Shadow

NFIFWI – 66 வருட சாதனையும் கொண்டாட்டமும்

ஈராண்டுகளுக்கு ஒருமுறை நிகழும், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) வளர்ச்சி அதிகாரிகளுடைய பிரிவின் சார்பாக NFIFWI (National Federation of Insurance Field Workers of India) – இன் 30 ஆவது கூட்டமைப்பு கவுன்சில் சந்திப்பு 2023 எனும் நிகழ்வு, இந்தியாவெங்கும் இருந்து வந்த சுமார் 4000 வளர்ச்சி அதிகாரிகள் பங்கு கொள்ள, சென்னை வர்த்தக மையத்தில், ஏப்ரல் 18 மற்றும் 19 ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது.

இந்த பிரம்மாண்டமான நிகழ்வை, மாண்புமிகு மத்திய நிதித்துறை இணையமைச்சர் டாக்டர் பகவத் கிஷன் ராவ் கரத், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் செகாவத், NFIFWI இன் அகில இந்தியத் தலைவர் திரு. வினய் பாபு, NFIFWI இன் பொது செயலாளர் திரு. விவேக் சிங் ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது. அப்பொழுது, எல்.ஐ.சி. -இன் மண்டல மேலாளர் திரு. G. வெங்கடரமணன், பிராந்திய மேலாளர் திரு. R. சந்தர் ஆகியோரும் உடன் இருந்தனர்.

இந்தக் கூட்டமைப்பு கவுன்சிலின் நோக்கமானது, எல்.ஐ.சி. -இன் வளர்ச்சி அதிகாரிகளின் மேம்பாட்டைப் பாதிக்கும் காரணிகள்; கோவிட் 19க்கு முந்தைய – பிந்தைய சூழல்; ஐபிஓ (IPO – ஆரம்ப பொது வழங்கல்) வெளியீட்டுக்குப் பிறகு எல்.ஐ.சி.யில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்; பாலிசிதாரர்கள் தொடர்பான சிக்கல்கள்; தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி சிறந்த சேவைகளை வழங்குதல் முதலியவற்றைக் குறித்து விரிவாகப் பகுத்தாய்ந்து விவாதிப்பதாகும்.

திரு. விவேக் சிங், தனது உரையில், பொது மக்களுக்கும் குறிப்பாக பாலிசிதாரர்களுக்கும் சேவைகளை மேம்படுத்துவதற்காக NFIFWI எடுத்திருக்கும் பல்வேறு நடவடிக்கைகளைக் குறித்துப் பேசினார். தனியார் நிறுவனங்களின் போட்டியையும் மீறி, மொத்தச் சந்தைப் பங்கில் 75% அளவு எல்.ஐ.சி. தக்க வைத்திருப்பதைப் பற்றிப் பிரத்தியேகமாகக் குறிப்பிட்டார்.

டாக்டர் பகவத் கிஷன் ராவ் கரத், தனது உரையில், சிறப்பான சேவையை அளிக்கச் செயற்பாட்டு முறையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவது காலத்தின் தேவையாக உள்ளது என்றார். 67 ஆண்டுகளாக எல்.ஐ.சி. தேசத்திற்குச் சேவை செய்து வருவதையும், அதில் 66 ஆண்டுகளாக NFIFWI, சிறப்பான பங்கு வகித்து வருவதையும் சுட்டிக் காட்டினார். மாண்புமிகு பிரதம மந்திரியின் கொள்கை வாசகங்களான,

  1.  வங்கிக் கணக்கு இல்லாதவர்களிடம் வங்கிச் சேவையைக் கொண்டு சென்று வங்கியியல் சேவையை அதிகரித்தல்.
  2.  நிதிப் பற்றாக்குறை காரணமாக வளர்ச்சியுராத பகுதிகள் மேம்பட நிதியளித்தல்.
  3. காப்பீடு செய்யப்படாதவர்களுக்குக் காப்பீடு செய்தல்.

ஆகியவற்றை மேற்கோள் காட்டிப் பேசினார்.

எல்.ஐ.சி. வளர்ச்சி அதிகாரிகளின் மாபெரும் ஒருங்குகூடலில் பேசிய திரு. கஜேந்திர சிங் செகாவத், வாழும்போதும் அதற்குப் பிறகும் காப்பீட்டுத் தொகையை வழங்கி, தேசத்திற்கு முன்னுதாரணமான சேவைகளை எல்.ஐ.சி. அளித்து வருவதாகப் புகழ்ந்தார். அத்தகைய சேவை சாத்தியமாகக் காரணமான, வளர்ச்சி அதிகாரிகளின் அளப்பரிய பங்களிப்பை மிகவும் பாராட்டினார்.

இந்நிகழ்வில் உரையாடிய திரு. வினய் பாபு, எல்.ஐ.சி. இன் வளர்ச்சி அதிகாரிகள் எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பற்றிக் குறிப்பிட்டார். அத்தகைய சிக்கல்களைக் களைய எல்.ஐ.சி. நிர்வாகத்துடன் இணைந்து செயற்பட்டு தீர்வு காண்பதே, கூட்டமைப்பு கவுன்சில் சந்திப்பின் பிரதான நோக்கம் என்றார்.