Shadow

பிக் பாஸ்: சீசன் 2 – தொடக்கம்

Big-Boss-2---Tamil

பிக்பாஸ் சீசன் 2-இல் கலந்து கொண்ட பெரும்பாலானவர்கள், ‘ஏன் பிக்பாஸிற்கு வருகிறேன்?’ என்பதற்குச் சொன்ன காரணம், “பிக் பாஸில் கலந்து கொண்டவர்கள் வெளியில் வந்ததும் சொல்வது, தன்னுள் மாற்றம் நிகழ்கிறது என்கிறார்கள். இந்த நூறு நாளில் அப்படியொரு மாற்றத்தை எதிர்பார்த்துக் கலந்து கொள்கிறேன்” என்றார்கள். சீசன் 1-இல் கலந்து கொண்டவர்களில், அப்படி யாருக்கு என்ன மாற்றம் நிகழ்ந்தது என நமக்குக் கண் கூடாகத் தெரியாது. அவர்களாக, ‘இன்னது’ எனச் சொல்லும் வரை. அப்படிச் சொல்வதும் உண்மைக்கு எந்தளவுக்கு நெருக்கம் என்பதும் அளக்க இயலாது.

ஆனால், பிக் பாஸ், முதல் சீசனுக்கும் இரண்டாம் சீசனுக்கும் இடையில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. அந்த மாற்றத்தின் பெயர் கமல் ஹாசன். மக்கள் நீதி மய்யத்தின் தொடக்கத்திற்கு முன், பின் என இரண்டு சீசன்களையும் முறையே கொள்ளலாம். பிக் பாஸ் 1-இலே கூட கமல் ஹாசன் அதை ஒரு ப்ளாட்ஃபார்மாகப் பயன்படுத்திச் சமூகக் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அது தந்த உத்வேகத்தில் தான் கட்சியே தொடங்கினாரோ என்று கூடத் தோன்றுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதைப் பொன்னான வாய்ப்பாகப் பார்க்கிறார். முதல் நாள் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அதைச் சொல்லவும் செய்தார். மக்களோடு உரையாட ஒரு களம். இது வெறும் விளையாட்டு அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்பதை மீறி, இந்த சீசன் அரசியல் ரீதியான முக்கியத்துவமும் பெறுகிறது. அடுத்த நூறு நாட்கள், தமிழர்களின் வார இறுதிகள் கமலின் கட்டுப்பாட்டில் என்றாகிறது.

யாஷிகா ஆனந்த், பொன்னம்பலம், மஹத், டேனியல் அன்னிபோப், ஆர்ஜே வைஷ்ணவி (எழுத்தாளர் சாவியின் பேத்தி), ஜனனி ஐயர், ஆனந்த் வைத்தியநாதன், NSK ரம்யா (கலைவாணரின் பேத்தி), செண்ட்ராயன், ரித்விகா, மும்தாஜ், தாடி பாலாஜி, மமதி சாரி, நித்யா, ஷாரிக் ஹசன், ஐஸ்வர்யா தத்தா என மொத்தம் பதினாறு போட்டியாளர்கள். இந்த வாரம் வெளியேற்றம் எதுவுமில்லை எனினும், கூடவும் செய்யலாம் எனக் கண்ணடிக்கிறார் கமல். அப்பதினாறு பேரின் வயிற்றில் புளியைக் கரைக்க, ஓவியாவை ஒரு போட்டியாளராகக் களம் இறக்கியுள்ளது நல்ல யுக்தி.

சிறையில் அடைத்து, அடுத்தவர் வாழ்வை எட்டிப் பார்க்கும் விளையாட்டா என்ற கருத்தாக்கத்தை எல்லாம் மீறி, தங்களைத் தாங்களே சோதித்துக் கொள்ளும் களமாகப் பாவித்து உள்ளே வந்துள்ளனர் போட்டியாளர்கள். போட்டியில் வெல்வதே நோக்கம் என்று சிலரும், எப்ப வேண்டுமானாலும் வெளியில் போகத் தயார் என்ற மனநிலையிலும் சிலர் உள்ளனர். எந்த மனநிலையில் உள்ளே வந்திருந்தாலும், செளகரியத்துக்கும் சுதந்திரத்துக்கும் பழக்கப்பட்ட மனம், தனிமைப்படுத்தப்பட்ட ஒரு சூழலில் தன்னியல்பைக் காட்டியே தீரும். ஒருவர் தனது இயல்பில் இருந்து ஓடவும் முடியாது – ஒளியவும் முடியாது. மனித மனங்களோடான விளையாட்டிற்குத் தயாராகுங்கள்!

– Helen D’Bhakth