Shadow

பிக் பாஸ் 3 – நாள் 10

நேற்று விட்ட இடத்தில் இருந்து ஆரம்பித்தது இந்த எபிசோட். மீரா, மது, முகின், லொஸ்லியா இவங்க பேசிக் கொண்டு இருந்ததைப் பார்த்த சாக்‌ஷி, நேராக வனிதாவிடம் போய், அபிராமிகிட்ட பேசாதே என முகினுக்கு அட்வைஸ் பண்றதா சொல்றாங்க. அந்த விஷயத்துக்கு வனிதா ரியாக்ட் பண்ணினதை நேற்றே பார்த்தோம். இன்னிக்கு எபிசோட்ல வனிதா நேரடியாக முகின் கிட்ட மீரா கிட்ட பேசினதை பத்தி விசாரிக்கறாங்க. முகினும் வரிசையா எல்லாம்ம் சொல்லிக் கொண்டே வருகிறாரு. ‘நீ அபிராமி கிட்ட பேசக்கூடாது என மீரா சொன்னாளா?’ என நேரடியாகக் கேட்க, அப்படியெல்லாம் பேசவே இல்லை என முகின் சொல்றார். அதை கேட்ட வனிதா உடனே சாக்‌ஷியைக் கூப்பிட்டு விசாரிக்க, ‘நீ நீயா இரு, உன்னைச் சுத்தி எதுவும் சரியில்லன்னு மீரா சோன்னாளே!’ எனக் கேட்க, முகின் ஆமாவெனச் சொல்ல, ‘அதான், அதை தான் நானும் சொல்றேன்’ என கண நேரத்துல ப்ளேட்டை மாற்றினார் சாக்‌ஷி. ‘புரியலையா உனக்கு? உன்கிட்ட இன்டேரக்டா இதான் சொல்ல வரான்’ என உசுப்பேத்தி விட, பக்கத்தில் இருந்த வனிதா அதை அப்படியே மெயின்டெயின் பண்ணிக் கொண்டார்.

இதைக் கேட்ட முகின், ‘இதை இப்பவே மீரா கிட்ட கேட்டு கிளாரிஃபை பண்ணிடலாம்’ என விருவிருவெனக் கிளம்புகிறான். ‘சபாஷ்டா தம்பி, ஆண்பிள்ளைனா இப்படித்தான் இருக்கனும்’ என சிங்கம் ஒன்று புறப்பட்டதே பாட்டெல்லாம் பின்னாடி ஓடவிட்டேன். இங்க வனிதா + சாக்‌ஷி ரெண்டு பேரும் கொஞ்சம் டரியல் ஆன மாதிரி தான் தெரிந்தது. அவர்களும் பின்னாடியே சென்றனர். முகின் நேராக மீராகிட்ட, ‘நாம பேசின போது இந்த மாதிரி நீ சொன்னியா?’ எனக் கேட்க, ‘நான் மத்தவங்களைப் பத்தி எதுவும் பேசல, நம்ம ரெண்டு பேரைப் பத்தி தானே பேசினோம்’ எனச் சொல்ல, ‘சரி வா, அவங்க சந்தேகப்படறாங்க, பேசிடலாம்’ எனக் கூப்பிட, மீரா உச்சக்கட்ட கோபத்துக்குப் போய்விட்டார். ‘உனக்கு தேவைன்னா யு கோ மேன். வொய் மீ?’ எனக் கேட்டார். திரும்ப அதையே பேச, ‘இது ரொம்ப சின்னப்புள்ளத்தனமா இருக்கு’ எனச் சொல்லிட்டு வாஷ்ரூம் போய்ட்டாங்க. ‘ச்சே இவனையா கும்பிட்டோம்? கையை அடுப்புல வச்சு கரிக்கிடணும் மொமண்ட்’ங்கிற மாதிரி, ‘இவனுக்குப் போய் சாங் பிஜிஎம்-லாம் போட்டோமே என ஒரே அசிங்கமா போச்சு குமாரு’ங்கிற மாதிரி, ஸ்கூல் கேட் பக்கத்துல நின்னு ‘அம்மா மிஸ் அடிப்பாங்க’ங்கிற மாதிரி, ‘நீ உள்ள வந்து சொல்லிட்டு போம்மா’ என அழும் குழந்தைங்கிற மாதிரி இருந்தது முகினோட செயல். இதில் மீரா உள்ள போனதுக்கு சத்தம் வேற போட்டான்.

அதுவரைக்கும் ஒருவேளை உண்மை தெரிந்து விடுமோ எனப் பின்னாடியே சுத்திக் கொண்டிருந்த சாக்‌ஷி, இந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். உடனே ஆறுதல் சொல்லி முகினை தன் கன்ட்ரோலுக்கு கொண்டு வந்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த சேரன் முகினை அழைத்து, ‘கருத்துக்களைப் பேசுவதற்கு நமக்குச் சுதந்திரம் இருக்கு, அடுத்தவர்களை சத்தம் போடுவதற்கோ, கை ஓங்குவதற்கோ நமக்கு உரிமை இல்லை, பார்த்து நடந்துக்கோ’ என அட்வைஸ் பண்ணினார். சாக்‌ஷி & கோ வைப் பார்த்து, ‘கொஞ்ச நேரம் அவனைத் தனியா விடுங்கம்மா’ எனச் சொல்லியும், முகின் எழுந்த உடனே அவனை மறுபடியும் கன்ட்ரோலில் வைத்துக் கொண்டனர்.

சாக்‌ஷி சொன்ன விஷயம் பெரிதாக எடுபடவில்லை எனத் தெரிந்த உடனே களம் இறங்கியது ஷெரின். அவங்க பாத்ரூம் கதவைத் துடைத்துக் கொண்டு இருக்கும் போது மீராவும், மதுவும் பேசிக் கொண்டுள்ளதை அறைகுறையாகக் கேட்டிருக்கிறார். அபியையும் கூப்பிட்டு வைத்து, ‘அன்னிக்கு காலைல ஆறு மணி இருக்கும்’ என ஒரு கதை சொன்னார். அதாகப்பட்டது, ‘நான் ஏற்கனவே முகின் கிட்ட பேசிட்டேன், அவன் கேக்கல’ என மது, மீராகிட்ட சொன்னதைதான் கேட்டதாகவும், அப்புறம் தன்னைப் பார்த்து பேச்சை நிறுத்தி விட்டதாகவும் சொல்ல, அதுவரைக்கும் மீராவை டார்கெட் பண்ணிட்டு இருந்தவர்கள், இப்போது மதுவையும் சேர்த்துக் கொள்கிறார்கள். இங்கிருந்து ஆரம்பமாகிறது இந்த எபிசோடினுடைய ஆக்சன் சீன்ஸ். இதைக் காட்சிகளாகப் பார்க்கறதை விட ஒவ்வொரு கேரக்டர்களும் என்ன செய்தனரெனப் பார்க்கலாம்.

சாக்‌ஷி

நேத்து நடந்த பிரச்சினைகளுக்கு மூலக் காரணமே இவங்க தான். மீரா அபியைப் பற்றி பேசினால், அதை அபிகிட்ட சொல்வதில் ஒரு நியாயம் இருக்கு. ஆனா சம்பந்தமே இல்லாமல் வனிதா கிட்ட எதுக்கு வந்து சொல்லனும்? அதுவும் ஒன்னுக்கு ரெண்டா? அதுக்கப்புறமும் முகினை விடாமல் தன் கைக்குள் வைத்துக் கொள்ளப் பார்த்ததும் இவர் தான். மீரா கோபப்பட்டுப் போனதுக்குப் பின், மது, லொஸ்லியா இரண்டு பேரும் முகினுக்கு என்ன நடக்குது எனப் புரிய வைத்துக் கொண்டிருந்தார்கள். இடையில் புகுந்த சாக்‌ஷி, பேசவேண்டுமென முகினைத் தள்ளிக் கொண்டு வந்தது, தான் பண்ணின தப்பு எந்த விதத்திலும் தெரியக்கூடாது எனச் செய்தது தான். உள்ளேயும் போய் மதுவிடம், நீ தான் பிரச்சினைக்குக் காரணம், உன்னைப் பற்றி தான் பேசினோம் எனச் சொல்லி இன்னொரு சண்டையை ஆரம்பிச்சு வைத்ததும் சாக்‌ஷி தான். ஒரு குறும்படம் சாக்‌ஷிக்கு இருக்கும்.

வனிதா

உண்மையில், வனிதாவிற்க்கு நேற்று நடந்த பிரச்சினையின் மூலகாரணத்துக்கும் நேரடியாக சம்பந்தமே இல்லை. வனிதாவுக்கும் மீராவுக்கும் நேரடி பிரச்சினை கிடையாது. வனிதாவுக்கும் மதுவுக்கும் நேரடி பிரச்சினை கிடையாது. ஆனால் இந்த இண்டு பேரையும் தன்னோட எதிரியாகப் பார்க்கறாங்க வனிதா. மற்றவர்களிம் பிரச்சினையை தன் பிரச்சினையாக எடுத்து தோளில் போட்டுக் கொண்டு கத்திக்/சுற்றிக் கொண்டும் இருக்கிறார். ஒரு சீனியராக, வாழ்க்கையில் தன்னோட அனுபவத்தை, தான் சந்தித்த பிரச்சினைகளில் இருந்து தான் கற்றுக் கொண்ட விஷயத்தை மற்றவரிடம் பேசினாலே, இங்க வனிதா ஒரு முக்கியமான ஆளுமையாக இருக்கலாம். ஆனால் தன் கூட சரிக்கு சரி பேசுகிற ஒரே காரணத்துக்காக மீராவையும், மதுவையும் எதிரியாகப் பார்க்கறார். பிரச்சினைகளால் தன் பக்கம் இருக்கிறவங்களை அமைதிப்படுத்தி, நல்ல ஆலோசனைகளைச் சொல்லி, அவங்களை நல்வழிப்படுத்தலாம். ஆனால் சண்டக்கோழி மாதிரி, தலையைச் சிலுப்பிகிட்டு முதல் ஆளா சண்டைக்கு நிற்பது, அவரது பேரை அவரே கெடுத்துக் கொள்கிறார். ஆனால் இதற்கு மேல், என் பேர் கெட என்ன இருக்கு என நினைத்து இந்த மாதிரி எக்ஸ்ட்ரீம் லெவல்ல இருக்காங்களோ என்றும் தெரில.

வனிதாவோட தலைவர் பதவி போன வாரமே முடிந்துவிட்டது. ஆனால் அந்த ஞாபகமே இல்லாமல் நாட்டாமைத்தனம் செய்வதைக் கண்டிப்பா கமல் கேட்பாரென நம்புவோம். யாரையும் பேசவிடாமல், குறுக்கே புகுந்து குட்டையைக் குழப்பி , இந்த சீசனில் வீடு, ரெண்டாவது வாரமே போர்க்களம் மாதிரி இருப்பதற்கு முதற்காரணமே இவங்க தான்.

ஷெரின்

மதுவாவது ஒரே ஒரு தடவை தமிழ்பொண்ணு எனச் சொன்னாங்க. ஆனால் இந்த பொண்ணு தினம் ஒரு தடவையாவது அதைச் சொல்லிக் காட்டிக் கொண்டே இருக்கு. அதே விஷயத்துக்கு மது ஷெரின் கிட்ட மன்னிப்பும் கேட்டாங்க. இவங்களும் ஓக்கே சொன்னாங்க. ஆனா அதுக்கப்புறமும் அதையே சொல்றதுல என்ன நியாயம் இருக்க முடியும் எனத் தெரில. தவறுகள் எல்லாரும் செய்வது தான். வனிதா மாதிரியே ஷெரினுக்கும், நேத்து நடந்த பிரச்சினையில் நேரடி தொடர்பு கிடையாது. ஆனால் ஒட்டு கேட்ட ஒரு விஷயத்தை ஒன்னுக்கு ரெண்டா போட்டுக் கொடுத்து, பிரச்சினை என வந்ததுக்குப் பின், கேள்விகளுக்கு பதில் இல்லாமல், வாயில் வருவதை எல்லாம் அடிச்சு விட்டுட்டு இருக்காங்க. ஒன்றாக இருக்கும் போது எல்லாம் பேசிக் கொண்டு, சண்டை வந்த உடனே, ‘உன் பவுசு எனக்கு தெரியாதா? நீ அன்னிக்கே அப்படி சொன்னவ தானடி?’ எனக் குழாயடி சண்டை போடும் பெண்களின் அல்ட்ரா மாடர்ன் வெர்ஷன் தான் வனிதாவும் ஷெரினும்.

அபிராமி

இந்தப் பொண்ணுக்கு ஒரே ஒரு டயலாக் தான். ‘என்னை கேரக்டர் அசாசினேஷன் பண்றாங்க, அப்ப நான் எப்படி சும்மா இருக்க முடியும்?’ எனத் திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டிருந்தார். ‘மற்றவர்கள் யாரும் அதைச் செய்யலைம்மா. உனக்கு நீயே அதை செஞ்சுட்டு இருக்கே!’ என அபிகிட்ட யாராவது எடுத்துச் சொன்னால் பரவாயில்லை. யாரோ தன்னைப் பற்றிப் பேசினார்கள் என யாரோ சொன்னதை நம்பி இப்படி ஒரு சீன் போடறது எல்லாம் முட்டாள்த்தனத்தின் உச்சம். முதலில் பிக்பாஸுக்கு நாம் எதஅர்கு வந்தோம் என இங்க என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என்பதை அபி யோசிக்க வேண்டும். அவர் தன்னைத் தானே ஒரு சுய பரிசோதனை பண்ணிக் கொள்வது ரொம்ப நல்லது. முதலில் கவின், அவன் இல்லை என ஆன உடனே முகின். இல்லை இப்படியெல்லாம் செய்தால் தான் இந்த வீட்டில் தன்னைக் காப்பாத்திக்க முடியும் என நினைக்கிறார்களா எனத் தெரியவில்லை. தனித்தன்மையே இல்லாமல் கூட்டத்தோட கோவிந்தா போட்டா பிக்பாஸ் வீட்டுக்குள்ள ரொம்ப நாள் இருக்க முடியாது என அபி தெரிந்து கொள்ளவேண்டும்.

முகின்

முதலில் கொஞ்சம் கோபம் இருந்தாலும், அதுக்கப்புறம் பாவமா தான் இருந்தது. இந்த சினிமால வர அமெரிக்க மாப்பிள்ளை மாதிரி, நாலு பொண்ணுங்களுக்கு நடுவில் மாட்டிக் கதறிட்டு இருக்கான். இதைப் பார்த்துக் கொண்டு இருக்கற கவின், ‘அப்பாடா கிரேட் எஸ்கேப்புடா’ என மகிழ்ச்சியடைவது சர்வ நிச்சயம்.

சேரன்

ஆரம்பத்திலேயே பிரச்சினை வளரக்கூடாது என நினைத்து, முகினை அழைத்து அட்வைஸ் பண்ணினார். ஆனாலும் அவர் நினைத்தது நடக்கவில்லை. ஒரு கட்டத்தில சாக்‌ஷி, வனிதா & கோ சுற்றி உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்ததை ஒரு விதமான ஆற்றாமையோட பார்த்துக் கொண்டு இருந்தார். வாழ்க்கையில இதை விட இன்னும் எத்தனையோ பெரிய பிரச்சினைகளை/ சிக்கல்களை சந்திக்க வேண்டியவர், உப்பு பெறாத ஒரு விஷயத்துக்கு, இப்படிச் சண்டை போட்டுக் கொள்கிறார்களே என அவர் நினைத்திருக்கலாம். கடைசி வரைக்கும் அவர் இதிலிருந்து விலகி நிற்க முடியுமா எனத் தெரியவில்லை. சத்தம் போடாதே என முகினுக்கு அட்வைஸ் பண்ணினதை அடுத்த செகண்டே அப்படி சொல்றதுக்கெல்லாம் பிக்பாசை தவிர யாருக்கும் உரிமை கிடையாது என வனிதா முகின் மண்டையைக் கழுவினது இவருக்குத் தெரிய வர வேண்டும். அதே மாதிரி க்ளீனிங் டீமுக்கு வனிதா வந்து வேலை சொன்ன போதே கேப்டன்ங்கற முறையில மோகனைக் கூப்பிட்டுச் சொல்லி விட்டார். அதுக்கு ஒரு பிரச்சினை இருக்கு. இல்ல கமல் கிட்ட அதைப் பேசுவார் என எதிர்பார்க்கலாம்.

மதுமிதா

தன்னை கார்னர் செய்கிறார்கள் எனத் தெரிந்ததுமே ஒதுங்கிக் கொள்கிறார். அதே மாதிரியான ஒரு நபர் மீரா. இவங்க ரெண்டு பேரும் இணைவது இயல்பான ஒன்று. ரெண்டு பேருக்குமே வேற வழியும் இல்ல. இவங்க சேர்ந்தது தான் இப்ப நடக்குற மொத்த பிரச்சினைக்கும் காரணம் என வனிதா & கோ நினைக்கின்றனர். முகின் வந்து மீராவிடம் பேசிக் கொண்டு போனதில் இருந்தே, இந்தப் பிரச்சினை நம்மை நோக்கி வரும் என எதிர்பார்த்துத் தயாராகக் காத்துக் கொண்டிருந்தார். சாக்‌ஷி அதை கொண்டு வந்த பொழுது, அவங்க டீல் பண்ணின விதத்தில் மதுவோட முன்தயாரிப்பு நன்றாகவே தெரிந்தது. ரொம்ப நிதானமாக, கத்தாமல், வார்த்தைகளை விடாமல் தன் பக்கத்து பாயிண்ட்ஸை எடுத்து வைத்தார். கோபத்தைத் தூண்டுகின்ற மாதிரியான கேள்விகளை, கேலி/ கிண்டல்களைச் சிரித்துக் கொண்டே கடந்தார். இந்த பிகேவியரே ஷெரின், வனிதாவுக்கு பயங்கர கோபத்தைத் தந்தது என்று தான் சொல்ல வேண்டும். கடைசி வரைக்கும் கூலாக இருந்தது ஆச்சரியம் தான். இந்தச் சூழல் மதுவுக்கு ஒரு பெரிய அனுபவ பாடமா இருக்கும் என நம்புவோம்.

மீரா

இந்த வாரம் மீரா கேப்டனா இல்லாமல் போய்ட்டாங்களே என ரொம்ப பீல் பண்ணின நாள் இது. அவங்க மேல சில குறைகள் இருந்தாலும், நேத்து நடந்த பிரச்சினைக்கும் அவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதை புரிந்து கொண்டார்களோ என்னவோ, ஹாலில் அபிராமி ஸ்டேட்மெண்ட் கொடுத்துக் கொண்டு இருந்த போது நன்றாகப் போர்வையைப் போர்த்தி தூங்கிக் கொண்டு இருந்தார். சீன்லேயே இல்லேன்னாலும் அவங்களை மையமா வச்சு தான் நேத்து எபிசோடே நடந்தது.

லொஸ்லியா

சாப்பிடும் போது தான் இத்தனை பிரச்சினையும் நடந்தது. லியாவினால் சாப்பிடவே முடியவில்லை, மெதுவாகப் பேசுங்க என தர்ஷன் சொல்ல, லியா காம் டவுன் எனச் சொல்ல, அதைக் கூடப் பொறுத்தக்க முடியாத வனிதா, ‘எல்லாத்துக்கும் ஒத்துகிட்டுத்தானே வந்துருக்கா? இப்ப எதுக்கு தேவையில்லாம சீன் போடறா?’ என ஒரு கத்தல். இதனால சாப்பாட்டுல பாதில எந்திருச்சு போன லியாவை , கவினும், சேரனும் போய் சமாதானபடுத்திக் கூட்டிட்டு வந்தாங்க. பிறகு அபி, சாக்‌ஷி, ஷெரின், 3 பேர் கிட்டையும் பேசின லியா, உங்க 3 பேருக்கும் ஒருத்தரோட பிரச்சினைன்னா அவங்களை அழைத்து உக்கார வைத்து பேசி பிரச்சினையை முடிங்க எனச் சொன்னது அழகு. கூடிய சீக்கிரம் லியாவை வனிதா கட்டி ஏறப்போறா, கவின், சாண்டி, தர்சன் இவங்கெல்லாம் கோதாவில் குதிக்கப் போறாங்க.

மோகன்

ஒரே வரில சொல்லனும்னா, இனிமே மிக்சர் சாப்பிடற டெம்ப்ளேட்டுக்கு மோகன் படத்தை வச்சுக்கலாம்.

இவ்வளவும் நடந்தது 9ஆ ம் நாள் நிகழ்வுகள் மட்டும் தான். 10 ஆம் நாள் நிகழ்ச்சியில் காதலிப்பதைப் பற்றி கவின் பேசியது இன்றைய இளைய தலைமுறையினரின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி.

அடுத்தவங்க மனசுல நம்மைப் பத்தி என்ன நினைக்கிறாங்க என நமக்குத் தெரிய ஆரம்பித்தால், இங்கே எல்லாருமே கொலைகாரர்களாகத் தான் இருப்போம். யாரும் யாரோடவும் நட்பாவோ, உறவாவோ இருக்கவே முடியாது. இவன் என் எதிரி அதனால என்னைப் பத்தி தப்பாகத்தான் பேசிருப்பான், இவன் என் பெஸ்ட்டி அதனால இவன் அப்படிப் பேசியிருக்க மாட்டான் என யாரை பத்தியும் முடிவுக்கே வர முடியாது. அதே மாதிரி மற்றவர்கள் நினைப்பதற்குப் பேசுவதற்கு எல்லாம் விளக்கம் கொடுக்க ஆரம்பித்தால், நம்ம ஆயுள் அதிலேயே கழிந்துவிடும். கொஞ்ச நாள் கழித்து, இதை நினைத்துப் பார்க்கும் போது, இதில் சம்பந்தபட்டவங்க எல்லாருமே, ‘இதுக்காடா இவ்வளவு சண்டை போட்டோம்?’ என கண்ணாடி பார்த்து அசடு வழிவார்கள்.

மகாதேவன் CM