Shadow

நவீன உலகத்தின் நன்னெறி

ஜனவரி 30, 2017 அன்று, மூன்றாம் ஆண்டு திரு. S.V.நரசிம்மன் நினைவுப் பேருரை விழாவை மயிலாப்பூரிலுள்ள ‘பாரதீய வித்யா பவன்’ ஏற்பாடு செய்திருந்தது. ‘உலகம் ஒரு குடும்பம்’ என்ற கருத்தியலையும், ‘உயர்ந்த சிந்தனைகள் எல்லாப் பக்கங்களில் இருந்தும் நம்மிடம் வரட்டும்’ என்ற குறிக்கோளும் உடையது பாரதீய வித்யா பவன். தங்கள் கருத்தியலையும் குறிக்கோளையும் பிரதிபலிக்குமாறு விருந்தினர்களைத் தேர்வு செய்திருந்தனர். அவர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசராகப் பணி புரிந்தவரான மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநர் திரு.M.K.நாராயணனும், புகழ்பெற்ற புத்த பிட்சுவான திரு. சாம்தாங் ரின்போச்சேவும் ஆவர்.

Bharatiya Vidya Bhavan Chennai

“சீன அரசாங்கம் தவத்திரு தலாய் லாமாவைத் திபெத்தில் இருந்து வெளியேறச் சொன்ன பொழுது, இந்தியா சார்பாக வரவேற்றதில் நானுமொருவன். அவருடன் வந்திருந்த குழுவில், தலாய் லாமாவின் நம்பிக்கைக்குரிய சாம்தாங் ரின்போச்சேவும் ஒருவர். தலாய் லாமா கேட்டுக் கொண்டதற்கிணங்கத் தேர்தலில் நின்று, பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, நாடு கடத்தப்பட்ட திபெத்தியர்களின் பிரதமாராக 2001 முதல் 2011 வரை 10 ஆண்டுகள் அப்பதிவியினை வகித்தவர்” என்றார் நாராயணன்.

“ரின்போச்சே என்றால் திபெத்திய மதத் தலைவர்களைக் குறிக்கும் சொல். அதன் பொருள் ‘விலை மதிப்பற்றவர்’ என்பதாகும். இவரது இயற்பெயர் லோப்சாங் டென்சின் என்பதாகும். 1939இல் பிறந்தவர். அவரது 5வது வயதிலேயே இவரை ‘நான்காம் சாம்தாங் ரின்போச்சே’ என அடையாளம் கண்டு, சொந்த கிராமத்திலிருந்து லாஸா மடத்திற்குச் சென்றார். ‘அக்காலங்களில் போதிய வசதி இருக்காதே! எப்படிச் சென்றீர்கள்?’ என நான் அவரை ஆச்சரியமாக கேட்டேன்.

‘குதிரையின் முதுகில் அமர்ந்தவாறு 75 நாட்கள் பயணம் செய்தேன்’ என்றார்.

ஏழு வயதில் புத்த பிக்குவாகப் பொறுப்பெடுத்துக் கொண்டவர், 1950இல் நாடு கடத்தப்பட்டு தலாய் லாமாவோடு இந்தியா வந்தார். பெளத்தத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர், வாரனாசியிலுள்ள திபெத்திய உயர் படிப்புகளான நிறுவனத்தின் (CIHTS) இயக்குநராக 1988 முதல் 2001 வரை பணி புரிந்துள்ளார். பெளத்தத்தில் மட்டுமல்ல காந்தீயத்திலும் மிகுந்த புலமை வாய்ந்தவர்.

மனிதர்களை விட அவர்களது சிந்தனைகளே முக்கியம் எனும் கொள்கை உடையவர்” என்று ரின்போச்சேவைப் பற்றி அறிமுகம் செய்தார் திரு.நரசிம்மனின் மகனான தொழிலதிபர் திரு. ஸ்ரீகாந்த் (Hauer DianaGroup of Companies). இவரது முன்னெடுப்பினால் தான் சென்னைக்கு வந்துள்ளார் ரின்போச்சே.

ரின்போச்சேவுக்குப் பேச அளிக்கப்பட்டிருந்த தலைப்பு, ‘The Buddha, The Mahatma & Ethics in a Material World’ என்பதாகும்.

“பொருளியல் உலகம் என்பது எப்பவுமே உலகத்திலிருப்பதுதான். மாடர்னைசேஷனைத் தான் மேட்டரியல் வேர்ல்ட் எனச் சொல்கிறார்கள் எனப் புரிந்து கொள்கிறேன். நவீன உலகத்தில் நன்னெறிகள், புத்தர், காந்தி ஆகிய மூன்றும் தனித் தனித் தலைப்புகள். அவைக் குறித்து எவ்வளவ் வேண்டுமானாலும் சொல்ல இருக்கிறது. மூன்றையும் ஒன்றாகக் கொடுத்து தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கியுள்ளார்கள்.

அஹிம்சை என்பது இந்தியாவிற்குப் புதிதல்ல. 1000 ஆண்டுகளுக்கு முன்பே, புத்தரும் மகாவீரரும் சொன்னதுதான். அவர்கள் அதை தனி மனிதன் ஞானம் அடைவதற்கான வழிமுறையாகக் கற்றுக் கொடுத்தார்கள். அன்றாட வாழ்க்கையில் அஹிம்சையைப் பயன்படுத்துவது பற்றித் தெளிவாக ஏதும் சொல்லவில்லை. புத்தரின் சம காலத்தில் வாழ்ந்த அரசர்கள், படையை/வலிமையை முற்றிலும் விட்டுவிடச் சொல்லி அறிவுரைக்கப்படவில்லை. நாட்டை நல்லபடி ஆட்சி செய்ய கொஞ்சம் வன்முறையைக் கைகொள்வது தவிர்க்க முடியாதென நம்பினார்கள்.

ஆனால், காந்தி அஹிம்சையை மிகப் பெரிய பரிமாணத்தில் முன் வைத்தார். சமூகம், பொருளாதாரம், அரசியல் என அனைத்துத் துறைகளிலும் அஹிம்சையைப் புகுத்தினார்.

Buddha & Gandhi

இங்கு பிரச்சனைகளின் வேராக இருப்பது, நம் வாழ்க்கை முறையாக நவீனத்துவத்தைத் (modernity) தழுவிக் கொண்டதுதான். நன்னெறிகளைப் பின்பற்ற நவீன உலகம் அனுமதிப்பதில்லை என்று தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். சில சமரசங்கள் செய்தால்தான் வாழமுடியுமென விவாதிக்கிறார்கள். அப்படி வாழவும், சமரசம் செய்துகொள்ளவும் என்ன கட்டாயம் ஏற்பட்டதென நான் கேட்பேன். பதிலிருக்காது.

20 வருடங்களுக்கு முன் ‘The Inconvenient Truth’ என்றொரு ஆவணப்படம் வந்தது. புவி வெப்பமயமாதல் குறித்த எச்சரிக்கையை விடுக்கும் படம் அது. இந்த ஆபத்துகள் எல்லாம் புரிந்தும், எந்த அமெரிக்கனும் தன் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள விரும்புவதில்லை. அதனால் நன்னெறிகள் குறித்துப் பேசுவதில் எந்தப் பயனுமில்லை. அதுவும் ட்ரம்ப் போன்றவர்கள் ஆளும் சூழலில். ஆனாலும், நன்னெறிகள் என்பது கொடுக்கப்பட்ட தலைப்பு என்பதால், நன்னெறிக்கான மூன்று முக்கியமான படிகளாக இந்தியப் பாரம்பரியம் சுட்டிக் காட்டுவதைப் பற்றிச் சொல்கிறேன்.

1. விலகியிருத்தல் (Refrain)
2. நற்பண்புகள் (Virtues)
3. இரக்க உணர்வு (Compassion)

சுயநலமாக இருப்பதில் இருந்து விடுபடவேண்டும். நமது வாழ்விற்காக யாரையும் சுரண்டக் கூடாது. ‘வாழு, வாழ விடு’ என்ற கொள்கையோடு இருப்பது ஒருவரின் நற்பண்புகளில் வரும். வாழுவதோடு மற்றவர்களுக்கு உதவுவதையும் கூடுதல் பண்பாகக் கொள்ள வேண்டும்.

மற்றவர்களுக்குச் சேவை செய்வதும், மற்றவர்களுக்காக வாழுவதும் இரக்க உணர்விலிருந்து எழும். சமூகத்தின் நலனைக் குறிக்கோளாகக் கொண்டு நமது விருப்பங்களை வகுத்துக் கொள்ளவேண்டும். அனைத்து உயிர்களையும் சமமாகப் பாவிக்கவேண்டும். எல்லா உயிர்களின் வேதனைகளையும் நமதாகப் பாவித்து, அதைப் போக்கப் பாடுபடவேண்டும்.

இரக்க உணர்வுதான் மனிதனின் இயற்கைப் பண்பு. அதனால் தான் மனித இனம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. நாம் யாரும் தனியாக இல்லை, ஒருவரையொருவர் நம்பியும் சார்ந்துமே வாழுகிறோம். ஆக உறவுகளையோ, லெளகீக வாழ்க்கையையோ துறக்கவேண்டிய அவசியமில்லை. நற்பண்புகளோடு வாழ்ந்தால் மட்டும் போதும்” என்றார் 77 வயது இளைஞர் ரின்போச்சே.

– தினேஷ் ராம்