Shadow

காலா: ரெளடியா? தலைவரா? – ரஞ்சித்தின் அரசியல்

Ranjith failed to impressin Kaala

சுவர் அரசியலைக் கலாபூர்வமாக வழங்கிய ரஞ்சித் எங்கே போனார் என்று ஆச்சரியமாக இருக்கிறது. சமூக அறிவுடன் கூடிய கல்வியின் அவசியத்தைச் சொன்ன ரஞ்சித்தால் ‘காலா’வில் எதையும் சொல்ல முடியவில்லை. சமூக ஆவேசத்தில் தன்னைத் தொலைத்துக் கொண்ட பரிதாபமான படைப்பாளியாய்த் தெரிகிறார்.

‘மனு பில்டர்ஸ்’ எனப் பெயர் வைப்பதெல்லாம் சரி. ஆனால், அதெல்லாம் name dropping போல் உபயோகிப்படுகிறதே தவிர, காவி அரசியலைக் கழுவி ஊற்றும் குறியீடெல்லாம் இல்லை. இல்லவே இல்லை. படம் நெடுகேவும் காலாவை ஒரு காமெடியனாகவே அணுகுகிறார் ரஞ்சித். மகா பரிதாபம்.

ஓர் உதாரணத்துடன் பார்க்கலாம். காலா கூட்டத்தில் இருந்து ஆவேசமாக எழுந்து நடக்கும் பொழுது, ஒருவர் ஓடி வந்து அவருக்குக் குடை பிடிக்கிறார். ஆண்டானுக்குச் சாமரம் வீச வேண்டியது அடிமையின் பாக்கியம் என்ற மேட்டிமை எண்ணம் காலாவிற்கு உள்ளதாக ரஞ்சித் சித்தரிக்கிறாரா? காலா எனும் ரெளடியின் மீது மக்களுக்குள்ள பயம் என்கிறாரா? அல்லது காலா, தனக்குக் குடை பிடிக்கும் திவ்ய பணியினை அளித்து அதன் மூலமாக ஒரு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் என்பதன் குறியீடா?

அடுத்து, தனது முன்னாள் காதலிக்கு அடிபட்டு விடுகிறது என்பதை அறிந்து விசாரிக்கச் செல்கிறார் காலா. ‘இத்தனை நாளா இந்த மக்களுக்கு என்ன செஞ்ச? இந்த மக்களுக்கு எப்படியும் நான் நல்லது செய்வேன். உன்னால முடிஞ்சதைப் பாரு’ என்கிறார் ஹுமா குரேஷி. உடனே காலா, “இந்தக் காலாவோட முழு ரெளடித்தனத்தையும் நீ பார்த்தது இல்லையே! இனி பார்ப்ப” என ‘பன்ச்’ பேசுகிறார். அதாவது, ‘நிலம் நமது உரிமை’ எனக் காதலித்த பெண்ணிடமே பொறுமையாகப் பேசி யதார்த்தத்தை விளக்க முடியாதவர், க்ளைமேக்ஸில் தாராவியின் போராட்ட முகமாக மாறுவது மிகப் பெரிய காமெடி.

முதற்பாதியில், முன்னாள் காதலியின் வீட்டுக்குப் போய், ‘ரெளடித்தனத்தைப் பார்ப்ப’ எனச் சூளரைத்த காலா, இரண்டாம் பாதியில் வில்லன் ஹரி தாதா வீட்டுக்குப் போகிறார். அங்கே போய், ‘கருப்பு உழைப்பின் நிறம்’ என்று ‘பன்ச்’ பேசியும், ‘உன்ன விட மாட்டேன்’ என மிரட்டிவிட்டும் வருகிறார். ஆனால் வில்லனாகச் சித்தரிக்கப்படும் ஹரி தாதா, தன்னால் காலாவிற்கு ஏற்பட்ட இழப்பிற்கு தன்மையாக மன்னிப்பு கேட்கிறார். அது நக்கலுக்கு என வைத்துக் கொள்வோம். ஆனால் அந்தச் சந்திப்பில், தன்னை ராமராகப் பாவித்துக் கொள்ளும் ஹரி தாதா ஒரு காரியம் செய்கிறார். “ராவண் மஹாராஜிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கோமா!” என்று தன் பேத்தியிடம் சொல்கிறார்.

அதாவது, ‘மனு பில்டர்ஸ்’-ஐ இயக்கும் ஹரி தாதா, தன் பேத்தியை ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியான காலாவிடம் ஆசிர்வாதம் வாங்கச் சொல்கிறார். இதென்ன பிரமாதம் என்பவர்களுக்கு, இந்திய நாட்டின் ஜனாதிபதியையே நீசப் பிறவியாய்ப் பாவிக்கும் வலுவான கட்டுமானத்தினைக் கொண்டது காவி பயங்கரவாதம்.

“சமூக நீதி பேசி, ஆண்டானைத் தன்னைப் பாவித்துக் கொள்ளும் காலா எங்கே? காலா காலில் தன் பேத்தியை விழச் சொல்லும் ஹரி தாதா எங்கே? மக்களுக்கு நல்லது செய்தே தீருவேன் எனும் பெண்ணிடம், என் முழு ரெளடித்தனத்தையும் பார்ப்ப என வீராவேசம் கொள்ளும் காலா எங்கே? ‘உன்னைக் கொல்வது தான் என் நோக்கம் – குறி தப்பியதற்கு மன்னிச்சிடு’ எனக் கூறும் ஹரி தாதா எங்கே?”

அனைவரையும் ஆளப் பிறந்தவன் என்று தனக்குள் அதிகாரப் போதையை மட்டும் தீவிரமாய் வளர்த்துக் கொள்ளும் மிகச் சராசரியான வில்லன் தான் ஹரி தாதா. சராசரிக்கு ஒரு நாமத்தைப் போட்டு, அங்குமிங்கும் ராமர் புகைப்படத்தை வைத்து, மோடி பயன்படுத்திய இரண்டு வாக்கியங்களை வில்லனைப் பேச விட்டதால், இது காவி அரசியலுக்கோ பயங்கரவாதத்துக்கோ எதிரான படம் ஆகி விடுமா? கண்ணாடியை அட்ஜஸ்ட் செய்து விட்டு ஆட்டோவை ஓட வைத்தேன் எனத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் கேலிக்கூத்திற்கு நிகரான செயலல்லவா அது? கண்ணாடியை மட்டுமா திருப்பினார் ரஞ்சித், ‘குழந்தைகளைப் படிக்க வைங்க. அதான் ரொம்ப முக்கியம்’ என ஒரு வசனத்தில் மெஸ்சேஜும் சொல்லியுள்ளார். அந்த மெஸ்சேஜின் அவசியத்தை மெட்ராஸ் உணர்த்தியது, ஆனால் இங்கே வெறும் நேம் டிராப்பிங்-காக ஒரு வசனத்துக்குள் சுருங்கிவிடுகிறது.

தாராவிக்குத் தலைமை ஏற்பவர்கள் ஏன் குழப்பவாதியாகவே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ‘தான் நல்லவரா? கெட்டவரா?’ என வேலு நாயக்கருக்குக் குழப்பம். ‘தான் ரெளடியா? தலைவரா?’ எனக் கரிகாலனுக்குக் குழப்பம். ஆனால், வேலுநாயக்கர் தாராவியின் நம்பிக்கையைப் பெறுவது அதிகாரத்தின் நேரடி வடிவமான போலீஸ்காரனைக் கொல்வதன் மூலம். பரிதாபத்திற்குரிய காலாவால் தன் தந்தையைக் கொன்ற ஹரி தாதாவின் நிழலைக் கூடத் தொட முடியவில்லை. பின் தாராவியின் நம்பிக்கையை காலா எப்படி தான் பெற்றார் என ரஞ்சித் தான் சொல்லவேண்டும். ஒருவேளை வேங்கையனின் வாரிசு என்பதால், மன்னராட்சி நியதியின் படி தாராவிக்குத் தலைவன் ஆகியிருப்பாரோ? இருக்காது. ஏனெனில், சமூக நீதி பேசும் புரட்சி இயக்குநரின் படம் இது என்பதால் மன்னராட்சி நியதியை வைத்திருக்க மாட்டார். அப்போ எப்படி? ஏதாச்சும் ரெளடித்தனமோ, மக்களுக்கு நல்லதோ செய்திருப்பார் என பார்வையாளர்கள் குத்துமதிப்பாக யூகித்துக் கொள்ள வேண்டியதுதான். அனைத்தையும் பார்வையாளரின் யூகத்திற்கே விடுவதுதானே நல்ல படைப்பாளிக்கு அழகு என்ற விதிக்கேற்ப, காலா புரட்சி செய்தே மக்களின் நன்மதிப்பைப் பெற்றாரென முடித்துக் கொள்வோம்.

மனைவி சொன்னதால் தந்தையைக் கொன்றவனைப் பழி வாங்காமல் விட்டுவிடும் காலா, யாருமே சொல்லாமல் மனைவியைக் கொன்றவனையும் பழி வாங்காமல் விட்டுவிடுகிறார். ‘உங்கொப்பன் மொவனே நான் சிங்கம்டா’ என என்.எஸ்.கே.விடம் வீராப்பு கொள்ளும் நபர் போல், சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் ஹரி தாதாவிடம், ‘வேங்கையன் மொவன் நான் உன்ன சும்மா விட மாட்டேன்டா.. ஹே.. ஹே..’ என்கிறார் காலா. அப்படி வெட்டி வீராப்பை மெயின்டெயின் செய்தாலும், கடைசி வரை மனைவியின் சொல்லுக்கு மரியாதை தந்து ஹரி தாதாவிற்கு எதிராக ஒரு துரும்பையும் அசைக்காத மானஸ்தனாய் ஜொலிக்கிறார் காலா.

அப்போ பாலத்தில் வைத்து காலா செய்யும் கொலை? வெயிட்டீஸ். ரூல்ஸ் & ரெகுலேஷன்ஸை ஒழுங்காகத்தான் ஃபாலோ செய்துள்ளார் காலா. அதாவது காலாவின் மனைவி செல்வி, ஹரி தாதா மீதுள்ள பழி வாங்கும் எண்ணத்தை விடச் சொன்னாரே தவிர, வேற யாரை வேண்டுமானாலும் கொல்லலாம் எனச் சொல்லியிருக்கக்கூடும். மறுபடியும் யூகம்தான்.

இப்படி, தலித் அரசியலை, காவி எதிர்ப்பு அரசியலை, ஹீரோயிசத்தை, தாராவி மக்களின் வாழ்க்கையை என அனைத்தையுமே யூகித்துக் கொள்ள வேண்டியதாய் உள்ளது. பற்றாக்குறைக்குத் திட்டமிட்டுக் காலாவைத் தெளிவில்லாத, வெற்றுச் சவடால் விடும் செயல்படாத ரெளடி/தலைவர் பாத்திரமாகப் படைத்துள்ளார் ரஞ்சித். அந்தப் பாத்திரத்தை ரஜினிக்குக் கொடுத்து, இந்த உலகிற்கு ஏதோ உணர்த்த முயற்சி செய்துள்ளார். அது என்னவாக இருக்கும்?

– தினேஷ் ராம்