Search

டாக்டர் விமர்சனம்

நோயாளிகளைக் காப்பாற்ற அறுவை சிகிச்சைக்காகக் கத்தியைப் பிடிக்கும் மருத்துவர், ஒரு கடத்தல் கும்பலை எதிர்கொள்ள நேருகிறது. தன்னை வேண்டாம் என்ற நிராகரித்த பெண்ணின் வீட்டில் ஒரு குழந்தை கடத்தப்படுகிறது. அந்த வீட்டிற்கு சிவகார்த்திகேயன் உதவச் செல்கிறார். ஆனால் கடத்தப்பட்டிருப்பது ஒரு குழந்தை அல்ல பற்பல எனத் தெரிய வருகிறது. அவர்களை எல்லாம் சிவா எப்படி மீட்டார் என்பதுதான் படத்தின் கதை.

ஸ்மார்ட்டான சிவகார்த்தியன், துளியும் அலட்டல் இல்லாத நேர்த்தியான நடிப்பை கொடுத்திருக்கிறார். மறந்தும் கூட பன்ச் வசனம் வைக்கவில்லை. சிறப்பு. பிரியங்கா அருள்மோகன் அழகோ அழகு. அவரையும் சரியாகக் கதைக்குள் பொருத்தி இருப்பதால் அவர் கொஞ்சமே நடித்தாலும் நன்றாகவே இருக்கிறது. கிங்ஸ்லியும் யோகிபாபுவும், டாக்டர் படத்தின் திரைக்கதைக்கு அனுபவம் வாய்ந்த செவிலியர்களாக இருந்து படத்தைக் காப்பாற்றுகிறார்கள். வினய் நடிப்பும் சரி அவரது மேனரிசமும் சரி ரொம்ப சராசரி. ஹீரோ கேரக்டரில் இருக்கும் ஷார்ப்னெஸ் வில்லன் கேரக்டரில் இல்லாததாலும் வினய் வீக்காகத் தெரிகிறார். அர்ச்சனா கடத்தப்பட்ட குழந்தையின் அம்மா கேரக்டரில் மிகச் சீரிசயாக நடித்துள்ளார்.

கோலமாவு கோகிலா படத்தின் இயக்குநருடைய அடுத்த படைப்பு என்பதால், பார்வையாளர்களுக்குப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடுதலாக இருந்தது.   வசனங்களில் நெல்சனிசம் நிறையவே இருக்கிறது. ரொம்பவே சாதாரண ஆட்களை வைத்து ஒரு பெரிய விசயத்தைச் சாத்தியப்படுத்த நிறைய முன் உழைப்பு வேண்டும். அதைப் படத்தின் மெயின் கேரக்டர் செய்ய வேண்டும். ஆனால் சிவா அப்படி எங்கும் செய்தமாதிரி இல்லை. மேலும் பலம் பொருந்திய மாஃபியாவிடம் சிவா அசால்டாக டீல் பேசுவதும், அதை விட வில்லன் வினய் டீம் அதை நம்புவதும் காதில் பூ சுற்றும் ரகம். ஆனால் இவற்றை எல்லாம் மறக்க வைக்கிறது படத்தில் உள்ள நகைச்சுவைப்பகுதி.

படத்தின் மேக்கிங்கில் துளியும் குறையில்லை. ஒவ்வொரு ஃப்ரேமையும் ரசித்து எடுத்திருக்கிறார் நெல்சன். ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்திற்குப் பெரும்பலம்.

இன்னும் கொஞ்சம் டாக்டரின் கத்தியும் புத்தியும் கூராக இருந்திருந்தால் வேற லெவல் சினிமா கிடைத்திருக்கும். இப்பவும் குறையில்லை. நகைச்சுவையின் ஆசீர்வாதத்தில் திரையரங்கம் நிறையும்.