Shadow

கோமாளி பாட்டுப்புத்தகம் – 90’ஸ் கிட்ஸ்களுக்காக

Comali-lyric-book

இன்று தொழில்நுட்ப வளர்ச்சி மிகுந்துவிட்ட நிலையில், 90’ஸ் கிட்ஸ்களின் கொண்டாட்டங்கள் எல்லாம் பழங்கதையாகி விட்டன. அதிலொன்று பாட்டுப்புத்தகம். அவை இன்று பரிணாம வளர்ச்சியடைந்து, பாடல் வரிகளுடன் கூடிய காணொளியாக (Lyrical video) உருமாற்றம் கொண்டுள்ளது. அப்பொற்காலத்திற்கு மீண்டும் செல்வது சாத்தியமில்லை எனினும், கோமாளி படக்குழு தங்கள் படத்துக்கும் பாட்டுப் புத்தகத்தை உருவாக்கி, ரசிகர்களை 90 களின் இனிய நினைவுகளில் திளைக்க வைக்க முடிவு செய்துள்ளனர்.

“ட்ரெய்லரை, அனைவரும் அதில் பொதிந்துள்ள ஜாலியான நகைச்சுவைக்காக விரும்புவார்கள் என நினைத்தோம். ஆனால், 90 களின் நாஸ்டால்ஜியாவில் ரசிகர்கள் திளைக்க ஆரம்பித்தது, நாங்கள் எதிர்பார்க்காதது. அதனால் அக்காலகட்டத்தில் சிறப்பான அம்சங்களை மீள் உருவாக்கம் செய்யத் திட்டமிட்டோம். அதன் முதல் படியாக, பாட்டுப்புத்தகம் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்.

முன்பெல்லாம், ஒரு படத்தின் இசை வெளியீடு நடந்தால், அந்தப் படத்தின் பாட்டுப் புத்தகம் மூலை முடுக்களிலெல்லாம் கிடைக்கும். சொல்லப் போனால், பாட்டுப் புத்தகங்களுக்கு முன்பதிவு எல்லாம் கூட நடக்கும். தற்பொழுது எல்லாம் மாறிய நிலையில், மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகளில், ஐந்து பாடல்கள் அடங்கிய கோமாளி படத்தின் பாட்டுப் புத்தகங்களில் விநியோகிக்கப்படும். ரசிகர்கள் படத்தின் சார்பாய் அங்கே நிற்பவரிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்” என்றது படக்குழு.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி படம் வெளியாகிறது.