Shadow

பிகில் விமர்சனம்

bigil-movie-review

‘ப்யூகல் (Bugle)’ என்பதொரு ஊது கருவி. பொதுவாக இராணுவத்திலும், ஸ்கெளட்டிலும் ப்யூகலை உபயோகிப்பார்கள். அதன் மழூஉவே ‘பிகில்’. தற்போது அது விசிலுக்கான மாற்று சொல் என்பது போல் திரிபடைந்துவிட்டது. இப்படத்தில், பிகில் என்பது சிறந்த கால்பந்தாட்ட வீரரான மைக்கேலின் ஜெர்சியில் இடம்பெற்றிருக்கும் செல்லப்பெயர். மேலும், டீமின் கோச் விசில் ஊதி வீரர்களை ஒருங்கிணைத்துப் பயிற்சியளிக்கிறார் என்பதாகத் தலைப்பினைக் காரணப் பெயராகவும் கொள்ளலாம்.

மைக்கேல் தலைமை வகிக்கும் அணி ‘கப்’ அடிக்க வேண்டுமென்பது அவரது தந்தை ராயப்பனின் ஆசை. ராயப்பனின் கண் முன்பே அந்தக் கனவைச் சரிக்கும் மைக்கேல், பின்பு மைக்கேல் ராயப்பனாக தனது தந்தையின் கனவை எப்படி நனவாக்குகிறார் என்பதுதான் படத்தின் கதை.

படத்தில் ஒரே ஒரு காட்சி கூடப் புதிதாக அமைக்கப்படவில்லை. பலமுறை பல படங்களில் பார்த்துப் பழகிய, அடுத்து என்னவென்று சுலபமாய் யூகிக்கக் கூடியதாக, ஒரு மேம்போக்கான திரைக்கதை. திரையில் கூட்டத்தைக் கூட்டிக் கொண்டாட்டத்தைக் கொண்டு வர முயற்சி செய்துள்ள அட்லி, அசலான மனிதர்களைத் திரையில் காட்ட எந்த முயற்சியும் செய்யவில்லை. ஆனந்த்ராஜ், சாய் தீனா போன்றவர்களை சும்மா நிற்க வைத்து அழகு பார்த்துள்ளார் அட்லி. ஆனால் சாய் தீனா, அந்தக் காட்சிக்கான மனநிலையைத் தன் அநாயாசமான உடல்மொழியால், அவுட் ஆஃப் ஃப்ரேமில் இருந்தாலும் கவர்கிறார். ஃப்ரேமில் விஜய் மட்டுமே உள்ளார். குறிப்பாகப் படத்தின் முதற்பாதி முழுவதும் விஜய். ஸ்டைலிஷான விஜய், இளமையான விஜய், துறுதுறுவென்றிருக்கும் விஜய் என அட்லி விஜய் ரசிகர்களை மனதில் கொண்டு காட்சிகளை அமைத்துள்ளார். தெலுங்கு திரையுலகத்துக்குச் சவால் விடுமளவு வண்ண வேடிக்கையாக உள்ளது படத்தின் தொடக்க நிமிடங்கள்.

காலா ஆக்‌ஷன் செய்திருந்தால் எப்படியிருக்கும் எனத் தன்னைத் தானே கேள்வி கேட்டு, தளபதி படத்தின் காட்சிகள் போல் இருந்திருக்கும் என்றொரு முடிவுக்கு அட்லி வந்திருப்பது தெரிகிறது. ராயப்பனாக நடிக்க விஜய் முயற்சி போட்டிருப்பது தெரிந்தாலும், மிகத் தட்டையான கதாபாத்திர வார்ப்பு என்பதால் கடி ஏற்படுகிறது. ஸ்போர்ட்ஸ் ஜானர் படமென்ற விளம்பரத்திற்கேற்ப, படம் ஒற்றைக் கருவில் நேரடியாக இரண்டாம் பாதியிலேயே தொடங்கப்பட்டுப் பயணித்திருந்திருக்கலாம். சுமார் மூன்று மணி நேரப் படம் என்பது மிகவும் அலைக்கழிக்கிறது. படம் கால்பந்தாட்டத்தை, குறிப்பாக பெண்கள் கால்பந்தாட்டத்தைச் சுற்றிப் பின்னியிருக்கலாம். விஜயைச் சுற்றிப் பின்னி விட்டு, பெண்கள் கால்பந்தாட்டத்தில் கொண்டு போய் முடித்து விடுகிறார் அட்லி. பெண்கள் கால் பந்தாட்டம் பற்றியும், அவர்கள் முன்னுள்ள உண்மையான சவால்களைப் பற்றியும் கொஞ்சம் ஆய்ந்தறிந்திருக்கலாம் அட்லி. இந்த க்ளிஷேவான ஸ்போர்ட்ஸ் டெம்ப்ளெட்டில், கால்பந்தாட்டத்தைத் தூக்கி விட்டு எந்த விளையாட்டை வைத்தாலும் கச்சிதமாகப் பொருந்திக் கொள்ளுமளவு தான் புட் ஃபால் பற்றிய டீட்டெயிலிங் உள்ளது. ஏஞ்சல் ஆசிர்வாதமாக வரும் நயன்தாராவுடனான விஜயின் காதல் காட்சிகளும் வெகு சுமார். ‘கம்பெனி தர்றியா?’ என விஜய் கேட்க, நயன்தாரா பைக்கில் அமர, காதல் மலர்ந்துவிடுகிறதாம். அதை விடக் கொடுமை, ‘ஆமா, நான் தான் வில்லன்’ என நாயகனிடம் வாக்குமூலம் தரும் ஜாக்கி ஷெராஃப்.

இரண்டாம் பாதியில் சில அற்புதமான தருணங்கள் படத்தில் உண்டு. ‘திறமையும் தன்னம்பிக்கையும் முகத்தின் அடையாளத்தில் இல்லை’ எனப் பேசி, விஜய் ஒரு பெண்ணைத் தனிமைச் சிறையில் இருந்து மீட்கும் காட்சியும்; மனைவிக்கும் கனவும் லட்சியமும் உண்டென நயன்தாரா பேசும் காட்சியும் செமயாக இருந்தன. ஆனால், க்ளைமேக்ஸில் அதைப் போட்டு உடைக்கும் விதமாக, ‘குண்டம்மா’ என்று கோச் மைக்கேல், பாண்டியம்மா எனும் பாத்திரத்தில் நடித்த ரோபோ ஷங்கரின் மகளைக் கூப்பிடுகிறார். பாண்டியம்மாவின் கோபத்தைத் தூண்டி, அவரது முழுத் திறமையை வெளியில் கொணரும் உத்தியாம். என்ன ஒரு வெறித்தனம் அட்லிக்கு? விஜய் போன்ற ஒரு மாஸ் ஹீரோவின் மூலம், அதுவும் க்ளைமேக்ஸில் வரும் ஃபைனல் மேட்ச்சில், ஒரு பெண்ணின் உருவத்தைக் கேலி செய்யும் குரூரமான காட்சியும் வசனமும் வைக்க எப்படி யோசிக்க முடிந்தது அட்லியால்? ‘பெண்கள் தான் நண்பா எல்லாம்’ என இசை வெளியீட்டில் பேசிய அட்லி, ‘இது பொண்ணுங்களுக்கான படம்’ என அவரும் நம்பி, விஜயையும் நம்ப வைத்து, ரசிகர்களையும் நம்ப வைக்கப் பார்க்கிறார். அட்லியின் இத்தகைய வெறித்தனமான நம்பிக்கை மெர்சலாக்குகிறது.