Shadow

பிக் பாஸ் 3: நாள் 50 – ‘நாங்க பாவமில்லையா பிக் பாஸ்?’ – ஹவுஸ்மேட்ஸ் மைண்ட்வாய்ஸ்

bigg-boss-3-day-50

‘யாரடி நீ மோகினி’ பாடலுடன் தொடங்கியது நாள். கஸ்தூரி கெட்ட ஆட்டம் போட்டார். காலங்கார்த்தாலேயே இப்படி. கடவுளே! கடவுளே!

மன்னராட்சியில் குறைகளைக் களைவதற்குத் தர்பார் கூடியது. புதியதாக ஆட்சிக்கு வந்த கட்சிக்காரரைப் போல் தன் ஆட்சியில் கிடைத்த பலன்களைப் பட்டியிலிட்டுக் கொண்டிருந்தார். மன்னரும் அமைச்சரும் வீட்டைச் சுத்தம் செய்வதற்கு வருவதே இல்லை என்று மன்னரின் மீதே பிராது கொடுத்தனர் மக்கள். விரைவில் குறை தீர்க்கப்படும் என்று உறுதி கொடுத்தார் மன்னர்.

கிடைக்கும் சின்னச் சின்ன வாய்ப்பில் கூட ஸ்கோர் செய்வதால் தான் சாண்டியை எல்லோருக்கும் பிடிக்குது. இன்னிக்கும் மன்னர் வேஷத்துக்கு இருக்கின்ற ப்ராபர்ட்டீஸை வைத்து, ஒரு அட்டகாசமான அட்மாஸ்பியர் கிரியேட் பண்ணிருந்தார். ஹாட்ஸ் ஆப் சாண்டி & டீம்.

காலையிலேயே முகின் மூட் அவுட்டாக இருந்தார். அபியிடம் பேசவில்லை போல. சாப்பிட வந்த போதும் ஒரு வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு போனதில் அபி அப்செட். ஆனால் உண்மையான அப்செட் நாமினேஷனை நினைத்து தான் வந்துருக்குமென நினைக்கிறேன். ‘அபி கிட்ட பேசினியா? எப்படி இருகு உங்களுக்குள்ள?’ என முகினிடம் நலம் விசாரித்தார் ஷெரின். அந்தப் பக்கம் அபி அழுது கொண்டு இருந்தார். “பெண்களோட கண்ணீருக்கு வேல்யூ அதிகம், அதை வீணாக்காதே!” என மதுமிதாவிற்கு கஸ்தூரி கொடுத்த அட்வைசை அபிக்கு சொல்லிருக்கலாம் (வனிதா வருவதற்கு முன்னாடி எழுதினது).

நாமினேஷனில் எதிர்பார்த்த மாதிரியே அபி தான் முதல் டார்கெட்டாக இருந்தார். சாண்டியிடம் நாமினேஷன் பற்றிப் பேசக்கூடாதென ஏற்கெனவே எச்சரிக்கை கொடுத்தும், சாண்டியும், கவினும் நாமினேட் செய்தது அபி, மது ரெண்டு பேரையும் தான். சொன்ன காரணமும் ஒன்று தான். பேசி வைத்துக் கொண்டு ஒருத்தரை டார்கெட் செய்வது, எந்த விதத்திலும் ஒத்துக் கொள்ள முடியாத ஒரு விஷயம். அதுவும் இரண்டு வாரத்துக்கு முன்னாடி மது சொன்ன விஷயத்தை, இப்பொழுது சொல்லி நாமினேட் செய்ததை எப்படி எடுத்துக் கொள்வதெனத் தெரியவில்லை.

இதற்கு ஒரே காரணம் தான் இருக்க முடியும். நேற்று வெற்றி பெறுபவர்கள் பட்டியலில் மது மூன்றாவது இடத்தைப் பிடித்ததை இவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதைத் தவிர வேறெந்த காரணமும் சொல்ல முடியாது. குறைந்த பட்சம் முகின் சொன்ன மாதிரி, ‘எனக்குக் கடுமையான போட்டியாளர் தர்ஷன். அதனால அவர் பேர் சொன்னேன்’ என்ற மாதிரியாவது சொல்லிருக்கலாம்.

ஆச்சரியப்படும் விதமாக முகினை நிறைய பேர் நாமினேட் செய்தனர். சாக்‌ஷி – கவி பிரச்சினை பெரிதாகும் வரைக்கும் கவின் பேர் நாமினேஷனுக்கே வரவில்லை. ஆனால் முகின் பேர் இவ்வளவு சீக்கிரம் வருவது ஆச்சரியமாக தான் இருக்கு. லோஸ்லியா, ஷெரின் பேரை நாமினேட் பண்ணினார். சாக்‌ஷி ஷெரினை யூஸ் பண்றாங்க என தர்ஷன் சொன்ன குற்றச்சாட்டைச் சொல்லிக் கொடுத்துப் பேச சொன்னதே ஷெரின் தானென லாஸ் நம்புகிறார். இதை ஷெரினிடம் பேச முடியவிட்டாலும் கூட, தர்ஷனிடம் பேசியிருந்தால் உண்மை தெரிந்திருக்கும். அதையும் செய்யாமல் இப்படி ஒரு குற்றச்சாட்டைச் சொல்கிறார்.

கடைசியில் கவின், முகின், அபி, மது நான்கு பேருமே நாமினேஷன் ஆனார்கள்.

50 வது நாளை முன்னிட்டு பிரியாணி வந்தது. அதில் குலாப் ஜாமூனை மன்னரும், அமைச்சருமே திருடித் தின்றார்கள். வரும் வாரத்தில், இதைச் சொல்லிக் காண்பித்து, கமல் ஒரு அரசியல் பன்ச் அடிக்கப்போவது நிச்சயம்.

பிரியாணி சாப்பிட்ட மயக்கத்தில் எல்லோரும் கொஞ்சம் ஆழ்நிலை தியானத்துக்கு போக முயற்சி செய்தனர்.

இந்த வார லக்சரி பட்ஜெட்டுக்கான டாஸ்க் அறிவிப்பு வந்தது. இந்த வாரம் பிக்பாஸ் வீடு ஒரு ஹோட்டலாக மாறப் போகிறது. ஒரு முக்கியமான கெஸ்ட் வரப்போகிறார். அவங்க முகம் கோணாமல் நடந்து கொள்வது தான் முக்கியம். அவங்க கொடுக்கறது தான் இந்த வாரத்துக்கான மதிப்பெண்கள். எல்லோரும் டாஸ்க்கிற்குத் தயாரானார்கள்.

அந்த முக்கியமான விஐபியாக உள்ளே வந்தது வனிதா. கஜா புயலில் சிக்கிய டெல்டா மாவட்டங்கள் போல் சிக்கிச் சின்னபின்னமாகப் போய்விட்டது பிக் பாஸ் வீடு. மொத்தமாக, அப்பொழுது இருந்து வனிதா மட்டும் தான் பேசினார்.

ஷெரினிடம் மட்டும் அன்பாக ஆரம்பித்தார். “நான் எல்லாத்தையும் பார்த்துட்டு தான் வந்துருக்கேன். ஒரு வழி பண்றேன் இரு. எல்லாரும் இங்க வந்து உக்காருங்க, என்னய்யா நடக்குது இங்க? நான் போகும் போது இந்த வீடு எப்படி இருந்தது? இப்ப எப்படி இருக்கு? என்ன செய்யறிங்கன்னு உங்களுக்கே தெரியலை?

இந்தா புள்ள அபிராமி, இங்க வா என் பக்கத்துல வந்து உக்காரு. நான் வந்த முதல் நாளே என்ன சொன்னேன் (நீ என்னென்னமோ சொன்ன, அதையெல்லாம் ஞாபகம் வச்சுகிட்டு இருக்க முடியுமா? சாக்‌ஷிக்கு பதிலா நான் போயிருந்தா தியேட்டர் போய் அழுது டிவிட்டர்ல போட்ருப்பேன். என் கிரகம் உன்கிட்ட மாட்டிகிட்டேன். இன்னும் ஒரு வாரம் கழிச்சு வந்திருக்கப்படாதா? எப்படியும் இந்த வாரம் நான் தான்.)

அதைக் கேட்டியா நீ? இப்ப நீ அழுதேன்னா தலையில கல்லைத் தூக்கிப் போட்ருவேன்.

எங்க இந்த கஸ்தூரி? நீங்க என்னங்க மாலை மாத்திக்க சொல்ற அளவுக்கு போய்ட்டீங்க?”

“இல்லை, நான் வந்து…..”

“யாருமே எதிர்பார்க்கலை தெரியுமா? ரொம்ப ஓவர்.

ஏய் லாஸ்லியா, வாம்மா வா. என் பக்கத்துல வந்து உக்காரு. கஸ்தூரி, உங்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கிறேன், மிஷன் லாஸ்லியா, நான் இருக்கற வரைக்கும் நீங்க தான் என் அசிஸ்டன்ட் (3 நாளா வாய்க்கு வந்ததை எல்லாம் உளறி, ஒரு இமேஜ் பில்ட் அப் பண்ணி வச்சுருந்தேன், 10 நிமிசத்துல இப்படி சல்லி சல்லியா நொறுக்கிட்டாளே!)

வாடி… மகளே நீ மாட்டுன.. (லாஸ்லியா கூடு விட்டு கூடு பாய்ந்து கொண்டிருந்தார். வழக்கம் போல அவரு மட்டும் தான் அங்க இருந்தாங்க)

மது, நீ நல்ல ஸ்ட்ராங்கா இருக்கே! இப்படி தான் இருக்கனும். இரும்பை அடிக்க அடிக்கத்தான் அது இரும்பாகும், இல்லேன்னா அது எறும்பாயிடும். ஆனா இப்ப வர வர நீ வீக்காயிட்டே இருக்க, உன் வீக்னெஸ் வெளிய தெரியுது (மது தன் செஃப் உடையை ஒரு முறை சரி செய்து கொள்கிறார்)”

மது – “ஙே!!”

“அபிக்கு, பெண்களோட கண்ணீருக்கு வேல்யூ அதிகம், அதை வீணாக்காதேன்னு கஸ்தூரி உருப்படியா ஒரு அட்வைஸ் கொடுத்தாங்க. அதையே உனக்குச் சொல்றேன். இனிமே யாராவது பொண்ணுங்க அழுதா உன்னைச் சொல்லித்தான் கிண்டல் பண்ணுவாங்க (இப்ப நான் அழணுமா? வேண்டாமா).

பெரியவங்க நீங்க எல்லாம் இருக்கீங்கன்னு தானே நம்பி விட்டுட்டுப் போனேன். நீங்கல்லாம் இருந்தும் இப்படி நடக்க விடலாமா? (ம்க்கும், நானு? பெரியவன்? அட ஏம்மா நீ வேற, இங்க இருக்கறவன் ஒருத்தன் கூட அப்படி நினைக்கிறதே இல்லை, எவனும் மரியாதையே கொடுக்கறதில்லைன்னு விசனத்துல இருக்கேன், நீ வேற வந்து காமெடி பண்றியே!).

ஆனாலும் அந்தப் பிரச்சினை நடக்கும் போது உங்களுக்குக் குரல் கொடுக்க நான் இல்லையேன்னு ரொம்ப வருத்தப்பட்டேன் சார் ( நீ இங்கேயே இருந்திருந்தா, நாங்கெல்லாம் அப்படி ஒரு ஓரமா தின்னுட்டு, தூங்கிட்டுக் கிடந்திருப்போம், அப்புறம் எங்கிட்டு பிரச்சினை வர்றது?)

ஏம்பா தர்சன் உனக்கு டைட்டில் வேணும்னா போட்டி போட்டு வாங்கு. அவங்க பிச்சை போட்டா வாங்கிப்பியா? இது ஒன்னும் மிஸ்டர் மெட்ராஸ் இல்லை. தியாகம் செய்யறதுக்கு இது ஒன்னும் ‘கிழக்கு சீமையிலே’ படம் இல்ல, உள்ள வந்து லவ்ஸ் பண்ணிட்டு இருக்க, இது வந்து எங்க வீட்டு மாப்பிள்ளை சீரியல் இல்ல, என்ன நினைச்சுட்டு இருக்கீங்க எல்லாரும்? (@#₹₹%&&&₹@@”&-++++&%₹@@”-!::%₹&– ஒன்னும் இல்ல, தர்ஷனோட மைண்ட் வாய்ஸ்)

கவின் உங்கிட்ட நிறைய பேசனும்ன்னு நினைச்சேன், ஆனா இனிமே பேச மாட்டேன் (அப்பாடா). ஆனா ஒன்னு (அய்யய்யோ),
இந்த லவ் எல்லாத்தையும் தூக்கிப் போட்ருங்க, நான் எல்லாருக்கும் சொல்றேன். வொர்த்தே இல்லை (ஆத்தா நான் அதைத் தூக்கிப் போட்டு வாரமாச்சு. இனிமே தான் லாஸ்லியாவை டார்கெட் செய்யணும். அதுக்குள்ள நீ வந்துட்டியே ஆத்தா!)

தப்புன்னு தெரிஞ்சா தட்டிக் கேக்கனும், என்ன சாண்டி? தேவையான இடத்துல பேசணும், இல்லேன்னா வேஸ்ட். என்ன நடந்தா எனக்கென்னனு இருக்கக்கூடாது (ஏன்டா கேப்டன்சிப் கொடுத்து 3 நாள் தான் ஆச்சு, நானும் மன்னர்ன்னு செட்டப் பண்ணி வச்சுருந்தேன், அதுக்குள்ள ரூம் சர்வீஸ் யூனிஃபார்ம் கொடுத்துட்டீங்களேடா?)”

“எந்த விஷயத்துல நாங்க பேசலைன்னு குறிப்பிட்டுச் சொன்னா..” எனக் கேட்ட சேரனை மற்ற ஹவுஸ்மேட்ஸ் பீதியாகப் பார்க்கின்றனர் (அவங்களே நான்-ஸ்டாப்பா போய்கிட்டு இருக்காங்க், இவரு வேற, இருய்யா இந்தக் காரணத்தை வச்சே அடுத்த வார நாமினேஷன்ல குத்தி விடறோம்).

இருங்க நான் டாபிக் மாறிட்டேன் (ஸப்பா). தர்ஷன் உங்கிட்ட தானே விட்டேன் (@@##₹%&&).

(டேய் இருடா கோபத்துல பேசின கெட்டவார்த்தையே பேசிட்டிருக்க? இந்தத் தடவை உன்னைப் பத்தி நல்லதா சொல்றேன்… )

(சொல்லித் தொலைங்க)

தர்சன் கிட்ட அந்த தைரியம் இருக்கு, நானே பார்த்துருக்கேன். அப்புறம் யாராவது மிச்சம் இருக்கீங்களா? இருங்க கொஞ்சம் தண்ணி குடிச்சுக்கறேன்.

அதாவது, பார்த்த நமக்கே பத்தாயிரம் வோல்டேஜ் தாக்கினா மாதிரி இருந்தது. ஹவுஸ்மேட்ஸ் நிலைமை ரொம்பப் பாவம் தான்.

மகாதேவன் CM