Shadow

காப்பான் விமர்சனம்

Kaapaan-movie-review

கதிர் எனும் கதிரவன், இந்திய அரசாங்கத்தைக் களங்கத்தில் இருந்து காப்பாற்றும் ஒற்றேவல் புரியும் ரகசிய இராணுவ வீரர். அவரைத் தனது பெர்சனல் பாடிகார்டாக, ஸ்பெஷல் ப்ரொடெக்ஷன் க்ரூப் (SPG) அதிகாரியாக நியமித்துக் கொள்கிறார் பிரதமர் சந்திரகாந்த் வர்மா. பிரதமரைக் கொல்லும் நடக்கும் சதிகளில் இருந்து கதிர், சந்திரகாந்தைக் காப்பாற்றிக் கொலையாளிகளைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

அயன் படத்தில், படைப்பாற்றல் மிக்கக் கடத்தல்காரராகவும்; மாற்றான் படத்தில், தந்தையின் தொழில் சாம்ராஜ்யத்தை அழிப்பவராகவும்; இப்படத்தில், நாாட்டின் பிரதமரைக் காப்பவராகவும் சூர்யா நடித்துள்ளார், வெற்றிகரமாக கே.வி.ஆனந்துடன் இணைந்து ஒரு ட்ரைலஜியை நிறைவு செய்துள்ளார் சூர்யா.

கே.வி.ஆனந்த் படங்களில் நிலவும் ஒரு பிரச்சனை – படத்தின் நீளம். இங்கு சினிமா செய்திகளை ரசிகர்கள் தேடித் தேடிச் சேகரிக்கின்றனர். சூர்யா, SPG-ஐச் சேர்ந்தவர் என்பதைப் படக்குழுவே தங்கள் பேட்டிகளில் சொல்லியுள்ளனர். ஆனாலும், அவரை ஒரு பயங்கரவாதி போல் பில்டப் செய்து, ‘ஹய்யோ.. ஹய்யோ.. அவரைத் தீவிரவாதின்னு நம்பிட்டீங்களா? அவர் ஒரு சூப்பர் ஹீரோ’ என நேரத்தைச் சஸ்பென்ஸ் என்ற பெயரில் விரயமாக்குகிறார். ஜானரை முடிவு செய்த பின், இயற்கை விவசாயம் பற்றிய பிரச்சாரத்திற்கு, இவ்வளவு நேரம் எடுக்காமல் வசனத்திலேயே கூடக் கடந்து போயிருக்கலாம்.

இந்தப் படத்தில், இன்னொரு புதுமையைச் செய்துள்ளார். ஒரு மரணம் நிகழ்ந்தால், அதைக் கதாபாத்திரங்கள் மறக்க ஒரு டூயட்டை வைப்பார் கே.வி.ஆனந்த். இப்படத்தில் அதை மாற்றி, படம் முடிந்து சுபம் ஆனதும் டூயட்டைக் கடைசியில் இணைத்துள்ளார். வழக்கத்தை முற்றிலும் மீறிடக் கூடாது என்பதற்காக, இடையில் ஒரு பார்ட்டி சாங் உண்டு. ஆனால் ஹாரிஸ் ஜெயராஜ் எங்கும் தென்படவில்லை.

வெளிநாட்டு டூர் எல்லாம் அடித்து, இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்த ஓயாது உழைக்கும் பிரதமர் சந்திரகாந்த் வர்மாவாக மோகன்லால் கம்பீரமாய் நடித்துள்ளார். ‘பாகிஸ்தான் மக்கள் என்ன பாவம்டா பண்ணாங்க?’ எனக் கர்ஜனையான அக்கறையாகட்டும், ‘எல்லையில் இறந்தது சுயநலத்தில் கொழிக்காத தியாகிகள்’ என பாகிஸ்தானுக்கு பதிலடி தரும் 56’’ இன்ச் கோபமாகட்டும், அவருக்கென்றே கச்சிதமாய் உருவாக்கப்பட்ட கதாபாத்திரத்தில் மோகன்லால் ஜொலிக்கிறார்.

ராஜா வீட்டுக் கன்றுக்குட்டி அபிஷேக்காக ஆர்யா நடித்துள்ளார். தொழிலதிபர் மஹாதேவாக நடித்திருக்கும் பொம்ரான் இரானி கலக்கியுள்ளார். கதாநாயகி இருந்தே ஆகவேண்டும் என்ற விதிக்காக சயிஷா நடிக்க வைக்கப்பட்டுள்ளார். இயற்கை விவசாயம் முதல் பல விஷயங்கள் சூர்யாவிற்கே தெரிவதால், சமுத்திரக்கனிக்கு என்ன அட்வைஸ் செய்வது எனத் தெரியாததால், நாயகனின் நண்பராக மட்டும் வருகிறார்.

பட்டுக்கோட்டை பிரபாகரின் வசனங்கள் சுவாரசியமாக உள்ளன. படமும் சோர்வளிக்காமல் பயணிக்கிறது. சிராக் ஜானியின் வில்லத்தனம் தொடக்கத்தில் ரசிக்க வைத்தாலும், அவருக்கான பின் கதை படத்திற்குப் பெரிதாக உதவவில்லை. இன்னும் வலுவான வில்லனாய் க்ளைமேக்ஸில் தெறிக்க விட்டிருக்கலாம். நீளத்தைக் குறைத்து, இன்னும் க்றிஸ்ப்பான திரைக்கதைக்கு மெனக்கெட்டிருந்தால், ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆகியிருக்க வேண்டிய படம். எனினும், சமீபத்தில் வெளியான சூர்யாவின் திரைப்படங்களிலேயே, இப்படம் தான் பார்வையாளர்களை முழுமையாக என்கேஜ் செய்கிறது.