Search

பிக் பாஸ் 3: நாள் 88 | ‘ஷெரின் நீங்க அழகா இருக்கீங்க’ – வழிந்த பிக் பாஸ்

bigg-boss-3-day-88

தங்க முட்டை டாஸ்க் தொடர்ந்தது. பாத்ரூம் கூட போகாமல் 8 மணியைக் கடந்து போட்டி சென்று கொண்டே இருக்க, சோபாவில் படுத்திருந்த ஷெரின், தன்னையறியாமல் தூங்கிவிட்டார். இதை நோட் பண்ணின சேரன், ஷெரினின் முட்டையை எடுத்து மறைத்து வைத்துவிட்டார். கொஞ்ச நேரத்தில் எழுந்த ஷெரின் தன் தவறை உணர்ந்து, உள்ள போய்விட்டார். சாண்டி, ஷெரின் இரண்டு பேரோட முட்டையையும் உடைத்துவிட்டனர்.

நேற்றிலிருந்து ஷெரினை மட்டுமே டார்கெட் பண்ணி விளையாடிக் கொண்டிருக்கிறார் சாண்டி. விளையாட்டில் இது சகஜம் என்றாலும், முதலிடத்தில் இருக்கிற முகினை டார்கெட் பண்ணாமல், தனக்கு அடுத்த இடத்தில் இருக்கிற ஷெரினை டார்கெட் செய்வது நியாயமாகத் தெரியவில்லை. அதுவும் இப்பவும் க்ரூப்பாகச் சேர்ந்து ஸ்கெட்ச் போடுகின்றனர். ஒருவரை மூன்று பேர் சேர்ந்து ஜெயிக்கிறது, என்ன மகிழ்ச்சி கிடைக்கும்? முகின் ஜெயிக்கலாம், ஆனால் ஷெரின் ஜெயிக்கக்கூடாது. நேற்று பஜுல் அடுக்கும் விளையாட்டில் கூட மொத்தமாக ஷெரினை டார்கெட் செய்து தான் பந்தை எறிந்து கொண்டிருந்தார். அதிகமாக அடி வாங்கினதும் ஷெரின் தான். பக்கத்திலேயே இருந்த கவினைக் கண்டுக்கொள்ளவே இல்லை. சேரனையும், ஷெரினையும் தான் டார்கெட் பண்ணிக் கொண்டிருந்தார் சாண்டி. எப்பவும் போல இதுவும் கேள்வியே இல்லாமல் போய்விடும்.

ஒரு வழியாகத் தற்காலிகமாக முட்டை டாஸ்க் முடிந்ததாகச் சொல்லவும், எல்லோருக்கும் நிம்மதி. அனைவரும் படுத்திருக்க, 12 மணி வாக்கில் பாட்டு போட்டு எழுப்பினார் பிக் பாஸ்.

சாண்டியை கன்ஃபெஷன் அறைக்குக் கூப்பிட்டு, இந்த டாஸ்க் பற்றிக் கேட்டார் பிக் பாஸ். ஷெரினை டார்கெட் பண்றதுக்கு ரொம்பவும் பீல் பண்ணினார். ஃபைனலுக்கு நேரடியாகப் போக சாண்டிக்கு ஆசை இருக்கா என்று தெரியவில்லை. அடுத்து முகின், இந்த வீட்டையும், உங்க குரலையும் மிஸ் பண்ணுவேன் எனச் சொன்னார். ஷெரின், ‘நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க’ என பிக் பாஸ் வாயாலேயே சொல்ல வைத்துவிட்டார். பயங்கர ஹேப்பியாக இருந்தார். வெளியே வந்து எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார் ஷெரின். இதற்கு நடுவில் சேரனுக்கு முதுகு பிடித்துக் கொள்ள, பசங்க தான் உதவி கொண்டுள்ளனர். ரொம்பவும் கஷ்டப்பட்டுவிட்டார்.

அடுத்த டாஸ்க் அறிவிப்பு வந்தது. ஒரு கூடை நிறைய வெள்ளை பந்துகள் இருக்கும். ஹவுஸ்மேட்ஸ் சுற்றி நிற்க, நடுவில் ஒரு கூடையில், மஞ்சள் பந்தும், சிவப்பு பந்தும் இருக்கும். சிவப்பு பந்து மைனஸ் பாயின்ட், மஞ்சள் பந்து ப்ளஸ் பாயின்ட். மற்றவர்களிடம் இருந்து பந்தை எடுக்கிற அதே சமயம், சிவப்பு பந்தை அவர்கள் கூடையில் போடவேண்டும்.

ஆரம்பமே அடிதடி தான். முதுகு வலியோடு சேரனும் போட்டியில் கலந்து கொண்டார். சாண்டியிடம் இருந்து பந்தை எடுக்க முயற்சி பண்ணின லாஸ் – சாண்டி ரெண்டு பேரும் மோதி, லாஸ் கீழே விழுந்துவிட்டார். அதைப் பார்த்து, சாண்டியைக் கத்த ஆரம்பித்தார் கவின். “ரொம்பப் பண்ணாதடா டேய்” என சாண்டி ஒரு வார்த்தையை விட, அதையே பிடித்துக் கொண்டு கவின் பேச, சாண்டி டென்ஷனாகி, விளையாட்டை விட்டு வெளியே போக முயற்சி பண்ண, தர்ஷன் சமாதானப்படுத்தினார். ‘எல்லாரும் இங்க அடிபட்டு தான் விளையாடிட்டு இருக்கோம். சாண்டி வேணும்னு செய்யலை’ என எல்லோரும் சொன்னாலும், கவின் அடங்குவதாக இல்லை.

‘லாஸுக்கு அடிபட்டுருக்கு. நீ போய்ப் பார்க்கலையா?’ எனக் கண்ணடித்துக் கவினிடம் ஷெரின் கேட்க, விளையாட்டுக்கு நடுவில் கவின், லாஸைப் பார்க்கப் போய்விட்டார். அப்போவென்று பார்த்து, ‘எல்லாரும் கொஞ்சம் ஹோல்ட் பண்ணுங்க’ என முகின் சொல்ல, ஷெரினுக்குக் கோபம் வந்துவிட்டது. ‘நாம எதுக்கு ஹோல்ட் பண்ணனும்?’ எனச் சொல்லி, கவின் கூடையில் இருந்த பந்துகளை தன் கூடையில் போட்டுக் கொண்டார். திரும்பி வந்த கவின், கீழே கிடந்த பந்துகளையும் எடுத்து ஷெரின் கூடையில் போட, இன்னும் டென்ஷன ஆனார் ஷெரின். “எதுக்குய்யா கேம் விளையாட வர்றீங்க? உங்களுக்காக நாங்க ஹோல்ட் பண்ணனுமா?” எனக் கேட்க கவினும் கத்த ஆரம்பித்தார். ‘நான் ஹோல்ட் பண்ணச் சொல்லலை’ என ஒரு வரியைப் பிடிச்சுட்டுப் பேச, ஷெரின் டென்ஷனில் கூடையை உதைத்துக் கொண்டு உள்ளே போய்விட்டார். அப்பவும் கவின் கத்திக் கொண்டே தான் இருந்தார்.

அந்த சூழ்நிலைக்கு ஷெரின் ரியாக்ஷன் ஓவராக இருந்தாலும், இந்த விஷயங்கள் தொடர்ச்சியாக நடந்து கொண்டே தான் வருகிறது. அதோட விளைவு தான் ஷெரினோட அவுட் பர்ஸ்ட்.

கவின் – லாஸ் இரண்டு பேரும் ஒன்றாகவே தான் இருந்தனர், பக்கத்தில் பக்கத்தில் உட்காந்துள்ளார்கள், ஒன்றாகச் சாப்பிடுறாங்க, எதைப் பற்றியும் கவலைப்படுவதே இல்லை. போன வாரம் தான் ஒரு பிரச்சினை நடந்தது. இவங்க நடந்து கொள்வதைப் பார்த்தால், அப்படி ஒரு பிரச்சினை நடந்த மாதிரியே தெரியவில்லை.

கவின், லாஸ், அவங்க ரசிகர்கள் இவங்க எல்லோருக்குமே ஒரே லாஜிக் தான். ‘நாங்க இன்னும் வெளியே போகலை. சோ நாங்க செஞ்சது எதுவும் தப்பில்லை. வெளிய போனவங்க தான் தப்பு செஞ்சவங்க. அதனால தான் மக்கள் அவங்களை அனுப்பிட்டாங்க’ என்ற மொக்கை லாஜிக்கை வைத்து தான் கவினும், லாஸை கவிழ்த்துக் கொண்டுள்ளார். ஷெரின் கூடப் பேசும் போதும், மொக்கை லாஜிக் தான் சொல்கிறார். ‘நாங்க ரெண்டு பேரும் கடைசில இருக்கோம். நீங்க ஏன் எங்களைப் பார்க்கிறீங்க? நாங்க விளையாடி என்ன யூஸ்?’ எனக் கேட்கிறார். அப்புறம் எதற்கு விளையாட வரவேண்டும்? இவர்கள் நடந்து கொள்கிற விதத்தில், ஜெயிக்க வேண்டுமென நினைப்பவர்களுக்கும் ஸ்பிரிட் போய்விடும். மிஞ்சி மிஞ்சிப் போனால் அரை மணி நேரம் கேம். முடிந்ததுக்கு அப்புறம் மறுபடியும் ஒன்றாகவே தான் சுற்றப் போகிறார்கள். ஒரு முக்கியமான டாஸ்க் நடந்து கொண்டிருக்கும் போது, இடையில் போய் லாஸைப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை.

கவினும் – லாஸும் தொடந்து எவிக்ஷனில் இருந்து தப்பித்துக் கொண்டு வருவதால், அவங்க சப்போர்ட்டர்ஸ்க்கு என்ன மாதிரியான செய்தி போகும். 11 வருட நண்பர் வந்து, ‘நீ செய்யறது தப்பு’ எனச் சொல்கிறார். 10 வருடமாகப் பார்க்காத அப்பா வந்து சொல்கிறார்; அம்மாவும், தங்கைகளும் சொல்கிறார்கள்; கமல் சொல்கிறார்; உள்ளே இருக்கின்ற நண்பர்கள் சொல்கிறார்கள். இப்படி யார் பேச்சையும் மதிக்காமல், தங்களோட சுயநலத்திற்காக மட்டும் தான் நடந்து கொள்பவர்களைப் பார்த்து, இந்த இளைஞர்கள் என்ன கற்றுக் கொள்வார்கள்? அதனால் ஏற்படப் போகின்ற இம்பாக்ட் என்னவாக இருக்குமென்று தான் யோசனையாக இருக்கு.

நண்பர்களுக்கும், நட்புக்கும் மரியாதை கொடுக்கத் தேவை இல்லை; பெற்றவர்களுக்கு மரியாதை கொடுக்கத் தேவை இல்லை; சுயநலம் மட்டுமே பிரதானம், தாங்கள் செய்வது தான் சரி என ஒரு மெசேஜ் இன்றைய இளைஞர்களுக்குப் போய் சேருகிறது. இதில் கவின் தான் நட்புக்கு இலக்கணம், கவின் – லாஸ் காதல் தான் காவியக்காதல்.

கோடி கோடியாக, குடும்பம் குடும்பமாக, பெரியவர்கள் முதற்கொண்டு இந்த நிகழ்ச்சியை பார்க்கிறார்கள் என பெருமை பேசும் கமலும், விஜய் டிவியும், இப்படி ஒரு தவறான முன்னுதாரணம், மக்களைப் போய்ச் சேர்வதற்கு, என்ன பதில் சொல்வார்கள்?

உள்ளே போன ஷெரினை தர்ஷன் சமாதானப்படுத்திக் கூட்டிக் கொண்டு வந்தார். செம்ம சீன் அது. கூடையை உதைத்ததற்கு அனைவர் முன்னிலையிலும் பிக் பாஸிடம் மன்னிப்பு கேட்டார் ஷெரின். அந்த டாஸ்க் முடிவில் முகின் தான் வின்னர். ‘உனக்குப் புரியுதா மச்சான்?’ என சாண்டியிடம் விளக்கிக் கொண்டிருந்தார் கவின்.

மீண்டும் தங்க முட்டை டாஸ்க். மழை வரவும், எல்லோரும் வெளியே உட்காந்து விட்டார்கள். கவினும், லாஸும் பேசிக் கொண்டிருக்க, சாண்டி, தர்ஷன், முகின் மூன்றுணு பேரும் அவங்க முட்டையை உடைக்க திட்டம் போட்டனர். ‘அவங்க பேசிட்டிருக்கற வரைக்கும் சத்தியமா தூங்க மாட்டாங்க?’ என சாண்டி அடித்துச் சொல்கிறார். கடைசியில் அது தான் நடக்கிறது.

– மகாதேவன் CM