Search

டியர் காம்ரேட் விமர்சனம்

dear-comrade-movie-review

காம்ரேட் என்றால் தோழர். முக்கியமாக கம்யூனிசத்தை அரவணைத்துக் கொண்டவர்கள், தங்கள் சங்கத்தின் சக உறுப்பினர்களைத் தோழர் என்றோ, காம்ரேட் என்றோ அழைப்பார்கள். ‘நீ நினைப்பதைச் சாத்தியமாக்க சக காம்ரேடாக உன் வாழ்நாள் முழுவதும் துணையிருப்பேன்’ என நாயகன் நாயகியிடம் கூறுகிறார். ஒரு காம்ரேடாக தான் சொன்னதை நாயகன் எப்படிச் செய்து காட்டுகிறார் என்பது தான் படத்தின் கதை.

சமீபமாக, தமிழ்ப் படங்களின் கால அளவு இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவோ, அல்லது அதிகபட்சம் இரண்டரை மணி நேரத்திற்குள்ளாவது இருக்கிறது. ஆனால், தமிழில் டப் செய்யப்பட்டுள்ள தெலுங்குப் படமான இதன் கால அளவு 169 நிமிடங்கள். எனினும் படம் பார்க்கும் பொழுது இந்த நீளம் பெரிய குறையாகத் தெரியாதளவு சிறப்பாக எடுத்துள்ளார் இயக்குநர் பரத் கம்மா.

இடைவேளை வரையிலான படமே ஒரு முழுமையான காதல் கதையைப் பார்த்த உணர்வைத் தருகிறது. இரண்டாம் பாதியில், பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளைச் சாடி, வேறொரு பரிமாணத்தில் தீவிரமாகப் பயணிக்கிறது படம். கிட்டத்தட்ட அர்ஜுன் ரெட்டி படத்தில் வந்தது போலவே, கோவக்கார இளைஞனாக விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். அது பெரிதும் உறுத்தாத வண்ணம், அபர்ணா தேவி எனும் கதாநாயகி பாத்திரத்தை மிக நன்றாகப் படைத்துள்ளார் இயக்குநர் பரத் கம்மா. விஜய் தேவரகொண்டா தனது அழகாலும் நடிப்பாலும் ஈர்த்தாலும், படத்தைச் சுமப்பது கதாநாயகியான ராஷ்மிகா மந்தண்ணா தான். அவரது சின்னச் சின்ன பாவனைகள் கூட மிக அழகாய் உள்ளன. அவரது மன உணர்வுகளைப் படத்தில் மிக நுட்பமாகப் பதிந்துள்ளார் இயக்குநர்.

நோட்டா படத்தைத் தவிர, விஜய் தேவரகொண்டாவின் பெரும்பாலான படங்களில், அவரது நண்பர்களாக நடிப்பவர்களுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும். இப்படத்தில் அவரது அத்தனை நண்பர்களும் மனதில் பதியும்படி சிறப்பாகப் பின்னப்பட்டுள்ளது திரைக்கதை. 2-3 காட்சிகளில் சில நொடிகளே வந்தாலும், மூத்த காம்ரேடான சாரு ஹாசனின் கதாபாத்திரமும் வலுவாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. அனைத்துக் கதாபாத்திரங்களுமே, கதைக்கு எந்த அளவு தேவையோ அந்த அளவு மட்டுமே பயன்படுத்தப்பட்டிருப்பதே காரணம்.

மனதில் குழப்பமென்றால், உடனே ‘புல்லட்’டில் ஒரு ரோட் ட்ரிப் போனால் சரியாகிவிடும் என்று தென்னிந்திய இயக்குநர்கள் தொடர்ந்து சிபாரிசு செய்கின்றனர். பெரிய பட்ஜெட் படமென்றால் இமயமலைக்கு ட்ரிப் போவார்கள் நாயகர்கள். குழப்பத்திலிருந்தும், வருத்தத்தில் இருந்து மீளவும், ஒரு காம்ரேடாக முழுமை பெறவும், விஜய் தேவர்கொண்டாவும் புல்லட்டில் இமயமலைக்குப் போயே ஞானம் எய்துகிறார். மலை மீது காதல் இல்லாத படைப்பாளிகள் தான் ஏது? தீவிர மனச்சோர்வில் இருந்து மீள, நாயகிக்கும் ஓர் அருவி தேவைப்படுகிறது.

கூறியது கூறலாக சில காட்சிகள் நீண்டாலும், சுஜித் சரங்கின் ஒளிப்பதிவு, பல இடங்களில் மலையாளப் படத்தைப் பார்க்கின்றோமோ என்ற தோற்ற மயக்கத்தை ஏற்படுத்தும் வண்ணம் ரம்மியமாக உள்ளது. படத்தின் நீளம் ஒரு பொருட்டல்ல என்றால், அணு அணுவாய் ரசித்திட ஏற்ற படம்.