Shadow

பயமா இருக்கு விமர்சனம்

Bayama irukku movie review

பேயென்றால் ஜெய்க்கு பயம். ஆனால், அவன் மனைவி லேகாவே பேய் தானெனத் தெரிய வருகிறது. பின் என்னாகிறது என்பது தான் படத்தின் கதை.

கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் அறிமுகமான சந்தோஷ் பிரதாப், இப்படத்தில் ஜெய்யாகப் பிரதான வேடமேற்று நடித்துள்ளார். ஜெய்யின் மனைவி கர்ப்பமாக உள்ள சமயத்தில், மனைவியின் அம்மா உதவியாக இருப்பாரென அவரைத் தேடி இலங்கைக்குப் பயணமாகிறான் ஜெய். ‘பயமா இருக்கு’ என்ற தலைப்புப் போடப்பட்ட பின், படம் இலங்கையில் தான் தொடங்குகிறது. சின்ன அத்தியாயமாக அது இருந்தாலும், மனதில் இனம் புரியாத ஓர் அச்சம் கவ்வுவதைத் தவிர்க்க முடியவில்லை. அங்குள்ள குழப்பமான போர்ச் சூழலால், ஜெய் இந்தியா திரும்ப நான்கு மாதம் ஆகிவிடுகிறது. லேகாவாக ரேஷ்மி மேனன் நடித்துள்ளார். படத்தில் இவர் தான் பேய். ஆனால், மிஷ்கினின் ‘பிசாசு’ படத்தில் வருவது போல், தேவதை அம்சம் பொருந்திய பேய் என்பது ஆறுதலான விஷயம்.

படத்தின் பிரதான கரு எனப் பார்த்தால் அது “பயம்” தான். அந்தப் பயத்தைப் படம் முழுவதும் சுமப்பது, நாயகனின் நண்பர்களாக வரும் மொட்டை ராஜேந்திரன், ஜெகன், ‘லொள்ளு சபா’ ஜீவா, ‘பிக் பாஸ்’ பரணி ஆகியாரே! படத்தின் நாயகன் என்று கூட ஜெகனைச் சொல்லலாம். லேகா இறந்துவிட்டாள் எனக் கண்டுபிடிக்கும் காட்சியில் இருந்து, பயத்தையும் படத்தையும் சுமப்பது அவர் தான். ‘யார் பேய்?’ எனக் கடைசி வரை யாரேனும் ஒருவர் மீது சந்தேகப்பட்டுக் கொண்டே இருக்கிறார். பேயிடமிருந்து நண்பனைக் காப்பாற்றும் அவரது தவிப்புத்தான் திரைக்கதை.

‘டெவில் தேவிகா’வாகக் கோவை சரளாவைப் பலமான பில்டப்புகளுடன் அறிமுகப்படுத்துகின்றனர். ‘கோஸ்ட் கோபால் வர்மாவை விட நல்ல பேய் ஓட்டுவாங்க போல!’ என ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் கோவை சரளாவைப் பார்த்து வியக்கிறார். க்ளைமேக்ஸ்க்கு முந்தைய காட்சியில் அதகளப்படுத்தியுள்ளார் சரளா. அவர் பேயை விரட்டத் தீவிரம் காட்டும் வேளையில், நண்பர்கள் நால்வரும் சொதப்புவது நல்ல காமெடி.

படகுத்துறையுடன் நீர் நிலையை ஒட்டியுள்ளது நாயகனின் வீடு. படத்தின் முதல் ஃப்ரேமே, மார்த்தாண்டத்தில் இருக்கும் அந்தப் பொறாமை கொள்ள வைக்கும் அழகான வீட்டில் தான் வைக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டைக் கொண்டே, ‘பயமா இருக்கு’ என டைட்டில் போடுகின்றனர். அதன் பின் கதாபாத்திரங்களின் பெயர்களை மிக ரசனையுடன் ஒரு கவிதை போல் திரையில் போட்டுள்ளனர். இயக்குநர் ஜவஹர் அங்கேயே உங்களைக் கவர்ந்து விடுவார். ஒரு காட்சியில், பேய்க்குப்பயந்து வேகமாகத் துடுப்பைப் போடுவார்கள். அதை டாப் ஆங்கிளில் காட்டியிருப்பார் ஒளிப்பதிவாளர் மகேந்திரன். அற்புதம்.

இது ஓர் அழகான காதல் கதை என டைட்டிலின் பொழுதே பெரிய கேப்ஷனில் போடுகிறார் இயக்குநர். படத்தின் முடிவில் அதை அவர் நியாயப்படுத்தியும் விடுகிறார். ஆனாலும், ஏற்க மிகுந்த சிரமமாய் உள்ளது.