Shadow

பிச்சுவாகத்தி விமர்சனம்

Pichuvakathi movie review

இனிகோ பிரபாகர், யோகி பாபு, ரமேஷ் திலக் ஆகிய மூவரும் நண்பர்கள். ஓர் ஆட்டினைத் திருடி போலீஸில் மாட்டிக் கொண்டு, கும்பகோணம் காவல் நிலையத்தில் ஒரு மாதம் கையெழுத்து போடவேண்டும் என நீதி மன்றத்தில் தீர்ப்பாகிறது. அந்தக் காவல் நிலையத்தில் இருக்கும் போலீஸ் அதிகாரி, மூவரிடமும் தலா பத்தாயிரம் கேட்கிறார். கையில் பணமில்லாச் சூழலில், அவர்களின் நிலை என்னாகிறது என்பது தான் படத்தின் கதை.

படத்தில் ஒரு கிளைக்கதையும் உண்டு. இரண்டாம் நாயகனான செங்குட்டுவனுக்கு அனிஷாவைப் பார்த்த முதல் பார்வையிலேயே காதல் வந்துவிடுகிறது. நாயகிக்காகச் செங்குட்டுவனும் எம்.எல்.எம்.-இல் சேர்கிறான். அந்த எம்.எல்.எம். எபிசோட், எப்படி இளைஞர்களை ஏமாற்றுகிறது என அழகாகப் பதிந்துள்ளார் இயக்குநர் ஐயப்பன். இளைஞர்களுக்கு ட்ரெயினிங் தரும் கேமியோ ரோலில் நடித்துள்ளார் காளி வெங்கட். பாலசரவணனிடம் மாட்டி அவர் குட்டு உடையும் காட்சி ரசிக்க வைக்கிறது.

படத்தின் முதல் பாதியைக் கலகலப்பாக்குவது, வழக்கம் போல் யோகி பாபு தான். அசால்ட்டாக அவர் தரும் கவுன்ட்டர் ரசிக்க வைக்கிறது. எவ்ளோ சீரியசான காட்சியையும் நொடியில் கலகலப்பாகும் மேஜிக் அவருக்கு மிக எளிதாய் வருகிறது. கிரிக்கெட் போட்டி நடக்கும் இடத்தில், இனிகோவை அழைத்து தன் காதலைச் சொல்லும் காட்சியில் ஈர்க்கிறார் ஸ்ரீ ப்ரியங்கா (ஸ்ரீஜா).

போலீஸ்காரராக வரும் சேரன் ராஜ், காவல் நிலையம் என்றால் சாமானியனுக்கு இருக்கும் பதற்றத்தை அதிகரிக்கச் செய்யும் வேடத்தில் நன்றாக நடித்துள்ளார். மூன்று இளைஞர்களின் வாழ்க்கையையே திசை திருப்பி, கேள்விக்குறியாக்கி விடுகிறார். இந்த போலீஸ் அத்தியாயத்தில் உள்ள நம்பகத்தன்மை, அனிஷாவைப் பழி வாங்கத் துடிக்கும் இனிகோவின் கோபத்தில் வெளிப்படாதது படத்தின் குறை. தன் காதலி கோயிலுக்குப் போனாள்; தப்பு செய்யக்கூடாது எனக் கேட்டுக் கொண்டாள்; தன்னிடம் பேசி அவள் தந்தையிடம் திட்டு வாங்கினாள் என ஒரு பக்கம் பேசிக் கொண்டே, இனிகோ இன்னொரு பக்கம் ஒரு காதல் ஜோடியைத் துரத்துவது இயல்பாக இல்லை.

ரகுநந்தனின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி உள்ளது. படத்தின் நீளத்தைக் கட்டுக்குள் நேர்த்தியாக வைக்க உதவிய படத்தொகுப்பாளர் ராஜா சேதுபதியைப் பாராட்ட வேண்டும். படத்தின் முடிவை ரசிகர்களிடமே இயக்குநர் ஐயப்பன் விட்டுள்ளது சிறப்பு.