம் பிரபலமான ராஜ்மோகனும், ப்ளாக் ஷீப் யூ-டியூப் சேனல் குழுவினர் மொத்த பேரும் இணைந்து இப்படத்தை உருவாக்கியிருப்பதாலோ என்னவோ மொத்த படமும் ஒரு யூ-டியூப் வீடியோ பார்க்கும் உணர்வையே ஏற்படுத்துகிறது. இப்படத்தை ராஜ்மோகன் இயக்கி ஒரு காட்சியில் நடித்தும் இருக்கிறார்.

மாணவர்கள் தற்கொலை எண்ணத்தை மனதில் வளர்த்துக் கொள்ளக்கூடாது. எதுவாக இருந்தாலும் மனம் விட்டுப் பேச வேண்டும் என்பது தான் பத்தின்ட கரு. ஆனால் இந்தக் கருத்தை சொல்வதற்கான கதையோ, திரைக்கதையோ படத்தில் இருக்கிறதா என்றால் சுத்தமாக இல்லை என்பதே நிதர்சனம்.

2k கிட்ஸ்களைச் சந்தோசப்படுத்துவதற்காகவே படம் எடுத்தது போல் இருக்கிறது. அவர்களுக்கு அட்வைஸ் என்றால் பிடிக்காது, சீரியஸ்னஸ் என்றால் ஆகவே ஆகாது, செண்டிமென்ட் என்றால் கிரிஞ்ச் என்பார்கள். அவர்களுக்கு ஜாலியாக இருப்பது மட்டுமே பிடிக்கும். ஆனாலும் அவர்கள் மிகுந்த பொறுப்புள்ளவர்கள் என்பது போன்ற பொய்யான இன்றைய இளைஞர்களை குளிர்விக்கும் சமூகப் பொறுப்பற்ற போற்றுதல்களை பாடிப் பாடியே அவர்களைச் சீரழிக்கும் ஒரு வேலையை இந்த சமூகம் தெரிந்தே செய்கிறதா இல்லை தெரியாமல் செய்து கொண்டிருக்கிறதா என்று தெரியவில்லை.

திரைப்படங்களை வெறும் திரைப்படங்களாக பாருங்கள், இவை பொழுதுபோக்குக்காக எடுக்கப்படுபவை என்றெல்லாம் சப்பை கட்டு கட்டக்கூடாது. அப்படி பொழுதுபோக்கிற்காகத் தான் நீங்கள் படம் எடுக்கிறீர்கள் என்றால் அதில் ஏன் கருத்துக்களைச் சொல்கிறீர்கள். படம் முழுக்க இரு கேங்குகளாக பிரிந்து நின்று ஈனத்தனமான காரணங்களுக்காக அடித்துக் கொள்ளும் பள்ளிக்கூட மாணவர்கள் தான் இப்படத்தின் நாயகர்கள். படத்தின் இறுதியில், ‘எங்கள் பெற்றோரோ நண்பர்களோ ஆசிரியர்களோ இல்லை இந்தச் சமூகமோ எங்களை புரிந்து கொள்ளவில்லை, எங்களின் வலி யாருக்கும் தெரியாது’ என்று கண் கசக்கிக் கொண்டு தற்கொலைக்கு முயலும் இந்த நாயகர்களைக் கண்டு பார்வையாளர்களுக்கு எப்படி பச்சாதாபம் எழும்?

இன்றைய கல்விச்சூழல் மாணவர்களுக்கு உகந்ததாக இல்லாமல் அவர்களைப் பெரும் மன உளைச்சலில் தள்ளுகிறது. இதனால் தான் அவர்களின் தற்கொலை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது என்பது தான் படம் சொல்ல வரும் கருத்தாக இருந்தால், அதை உணர்த்துவதற்கான ஒரு துண்டு காட்சி கூடப் படத்தில் இல்லை.

ஏற்கெனவே பான்பராக் போட்டுக் கொண்டு பட்டாக்கத்திகளுடன் பொது இடங்களில் கோஷ்டி மோதல் புரிந்து கொண்டு, பேருந்துகளில் ரூட்டு தல என்ற பெயரில் பச்சிளம் குழந்தைகளைக் கூடப் பாடாய்படுத்திக் கொண்டு இருக்கும் இந்த இளம் தலைமுறை மாணாக்கர்களுக்கு, இந்தப் படத்தின் நாயகர்கள் என்ன சொல்ல முனைகிறார்கள். கூத்தடியுங்கள், கோஷ்டி சேருங்கள், பெற்றோரையும் மற்றோரையும் குறைகூறுங்கள் என்பதைத்தானோ? ‘பெற்றோரைக் குறை கூறாதீர்கள்’ என்ற அம்மு அபிராமியின் வசனத்திற்கு எந்தப் பொருளும் இல்லாமல் நீர்த்துப் போகச் செய்துள்ளது இலக்கற்ற திரைக்கதை.

பெற்றோர்கள் கூலி வேலை செய்தோ, வீட்டில் இருக்கும் நகை, பாத்திரைங்களை அடமானம் வைத்தோ இல்லை லோன் வாங்கியோ பிள்ளைகளை எப்படியாவது படிக்க வைத்துவிட்டால் போதும் என்று நாடெங்கும் போராடிக் கொண்டிருக்க, ‘படிப்பு ஒரு பாவச்செயல், படிப்பு ஒரு பெருங்குற்றம், படிப்பு ஒரு மனிதத்தன்மையற்ற செயல்’ என்கின்ற ரேஞ்சில் தடம் புரளுகின்றது இயக்குநரின் மாணவர்களின் மீதான அக்கறை.

மாணவர்களின் தற்கொலையையோ, இல்லை கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்குப் பின் இருக்கும் மர்மத்தையோ எதையுமே இத்திரைப்படம் உருப்படியாக மட்டுமல்ல ஓரளவிற்கு கூடப் பேசவில்லை என்பதே உண்மை. இப்படத்தில் இருப்பதெல்லாம் நகைச்சுவை என்ற பெயரில் பேசப்படும் வறட்சியான வசனங்களும், கோஷ்டி மோதலும், கேலிக்கூத்துகளும், மாணவர்கள் தற்கொலை செய்யக்கூடாது என்று கருத்து சொல்லப்பட்டிருக்கிறதோ என்கின்ற பாவனையும் தானே அன்றி வேறொன்றும் இல்லை.

ஒரு படம் நல்ல கருத்தைச் சொல்கிறது என்பதாலேயே அது ஒரு படமாகவோ இல்லை நல்ல படமாகவோ ஆகிவிடாது என்பதை நிரூபிப்பதற்காகவே வந்திருக்கும் சமீபத்திய வரவு தான், இந்த ‘பாபா ப்ளாக் ஷீப்’ திரைப்படம்.

– இன்பராஜா ராஜலிங்கம்