Shadow

போதை ஏறி புத்தி மாறி விமர்சனம்

bodhai-yeri-budhi-maari-movie-review

கல்யாணத்திற்கு முன் தினம், நாயகனுக்குப் போதை ஏறி, அவன் புத்தி மாறுவதால், என்னென்ன விளைவுகளை எதிர்கொள்கிறான் என்பதுதான் படத்தின் கதை.

விளையாட்டு விபரீதமாகிவிடுவதுதான் படத்தின் மையக்கரு. உண்மையில், போதை தேடும் நபர்கள் எல்லாம் ஸ்டெடியாக இருக்க, மணப்பெண்ணான ஜனனியிடம் சும்மா விளையாட நினைக்கும் கார்த்திக்கின் வாழ்க்கை தலைகீழாய்ப் புரள்கிறது.

சமீபத்திய ஸ்பைடர்-மேன் படத்தில், தொழில்நுட்பம் கொண்டு வில்லன் உருவாக்கும் மாய உலகத்தை, போதைப் பொடியை மூக்கினுள் இழுத்துக் கொண்டு உருவாக்கிக் கொள்கிறான் கார்த்திக். அவன் புத்தி எப்படி எல்லாம் மாறுகிறது என படம் பேசுகிறது.

நல்ல த்ரில்லர் படமாக வந்திருக்க வேண்டிய படம். ஆனால், மெஸ்சேஜும் வேண்டுமென்ற இயக்குநர் K.R.சந்துருவின் உளக்கிடக்கை, அதற்கு எமனாகிவிட்டது. தலைப்பிலேயே அவரது விருப்பத்தைப் பட்டவர்த்தனமாய் உணர்த்திவிடுகிறார். போதை ஏறினால் புத்தி மாறிவிடும் என்று. மொக்கையான நாயகனின் ஆசையும், அவனைத் தனியே விட்டே ஓடும் அவனது நண்பர்களின் முன் ஜாக்கிரதை இல்லாத தன்மையும், சில மணி நேரங்களில் நாயகனின் வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது.

காவல்துறை உயரதிகாரியாக, தெலுங்கு நடிகர் அஜய் நடித்துள்ளார். வில்லன் பாத்திரத்தில் வரும் அஜயும், சார்லியும் தான் தங்கள் அனுபவத்தால் அவர்கள் வரும் காட்சியை சினிமாவாக்குகின்றனர். அப்படி மற்றவர்களால் சுலபமாகக் காட்சியைத் தங்கள் வசமாக்கிக் கொள்ள முடியவில்லை. திரைக்கதையும் அவ்ளோ க்ரிப்பிங்காக இல்லாதது குறை. நண்பர்கள் பார்ட்டிக்கு நாயகனை அழைக்கப் போடும் டிராமா, அதற்கு நாயகன் கொடுக்கும் முக பாவனைகள் அமெச்சூர் ரகம். தண்ணி அடிக்கும் போது நண்பர்கள் பேசிக் கொள்வது, கதையை நகர்த்தவும் உதவவில்லை, நகைச்சுவைக்கும் உதவவில்லை.

துஷாரா, ப்ரதாயினி என படத்தில் இரண்டு கதாநாயகிகள். சில காட்சிகளில் மட்டுமே, மணப்பெண் ஜனனியாக துஷாரா வந்தாலும், அவரது முகம் முகத்தில் பதிகிறது. பத்திரிகையாளர் பிருந்தாவாக நடித்திருக்கும் ப்ரதாயினியின் அறிமுகத்தை இன்னும் சுவாரசியப்படுத்தியிருக்கலாம். நாயகனின் குடும்பத்தை விட, பிருந்தாவின் நண்பர் டேவிட்டாக நடித்திருக்கும் சோமீதரனின் அழகான குடும்பம் படம் முடிந்தும் கூட நினைவில் நிற்கிறது.

நாயகன் கார்த்திக்காக, இருதய அறுவைச் சிகிச்சை நிபுணர் தீரஜ் நடித்துள்ளார். இரண்டாம் பாதிக்குப் பின்னான திரைக்கதையில் அவரது கதாபாத்திரம் கதையோடு ஐக்கியமாகிவிட்டாலும், படத்தின் முதற்பாகம் முழுவதும், அமெரிக்க மாப்பிள்ளை அளவுக்கே இருந்தது அவரது கதாபாத்திர வார்ப்பும், நடிப்பும். கதாபாத்திரங்களின் டீட்டெயிலிங் மிஸ் ஆவதே அதற்குக் காரணம். அஜய், சார்லி, நாயகனின் நண்பராக நடித்திருக்கும் ரோஷன் ஆகியோர் தங்கள் நடிப்பால் படத்தை இழுத்துப் பிடிக்கின்றனர்.

ஹாலிவுட் சினிமாவின் ஒரு காட்சியைப் பார்த்து, சென்னையில் ‘ட்ரக் (Drug)’ கிடைக்கிறது என்பதை நிரூபித்தே ஆகவேண்டுமென ரோஷன் நினைக்கிறார். அது இயல்பாக நடக்காததோடு, அக்காட்சிக்கு எடுத்துக் கொள்ளப்படும் நேரத்தையும் குறைத்திருக்கலாம். அந்த ‘டிரக்’ எப்படி வேலை செய்யும் என்பதற்காக வைக்கப்பட்டிருக்கும் ஆரம்ப காட்சிகள் சுவாரசியமாக உள்ளன. படத்தின் இரண்டாம் பாதி விறுவிறுப்பாக இருந்தாலும், அனைத்தையும் இணைக்கும் கண்ணி வலுவாக இல்லாததால், படம் முழுமையாகப் பார்வையாளர்களோடு ‘கனெக்ட்’ ஆகவில்லை.