Shadow

அரசியல்வாதிகளை விடச் சினிமாக்காரர்களுக்குப் பொறுப்பு அதிகம் – பேரரசு

kadhal-ambu-audio-launch

காதல் அம்பு எனும் படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இவ்விழாவில் பேசிய நடிகர் ஆரி, “இப்படத்தில் நடித்தவர்கள், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று அனைவரும் புதுமுகங்கள். இவர்களைப் போல் இன்னும் நிறைய பேர் வரவேண்டும்.

இரண்டு மூன்று நாட்களாக, கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்று அந்நிகழ்ச்சியைப் பற்றியே அனைவரும் பேசுகின்றனர். ஆனால், இந்த விஷயங்களைத் தாண்டி நாம் பேச வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. அது சுபஸ்ரீயின் மரணம் தான். யாருக்கோ வைத்த பேனர் அது காற்றடித்ததில், அவ்வழியாக சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது விழுந்து, விபத்துக்குள்ளாக்கி இறந்துவிட்டார்.

இந்த விபத்திற்குப் பிறகு திமுக-வின் தலைவர் மு.க.ஸ்டாலின் இனிமேல் எங்கள் கட்சி விழாவிற்கு பேனர் வைக்கமாட்டோம் என்று கூறியிருக்கிறார். மக்களுக்கு நல்லது செய்யும் எந்தக் கட்சியாக இருந்தாலும் நான் ஆதரிப்பேன். அவர்களுக்கு ஓட்டுப் போடுவேன்.

அதேபோல், சினிமாத்துறை சார்ந்தவர்களும் பேனர் வைக்க மாட்டோம் என்று முடிவெடுக்க வேண்டும். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘தர்பார்’ படத்திற்கு பேனர் வைக்கக்கூடாது என்று அவர் கூறினால் நன்றாக இருக்கும்” என்றார்.

கதாநாயகன் ஸ்ரீனிவாச நாயுடு பேசும்போது, “நானும் பிரவீனும் ஒரே கம்பெனியில் பணிபுரிந்து கொண்டிருந்தோம். அப்போது உங்களை வைத்து ஒரு கதை எழுதியிருக்கிறேன் என்றார். முதலில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பிரவீனின் நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை சினிமாத்தனம் கலந்து இப்படத்தை இயக்கியிருக்கிறார். அதற்கு முன்பு இதென்ன இப்படி படம் எடுத்து வைத்திருக்கிறார்கள் என்று விமர்சனம் செய்து கொண்டிருப்பேன். ஆனால் இப்படத்தில் நடித்தபோது தான் ஒரு திரைப்படம் எடுப்பது எவ்வளவு கடினம் என்று தெரிந்து கொண்டேன்” என்றார்.

இயக்குநர் பேரரசு, “இப்படத்தின் ஒளிப்பதிவாளர் தமிழனாக இருந்தாலும், ‘கன்னடத்தில் 3 படங்கள் பணியாற்றியிருக்கிறேன், தமிழில் இதுதான் முதல் படம்’ என்றார். பிறமொழி திரைப்படங்களிலும் பணியாற்றுங்கள், ஆனால் பிறமொழிகளில் வெற்றி பெற்றால் வியாபார வெற்றி தான். தாய்மொழியில் வெற்றியடைவது தான் ஆத்ம திருப்தி தரும்.

இயக்குநர் பிரவீன் வெளிப்படையாகப் பேசினார். ஆள் பார்க்க சிறிய பையனாக இருந்தாலும், சினிமா அறிவு நிறைய இருக்கிறது. ‘இன்று போய் நாளை வா, ‘காதலிக்க நேரமில்லை’ என்று காதலை நகைச்சுவையாகக் கூறிய படங்கள் வெற்றியடைந்திருக்கிறது. அதேபோல், இப்படமும் வெற்றியடையும்.

இப்போது எந்தக் காரணமாக இருந்தாலும் மது அருந்துவது தான் இப்போதுள்ள கலாச்சாரம் என்று எல்லோர் மனதிலும் பதிந்து விட்டது. ஆகையால், இதுபோன்ற காட்சிகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அரசியல்வாதிகளை விடச் சினிமாக்காரர்களுக்கு பொறுப்பு அதிகம். அரசியல்வாதிகள் டாஸ்மாக் கடையைத் திறந்தால், சினிமாக்காரர்களான நாம் அதை மூட வைப்போம்” என்றார்.

இப்படத்தின் சிறப்பு விருந்தினர்களாக ‘ஜூனியர்’ பாலையா, பி.ஆர்.ஓ. பெருத்துளசி பழனிவேல், பி.ஆர்.ஓ. விஜய முரளி ஆகியோர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள்.

தொழில்நுட்பக் கலைஞர்கள்:

>> ஒளிப்பதிவு – விக்னேஷ் நாகேந்திரன்
>> இசை – சன்னி டான்
>> படத்தொகுப்பு – சுரேஷ் பாபு
>> இணை தயாரிப்பு – நவீன் குமார்
>> தயாரிப்பு – Dr. எம்.டி.சுரேஷ் பாபு
>> தயாரிப்பு நிறுவனம் – MDPC கிரியேஷன்ஸ் & ப்ரொட்க்ஷன்ஸ்.