தபால் கார்த்திக்கின் கனவில், வெள்ளைக் குதிரையுடன் ஒருவர் வந்து யாராவது இறந்து விடுவார்கள் எனச் சொன்னால் அது பலித்துவிடும். அவனது தங்கை குங்குமத்தேனுக்கு, பல சம்பந்தங்கள் தள்ளிப் போய், ஒரு நல்ல வரன் அமைகிறது. ஆனால், கல்யாணம் ஆன இரண்டு நாளில் கார்த்தியின் மச்சான் அழகர் என கனவு வர, தன் மச்சானின் உயிரை எப்படியாவது காப்பாற்ற நினைக்கிறான் கார்த்திக். கனவில் கண்டது நடந்ததா, இல்லை கார்த்திக்கால் தன் மச்சான் அழகரைக் காப்பாற்ற முடிந்ததா என்பதே படத்தின் கதை.
இந்தப் படத்தின் தொடக்கப்புள்ளி, விலங்கு இணைய தொடரின் படப்பிடிப்பில் போடப்பட்டதால், பாலசரவணனையும், கிச்சா ரவியையும் படத்துக்குள் கொண்டு வந்துவிட்டார்கள். பாலசரவணன் ஓரளவு படத்தின் கலகலப்பிற்கு உதவினாலும், திரைக்கதை ஒத்துழைக்காததால் விழலுக்கு இறைத்த நீராகிவிடுகிறார். கிச்சா ரவியும் கைவிட, அவரது மனைவியாக நடித்துள்ள தீபா சங்கர் மட்டும் தன் அதீத நடிப்பால் கிச்சுகிச்சு மூட்ட முயற்சி செய்துள்ளார். விமலுக்கு ஜோடியாக நேஹா ஜா தோன்றியுள்ளார். திரைக்கதையில் அப்படியொரு பாத்திரம் உள்ளது என்பதையே இயக்குநர் மார்ட்டின் நிர்மல்குமார் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.
தயாரிப்பாளர்களில் ஒருவரான வத்சன் வீரமணி அழகர் எனும் கதாபாத்திரத்தில் வருகிறார். படத்தில் இரண்டாவது நாயகன் என்றே சொல்லலாம். அவருக்கு ஜோடியாகவும், விமலின் தங்கை குங்குமத்தேனாகவும், பிக்பாஸ் புகழ் அனிதா சம்பத் நடித்துள்ளார். நாயகிக்குத்தான் வாய்க்கவில்லையே தவிர்த்து, குங்குமத்தேன் எனும் பாத்திரத்தைப் படம் முழுக்க வருவது போல் அழுத்தமாகப் படைத்துள்ளார் இயக்குநர். விமலின் அப்பாவாகப் பாண்டியராஜன் நடித்துள்ளார். விமல் தன்னந்தனியாகப் படம் முழுக்க நகைச்சுவைக்காகப் போராடுவது அப்பட்டமாகத் தெரிகிறது.
படத்தில் நகைச்சுவைக்கான கூறுகள் இருந்தாலும், அவை தாக்கத்தை ஏற்படுத்தும்வண்ணம் பெரிதாக எடுபடவில்லை. குறிப்பாகப் படத்தின் முதற்பாதியில், கதாபாத்திரங்கள் என்ன செய்வதன்று தெரியாமல் பரிதாபமாக என்னவோ பேசி ஒப்பேற்றிக் கொண்டிருக்கிறார்கள். மச்சானைக் காப்பாற்றியே ஆகவேண்டுமென்ற நிர்ப்பந்தம், இடைவேளைக்குப் பிறகு விமலுக்கு ஏற்பட்ட பின் தான் கதையில் நகைச்சுவையும் எட்டிப் பார்க்கிறது. அவசரப்படாமல் நிதானமாகத் திரைக்கதையில் மெனக்கெடல் செய்திருந்தால் முழு நீள நகைச்சுவையாகப் படம் கவர்ந்திருக்கும்.