Shadow

கடாவர் – மெடிக்கல் க்ரைம் த்ரில்லர் | அமலாபால் தயாரிப்பு

அமலா பால் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் நடிகை அமலா பால் கதையின் நாயகியாக நடித்து, முதன்முதலாகத் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கடாவர்’.

அறிமுக இயக்குநர் அனூப் எஸ்.பணிக்கர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்தப் படத்தில் அமலா பாலுடன் நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், திரிகுன், வினோத் சாகர், அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அபிலாஷ் பிள்ளை எழுதிய கதைக்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, ரஞ்சின் ராஜ் இசையமைத்திருக்கிறார்.

வருகின்ற ஆகஸ்ட் 12 ஆம் தேதி டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் இந்தப் படம் வெளியாகிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடைபெற்றது.

இயக்குநர் அனூப் எஸ். பணிக்கர், “2016 ஆம் ஆண்டில் இந்தக் கதையினை கதாசிரியர் அபிலாஷ் பிள்ளையுடன் இணைந்து திரைக்கதை எழுதினோம். பல்வேறு தயாரிப்பாளர்களைச் சந்தித்து இந்தக் கதையைக் கூறியபோது ஒவ்வொருவரும் பல ஆலோசனைகளை வழங்கி, படத்தின் மைய நோக்கத்தைத் திசை திருப்பவே முயற்சி செய்தார்கள். இதனால் சோர்வு ஏற்பட்டது.

இத்தருணத்தில் நண்பர் ஒருவர் மூலமாக அமலா பாலைச் சந்தித்தோம். அவரிடம் கதையைக் கூறியதும், ‘எனக்குப் பிடித்திருக்கிறது. நான் நடிக்கிறேன்’ என்றார். அதன் பிறகு தயாரிப்பாளரைத் தேடினோம். அமலா பால் நாயகி என்றதும் அவர்களின் எதிர்பார்ப்பு வேறாக இருந்தது.

பிறகு ஒரு கட்டத்தில் இந்தப் படைப்பை நானே தயாரிக்கிறேன் என அமலா பால் நம்பிக்கை அளித்தார். அத்தருணம் முதல் இப்போதுவரையிலும் அவர் எனக்குக் கடவுளாகவே காட்சி தருகிறார்.

2018 ஆம் ஆண்டில் இதற்கான பணிகளைத் தொடங்கினோம். இடையில் கொரோனா பாதிப்பு காரணமாகப் படத்தின் பணிகள் மிக மெதுவாக நடைபெற்றது. இருப்பினும் படத்தின் பணிகளை நிறைவு செய்தோம்.

படத்தை வெளியிட நினைத்தபோது, தவிர்க்க இயலாத பல தர்ம சங்கடங்களை எதிர்கொண்டோம். பிறகு ஒரு வழியாக இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் தளமான டிஸ்னி ஹாட் ஸ்டார், எங்களது ‘கடாவர்’ திரைப்படத்தினைத் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியிட்டு, எங்களது கனவை நனவாக்கியத்துடன், பிரம்மாண்டமாக வெளியிட்டு எங்களை பெருமைப்படுத்தியிருக்கிறது.

இந்தக் ‘கடாவர்’ படம் ஒரு மெடிக்கல் க்ரைம் திரில்லர். காவல் துறையில் பணியாற்றும் போலீஸ் சர்ஜன் ‘பத்ரா’வாக நடிகை அமலாபால் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இந்தக் கதாபாத்திரத்திற்காக சென்னை மற்றும் தமிழகத்தில் உள்ள பல மருத்துவமனைகளில் இடம் பெற்றிருக்கும் பிணவறைகளுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டார். அவரது கதாபாத்திரம் திரையில் நேர்த்தியாக தோன்றுவதற்கு, அவரின் அர்ப்பணிப்புடன் கூடிய முயற்சியும் ஒரு காரணம்” என்றார்.

ஆகஸ்ட் 12 ஆம் தேதி டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓ.டி.டி.யில் ‘கடாவர்’ வெளியாகிறது.‌