Shadow

பக்ரீத் விமர்சனம்

Bakrid-review

பக்ரீத் கொண்டாட்டத்திற்காக ஒட்டகம் ஒன்றை வாங்குகிறார் மீஞ்சூர் பாய். அந்த தாய் ஒட்டகத்தோடு, குட்டி ஒட்டகமும் ஒட்டிக் கொண்டு வந்து விடுகிறது. குட்டியை என்ன செய்ய என பாய் யோசிக்கும் பொழுது, ரத்தினம் அதை தான் வளர்ப்பதாகச் சொல்லி வாங்கிக் கொள்கிறான். அந்த ராஜஸ்தான் ஒட்டகத்திற்கும், அதை அன்பாக வளர்க்கும் விவாசய பின்புலம் கொண்ட தமிழ்க் குடும்பத்திற்கும் இடையே உருவாகும் பிணைப்பும், அதைப் பிரிய நேரும் பொழுதும் எழும் துயரும் தான் படத்தின் மையக் கரு.

பெட்டிக் கடைகளுக்கு மிக்சர், முறுக்கு, வற்றல் முதலிய நொறுக்குத் தீனிகளை சப்ளை செய்பவராக தினேஷ் பிரபாகர் நடித்துள்ளார். மலையாள நெடியுடன் பேசும் அவர், நாயகனின் உற்ற நண்பராக நடித்துள்ளார். சின்னச் சின்ன உடல் அசைவுகளிலும், முக பாவனைகளிலும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மிகச் சிறந்த குணசித்திர நடிகராகப் பரிணமிக்கக் கூடிய அனைத்து லட்சணங்களும் பெற்றவர் என்பதைத் தான் வரும் எல்லா ஃப்ரேமிலும் நிரூபித்துள்ளார்.

கீதா எனும் பாத்திரத்தில் கதாநாயகியாக வசுந்தரா நடித்துள்ளார். படத்தின் அழகு, எல்லாக் கதாபாத்திரங்களுமே தனித்த அடையாளத்துடனும் குணத்துடனும் இருப்பதே! படத்தில் வில்லன் என்று யாருமில்லை. மாடுகளைக் கடத்தும் லாரியைப் பிடித்து வைத்துக் கொண்டு காவி அரசியல் செய்யும் காலித்தனமான ஆட்கள் படத்தில் உண்டென்றாலும், அவர்களும் மாடுகளை வதையில் இருந்து தடுத்து கோஷாலாவிற்கு அனுப்பி வைப்பவர்களாகவே உள்ளனர். கடத்தியவர்களை நையப்புடைத்தாலும், பெரிய மனது பண்ணிக் கொல்லாமல், போலீஸிடம் மாடு கடத்தும் ஆட்களை ஒப்படைக்கிறார்கள். சற்றே மூர்க்கத்துடன்.

இப்படி படம் முழுவதும், அனைத்துப் பாத்திரங்களுமே அன்பால் இணைக்கப்பட்டுள்ளனர். ஆனால், நாயகனின் பயணத்தில் இடைஞ்சலை ஏற்படுத்த வேண்டுமெனத் திணிக்கப்பட்ட காட்சியாக, முயல் வேட்டைக்கு நாட்டுத் துப்பாக்கியுடன் வரும் சிறுவர்களின் காட்சியுள்ளது. காவிக்கும் கருணை காட்டிய இயக்குநர் ஜெகதீசன் சுபு, மகாராஷ்ட்ரா சிறுவர்களுக்குக் காட்டாமல் போனது துரதிர்ஷ்டம். சல்மான் கான் போன்று அச்சிறுவர்கள் பண பலமும், வேட்டை இச்சையும் உடைய நபர்கள் இல்லை. இந்தியாவிலேயே அதிக விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட மஹாராஷ்ட்ராவைச் சேர்ந்தவர்கள். அந்தக் காட்சியில் சித்தரிக்கப்படுவது போல், வயிற்றுப்பாட்டிற்காக ஒட்டகத்தைக் கொல்லுமளவு துணியமாட்டார்கள். இதற்கே படம் விவசாயத்தைத் தூக்கிப் பிடிக்கிறது. அதுவும் எப்படியென்றால், ‘நான் பிரியாணி போட்டால் நூறு பேர் தான் சாப்பிடுவாங்க; நீங்க விவசாயம் பண்ணால் பல ஆயிரம் பேர் சாப்பிடுவாங்க’ எனச் சகிக்க முடியாத ஒப்பீட்டை வசனமாகப் பேசி ஃபீல் செய்கிறார் மீஞ்சூர் பாய்.

நண்பனுக்காகத் தோள் கொடுக்கும் தினேஷ் பிரபாகரின் நட்பு கவர்ந்ததைப் போல, மனைவியின் தொல்லை தாங்காமல் ஒட்டகத்தை நாற்பதாயிரத்துக்கு விற்க நினைக்கும் தமிழ் தெரியாத ஓட்டுநர் வீரேந்தரும், அவரது தமிழ் தெரிந்த க்ளீனருமான திவாரியும் ரசிக்க வைக்கின்றனர். ஒட்டகத்தின் மீது நாயகன் கொண்டுள்ள அன்பைப் புரிந்து கொண்டு மதிக்கும் அவர்கள், பிரச்சனையின் பொழுது அவனுக்குத் துணையாக உடன் நின்று உதவப் பார்க்கிறார்கள். வீரேந்தராக ரோகித் பதக்கும், திவாரியாக மோக்லியும் தங்களது நடிப்பால் மனதில் நிற்கிறார்கள். வட இந்தியர்கள் என்றாலே முகத்தைச் சுருக்கும் போக்கு உடையவர்களுக்கும், அவ்விரு பாத்திரங்களை மிகவும் பிடிக்கும்.

நாயகன் ரத்தினமாக நடித்துள்ள விக்ராந்திற்கு இது முக்கியமான படம். தன் இருப்பை மிக அழுத்தமாகத் திரையில் பதிந்துள்ளார். ஒட்டகத்தை வளர்க்கவேண்டும் என்று எந்தப் புள்ளியில் ரத்தினத்திற்குத் தோன்றியது என சரியாகப் பதியப்படவில்லை. மகளுக்குப் பிடிக்கும் என்ற காரணம் ஏற்புடையதாக இருந்தாலும், ஒரு சாமானியனுக்கு எழாத விசித்திரமான ஆசை அது. ஒட்டகம் என்ன சாப்பிடும் என்ற அடிப்படைத் தேடுதலைக் கூடச் செய்யாதவராகவும் உள்ளார். ஒட்டகத்தை நோக்கி அவர் ஓடும் பொழுதெல்லாம், பிதாமகன் விக்ரமின் சாயல் தெரிகிறது. வயலில் இறங்கி வேலை செய்யும் ரத்தினத்தின் உடல்மொழியோ வேறு போல் இருக்கிறது. இமானின் இசையில், சித் ஸ்ரீராமின் குரலில் மனதை வருடும் ‘ஆலங்குருவிகளா எங்க வாசல் வருவிகளா’ என்ற அற்புதமான பாடலே அதற்குச் சான்று.

ஒட்டகத்தின் கழுத்தை வாஞ்சையோடு கட்டிப் பிடித்துக் கொள்ளும் காட்சியில் எல்லாம், அந்தப் பாசத்தை முகத்தில் அழகாக வழிய விட்டுள்ளார். எனினும் ஒட்டகத்திற்கும், இவருக்குமான எமோஷ்னல் பாண்டிங்கை இன்னும் வலுவாகக் காட்டியிருக்கவேண்டும். ஓவர் ஆல் கதையிலுள்ள வித்தியாசமும் மாறுபட்ட கோணமும், திரைக்கதையின் ஆழத்தில் மேலும் பலப்படவில்லை. இன்னல்கள் பல வந்தாலும், ரத்தினத்தைச் செலுத்தும் உந்துசக்தியே அதுதான். விக்ராந்தின் மகளாக நடித்திருக்கும் ஷ்ருத்திகா செம க்யூட். வசுந்தரா, ஒட்டகத்தைத் தேடும் தன் மகளைச் சமாதானப்படுத்தும் காட்சி, விக்ராந்த், மகளின் கவனத்தைத் திசை திருப்பி விளையாட்டில் ஆர்வம் கொள்ள வைக்கும் காட்சியெல்லாம் எதார்த்தமாய் அழகாக உள்ளன.

ஒட்டகத்தோடு ராஜஸ்தான் வரைக்குமான பயணம் என்பது பல சிக்கல்களும் சவால்களும் நிறைந்தது. அதிலுள்ள நடைமுறை சிக்கல்கள்களில் திரைக்கதை கவனம் கொள்ளாமல், ஒட்டகத்துடன் யாராவது செல்ஃபி எடுத்தால் கூட, ஹோட்டலில் இருந்து சாப்பிடாமலே எழுந்து ஓடும் பதற்றசாலியாக உள்ளார் ரத்தினம். இரண்டாம் பாதியின் டீட்டெயிலிங் குறைபாடால், ஒரு பெரும்பயணத்திற்குச் சாட்சியாக இருந்தோம் என்ற திருப்தி கிடைக்காமல் போகிறது. அதை சாமர்த்தியமாக, தன் ரசனையான ஷாட்ஸ்களால் மறக்கடிக்கிறார் ஒளிப்பதிவும் செய்துள்ள இயக்குநர் ஜெகதீசன் சுபு.

படத்தின் இன்னொரு அழகான காட்சி, தம்பியின் பெயரைக் கேட்டாலே எரிந்து விழும் அண்ணன், தம்பியின் வயலில் பயிர்கள் வாடுவதைக் கண்டதும், தன் பகைமையை மறந்து, அவர் செய்யும் காரியமே! சுவாரசியக் குறைபாட்டையும் மீறி, தலைப்பிற்கு நியாயம் செய்வது போல் அன்பாலும் தியாகத்தாலும் நிறைந்துள்ளது படம்.