Search

போகன் விமர்சனம்

Bogan vimarsanam

தனி ஒருவன் வெற்றி ஜோடியான அரவிந்த் சாமி – ஜெயம் ரவி மீண்டும் இணைகிறார் என்பதே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பிற்குப் பிரதான காரணம். அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்துள்ளனர் என்றே சொல்லவேண்டும்.

‘போகன்’ என்றால் புலன்களால் பெறும் இன்பத்தை அனுபவிப்பவன் எனப் பொருள் கொள்ளலாம். அப்படி, வாழ்விலுள்ள ராஜ சுகம் அனைத்தையும் அனுபவிக்கும் பெரும் இச்சையுடைய போகனாக அரவிந்த் சாமி கலக்கியுள்ளார். தனக்கு வேண்டியதைப் பெற்றுக் கொள்ள, ஆய கலைகளில் 52வது கலையான ‘பரகாயப் பிரவேசம்’ எனும் சக்தியை அரவிந்த் சாமி பிரயோகிப்பதாகக் காட்டியுள்ளார் இயக்குநர் லக்ஷ்மன்.

ஆனால், கூடு விட்டு கூடு பாய்தல் என்பது இறந்த உடலில் ஒருவர் தன் உயிரினைப் புகுத்திக் கொள்வதாகும். படத்தில் காட்டப்படுவது ‘கூடு மாறுதல் (Body Swapping)’ எனும் கலை. இந்த அழகான ஹாலிவுட் கற்பனைக்கும், சித்தர் போகர் அருளியதாகப் படத்தில் காட்டப்படும் பரகாயப் பிரவேசத்திற்கும் எவ்வித ஸ்நானபிராப்தியும் இல்லை (‘கூடு மாறுதல்’ ஹாலிவுட் கற்பனை என்று கூடச் சொல்ல முடியாது. ஆஃப்ரிக்காவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்று குடியேறியவர்கள் கொண்டு சென்ற மாந்திரீக நம்பிக்கைகளாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம்).

திருடரான அரவிந்த் சாமி, டெபுடி கமிஷ்ணரான ஜெயம் ரவியின் உடம்பிற்குள் புகுந்து கொண்டுவிடுகிறார். அரவிந்த் சுவாமியின் உடம்பில் சிறைப்பட்டுவிடும் ஜெயம் ரவி எப்படி மீண்டும் தன் உடம்பை அடைகிறார் என்றும், எப்படி அரவிந்த் சுவாமியை வீழ்த்துகிறார் என்பதும்தான் படத்தின் கதை.

டெபுடி கமிஷ்ணர் விக்ரமாக ஜெயம் ரவி நடித்துள்ளார். அரவிந்த் சாமிக்குத்தான் படத்தில் நிறைய ‘ஸ்கோப்’ இருக்கெனத் தெரிந்தும் நல்ல படத்தில் இருக்கவேண்டுமென்ற அவரது ஆவல் பாராட்டத்தக்கது. ‘டமாலு டுமீலு’ என அதீத ஹீரோயிசத்தைக் கொண்டாடும் துள்ளலான பாடலுடன் அறிமுகமாகிறார். அவர் நேர்மையான காவல்துறை அதிகாரி எனக் காட்ட, வழக்கம் போல் என்கவுன்ட்டரில் இருந்தே தன் ஹீரோயிசத்தைத் தொடங்குகிறார். அனைவரையும் சுட்டுக் கொல்வதுதான் அவரின் நோக்கம். கண் முன் எதிரில் ஓடிக் கொண்டிருக்கும் சிலரைச் சுட்டு வீழ்த்துகிறார்கள் ஜெயம் ரவியின் குழு; கடைசியாக கூரை மேல் ஓடிக் கொண்டிருப்பவனை மட்டும் சுடாமல், கூரையில் இருந்து அவன் க்ரேனில் தூக்கப்படும் மரக்கட்டைகளின் மீது குதிக்கும் பொழுது கூடவே சேர்ந்து குதிக்கிறார் ஜெயம் ரவி. அவன் அங்கிருந்து, கட்டடத்தைப் புதுப்பிக்க நடப்பட்டுள்ள கழிகளுக்குத் தாவும் போது இவரும் தாவி, பின் ஞாபகம் வந்தவராகத் துப்பாக்கி எடுத்துச் சுடுகிறார். நாயகனின் ‘டக்கு’ குறித்துக் குறிப்பால் உணர்த்த இயக்குநர் முன் யோசனையுடன் வைத்திருக்கும் காட்சி போலும்.

என்கவுன்ட்டர் காட்சி போதாதென மேலும் ஒரு படி மேலே சென்று வயிற்றைக் கலக்குகிறார் இயக்குநர். என்கவுன்ட்டர்களை முடித்து, உலகக் கோப்பையில் வென்ற விளையாட்டு அணியினர் போல் ஜெயம் ரவியின் குழு நடந்து வர, கொலைகளை வேடிக்கை பார்த்த மக்கள் கை தட்டி மகிழ்ச்சியாக ஆர்ப்பிக்கிறார்கள். என்ன கொடுமை இது லக்‌ஷ்மனா? அதிகாரத் துஷ்பிரயோகக் கொலைகளைக் கண்டு மக்கள் குதூகலிப்பார்கள் எனச் சித்தரிப்பது எவ்வகையில் தகும்?

ஆனால், வில்லனான அரவிந்த் சாமியோ மிக அமைதியாகவும் சாத்வீகமாகவும் ஆர்ப்பாட்டமின்றி லட்சக்கணக்கில் பணம் திருடி அசத்துகிறார். உல்லாசமாகத் திரியும் அவரைச் சிறையில் போட்ட பின் தான், தன்னிருப்பைத் தக்க வைக்க சில கொலைகளை அவர் செய்ய வேண்டியதாகப் போகிறது. பாவம் இளகிய மனம் கொண்ட அரவிந்த் சுவாமி, தயிர் சாதம் சாப்பிட்டதற்கு எல்லாம் ஃபீல் செய்து அழுகிறார். தனி ஒருவன் படத்தில், தன் அறிவுக் கூர்மையால் முதல்வரையே மிரட்டும் சித்தார்த் அபிமன்யு ஒரு விதப் பதற்றத்தை ஏற்படுத்துவார். ஆனால், இப்படத்தில் இலகுவாய் மாட்டிக் கொள்ளும் ஆதித்யாவாகிய அரவிந்த் சுவாமி, ஒரே ஓரு அறை வாங்கியதற்காகக் கொலை செய்யும் வழக்கமான வில்லனாக்கப்பட்டுள்ளார். அப்படியும், அவர் காட்டும் அலட்சியமும் செய்யும் சேட்டையும் ரசிக்கும்படி உள்ளது. முழுப் படத்தையுமே தன் ஸ்க்ரீன் பிரசென்ஸால் சுவாரசியப்படுத்தி விடுகிறார்.

அரவிந்த் சாமியை ஜெயம் ரவி கண்டுபிடிக்கும் விதமும், கைது செய்ய வகுக்கும் திட்டமும் நன்றாக உள்ளது. எதிர்பாராத நேரத்தில், நாசர் காட்டும் வில்லத்தனம் அழகான சர்ப்ரைஸாய் அசத்துகிறது. அதே போல், படத்தில் வரும் ஒரு காட்சி ஒரு கணம் பிரமிக்க வைத்தது. ‘காதல் என்பது நேரச்செலவு; நேசம் பாசம் போலி உறவு’ எனக் கருதும் ராஜ வம்சத்து ஆதித்யா, மகாலட்சுமியின் காதலை உணர்ந்ததும் ஒரு கணம் தடுமாறுகிறான். அந்தக் கண நேரத்தில், “அடடா, காமத்தை விட காதல்தான் உண்மையான போகம் என வில்லன் கண்டடைந்துவிட்டானோ!” என்ற உலக சினிமா மயக்கம் ஏற்பட்டது. வில்லன் என்றால் கதாநாயகனுடன் ஆடி புலி ஆட்டம் ஆட மட்டுமே என்பதில் மிகத் தெளிவாக உள்ளார் இயக்குநர். ஆனால், மதன் கார்க்கியும் தாமரையும், படத்தின் திரைக்கதையை விட தங்கள் பாடல் வரிகளால் படத்தின் கதைக்கருவிற்கு அதிக நியாயம் செய்துள்ளனர் என்றே சொல்லவேண்டும். இசையமைப்பாளர் இமானும், ஒளிப்பதிவாளர் செளந்தர் ராஜனும் பாடல் காட்சிகளை இழைத்துள்ளனர். சரியான இடத்தில் பொருந்தும்படி பாடல்களை இயக்குநர் வைத்திருப்பது சிறப்பு. மகாலட்சுமியாக வரும் ஹன்சிகாவின் திரைப்பங்கு வழக்கம் போல் பாடல்களோடு முடிந்து விடுகிறது. வம்படியாக அவரை க்ளைமேக்ஸுக்குள் இழுத்து விடாமல் இருந்திருக்கலாம்.

அரவிந்த் சாமி இரு கொள்ளைகளைச் சம்பந்தமே இல்லாத ஒரு மூன்றாம் நபரை வைத்து நிகழ்த்துகிறார். அது எப்படிச் சாத்தியமாகும்? ஒன்று, மிரட்டிச் சாதிக்கலாம்; இரண்டு, பணம் கொடுத்து செய்ய வைக்கலாம்; மூன்று, மாயம் மந்திரம் வசியம் ஏதாவது செய்து பலிகடாவாக்கலாம். முதல் இரண்டு வாய்ப்பில்லாத சமயத்தில், மூன்றாவது மட்டுமே இருக்கும் ஒரே ஆப்ஷனென ‘க்ளூ’ தருவது போல் ஒரு கொலையையும் டெமோ செய்து காட்டுகிறார் அரவிந்த் சாமி. ஆனால், நாயகனுக்குப் போதிய ‘டக்கு’ இல்லையென முன்பே சொல்லிவிடுவதால், அரவிந்த் சாமியிடம் வசமாகச் சிக்கிக் கொள்கிறார் ஜெயம் ரவி. ஏதேதோ செய்து தப்பித்து, மீண்டும் இரண்டாம் முறை சிக்குகிறார் நாயகன். கட்டிப் பிடித்து சண்டை போட்ட பிறகு க்ளைமேக்ஸில் தான் நாயகனுக்கு ஞானோதயமே பிறக்கிறது. இன்னும் சுவாரசியமான ஆடு புலி ஆட்டத்தைக் கொடுத்திருந்திருக்கலாம் இயக்குநர்.

அரவிந்த் சாமி, போகன்-2 படத்தின் மூலமும் ரசிகர்களை தன் ஸ்க்ரீன் பிரசென்ஸ் மேஜிக் மூலம் வசியம் செய்வாரென முதல் மட்டும் கடைசிக் காட்சிகளின் மூலம் நம்ப வைக்கிறார் லக்ஷ்மன். மகிழ்ச்சி.