Search

பிக் பாஸ் 3: நாள் 58 – ‘நம்ம பிள்ளைங்க எல்லாம் பயங்கரம்!’ – பிரின்சிபல் சேரன்

bigg-boss-3-day-58

‘தினமும் அடிஷனல் ஷீட் வாங்கி அனாலிஸிஸ் எழுதறேனே, ஒரு நாள் பிரேக் குடுங்க’ என நான் கதறினது யாருக்குக் கேட்டதோ இல்லையோ, பிக் பாஸ்க்குக் கேட்டிருக்கும் போல! ஒளிபரப்பினாங்க பாருங்க ஒரு மொக்கை எபிசோட்டை!!

‘அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்’ பாடலுடன் தொடங்கியது நாள். அது என்ன மாதிரியான சிச்சுவேஷனுக்கு இருக்கற பாட்டு, அதைக் கொண்டு வந்து இங்கே போடவேண்டுமா? ஆனால் இந்த ஸ்கெட்ச் யாருக்கென்று தான் தெரியவில்லை.

எல்லோரும் கிண்டர்கார்டன் குழந்தைகளாக மாறி ஒரு ஸ்கூல் டாஸ்க் ஆரம்பித்தது. பஸ்ஸர் அடித்ததிலிருந்து எல்லோரும் கதபாத்திரமாகவே மாறிவிட்டனர். சாண்டி, தர்ஷன், லாஸ், ஷெரின் 4 பேருமே நல்ல பெர்ஃபாமன்ஸ்.

சேரன் தான் பிரின்சிபல். உடம்பு சரியில்லையோ என்னவோ, ரொம்ப சோர்வாக இருந்தார். மேலும், இன்று என்ன ஏழரை நடக்கப் போகுதோ என்கிற பீதி அவர் கண்களில் தெரிந்தது. அவருக்கு ஒன்றும் பெரிய வேலை இல்லை. கஸ்தூரி தான் டீச்சர். சும்மா சொல்லக்கூடாது. அந்த வேஷத்துக்கு உண்டான நியாயத்தைச் செய்தார். ஆனால் அது எல்லாமே ஒரு சின்ன மொமென்ட்ல சிதறிப்போய்விட்டது.

வாத்து பாடலைப் பாட வனிதாவைக் கூப்பிட்டவர், “வாத்து, வாத்து பாடலைப் பாட வனிதாவை கூப்பிடறேன்” எனச் சொன்னதில், வனிதா டென்சன் ஆனார். அப்பவே, “கஸ்தூரி டீச்சர். என்னை வாத்துன்னு கூப்பிட்டாங்க” என கேரக்டரில் இருந்து கொண்டே பஞ்சாயத்தை ஆரம்பித்தார். சாண்டி, தர்சன், லாஸ் எல்லோரும், ‘நான் பார்த்தேன்’ என சாட்சி சொல்ல, முதலில் மறுத்த கஸ்தூரி, வாத்து என்கிற வார்த்தையை இரண்டு தடவை பயன்படுத்தினதை ஒத்துக் கொண்டார்.

வனிதாவைக் கூப்பிட்டு விசாரித்த சேரன், ‘க்ளாஸ் முடியற வரைக்கும் வெயிட் பண்ணுங்க. நாம பேசலாம்’ என வனிதாவிடம் சொன்னார். இரண்டு நிமிஷம் அதைக் கேட்டு அமைதியாக இருந்த வனிதா, அப்புறம் கேரக்டரில் இருந்து வெளியே வந்து கத்த ஆரம்பித்தார். கேப்டன் ஷெரின் சொல்லியும் கேட்கவில்லை. கஸ்தூரி விளக்கம் கொடுத்தாலும், புண்படுத்திருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகச் சொல்லி வகுப்பைத் தொடர்ந்தார்.

வெளியே வந்த உடனே மறுபடியும் பிரச்சினை. தான் கலாய்த்ததை ஒத்துக் கொண்டார் கஸ்தூரி. அதற்கு மேல் விளக்கம் கொடுக்கவோ, கேட்கவோ என்ன இருக்கெனத் தெரியவில்லை? லிவிங் ரூமில் அதைப் பற்றி கஸ்தூரி ஒரு ஸ்பீச் கொடுக்க, அந்தப் பக்கமாக வந்த வனிதா, ‘சாத்தானே அப்பாலே போ’ எனச் சொல்லிவிட்டுப் போனார்.

வெளியே சேரன், கேப்டன் ஷெரினிடம், வனிதாவும் கஸ்தூரியும் நடந்துகொண்டது தவறெனச் சொல்லிக் கொண்டிருந்தார். பெஸ்ட் பெர்ஃபாமன்ஸ் பற்றிக் கேட்கும் போது இதெல்லாம் ஞாபகம் வைத்துக் கொண்டு சொல்லுங்க என இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுத்துக் கொண்டிருந்தார். ஷெரின் கேப்டனானது அவருக்கு ரொம்பவே ஆறுதலாக இருக்கும். அட்லீஸ்ட் அவர் பேசுவதைக் கேக்கக் கூடிய ஒரே ஆள் இப்போதைக்கு கேப்டன் ஷெரின் மட்டும் தான்.

பின், மீண்டும் ஒரு டாஸ்க். ஸ்கூல், காலேஜ் நாட்களில் அவரவர் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான விஷயங்களைப் பகிரவேண்டும். இதிலேயும், சாண்டியும், கேப்டன் ஷெரினும் தான் பெஸ்ட். சாண்டி சொன்னது மட்டும் தான் சிரிக்க முடிந்தது. 5 வது படிக்கும் போதே, ‘ஐ லவ் யூ’ சொல்லி அடிவாங்கினதைச் சொல்லி, அவரே சிரித்துக் கொண்டார் கவின். இதற்கு யாராவது பொங்கல் வைப்பாங்களா?

9 வது படிக்கும் போதே தன் மேலே வந்த அட்டன்ஷன், தனக்கு வந்த காதல் கடிதங்கள் பற்றியும், வார்த்தையில் பேசிக்காமல், பார்வையிலேயே பேசின கதையும் கேப்டன் ஷெரின் சொன்னார். ஒரு வழியாக மொக்கை முடிவுக்கு வந்தது.

மகாதேவன் CM