Shadow

உடன்பிறப்பே விமர்சனம்

ஜோதிகாவின் 50 ஆவது படம். தனது இரண்டாவது இன்னிங்ஸில், நாயகியை மையப்படுத்தும் கதைகளாகத் தேர்வு செய்து அசத்தி வருகிறார். எல்லா வயதினருக்கும் இங்கே ஒரு வாழ்க்கையும் கதையும் உண்டு என்பதைத் தமிழ் சினிமா பொருட்படுத்துவதில்லை. நாயகனுக்கு எத்தனை வயதானாலும், நாயகியைச் சுற்றியோ, சுற்றி வர வைத்தோ காதல் செய்யும் கதாபாத்திரங்களையே ஆண் நடிகர்கள் விரும்ப, கதையின் நாயகியாகத் தன்னைத் தகவமைத்துக் கொண்டு தனக்கென்றொரு தனிப்பாதையை உருவாக்கி, அனைவருக்கும் முன்மாதிரியாக உருமாறியுள்ளார் ஜோதிகா. இவையெல்லாம், சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட்டாலே சாத்தியமாகியுள்ளது.

இம்முறை, சசிகுமார், சமுத்திரக்கனி என இரண்டு நாயகர்களுடன் திரையேறியுள்ளார் ஜோதிகா. சசிகுமார், ஜோதிகாவின் அண்ணனாகவும், சமுத்திரக்கனி, ஜோதிகாவின் கணவராகவும் நடித்துள்ளனர். சட்டத்தை மதிக்கும் அகிம்சை கணவருக்கும், சத்தியத்தை மதிக்கும் அடிதடி அண்ணனுக்கும் இடையில் மத்தளமாய் சிக்கிய மாதங்கி கதாபாத்திரத்தில் ஜோதிகா படத்தின் அச்சாணியாக உள்ளார்.

இன்ன கதை என யூகிப்பதில் பெரிய சிரமம் இல்லை. ட்ரெய்லரையும், டீசர்களையும் பார்த்தவர்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல் கதை தெரியும். இது போன்ற குடும்ப உறவுகளை மையப்படுத்திய படங்களின் வெற்றி என்பது, உறவுகளுக்கிடையே ஒரு சிக்கலை ஏற்படுத்தி, பார்வையாளர்களிடம் ஒரு நெகிழ்வுத்தன்மையை உருவாக்கி மகிழ்ச்சியான தருணத்திற்கோ, அல்லது ஒரு பாரமான முடிவிற்கோ இட்டுச் செல்வதுதான். உடன்பிறப்பேவில் அத்தகைய கதைப்பயணத்தைச் சாத்தியமாக்கியுள்ளார் இரா.சரவணன்.

காட்சிகளுக்கான பின்னணி இசையை விட, படத்தின் கருவிற்கான ஒலிப்பதிவைத் தலைப்புக்குத் துணை செய்யும்படி படரவிட்டுள்ளார் டி. இமான். படம் தொடங்கியது முதல் இமானின், ‘அண்ணே, யாருண்ணே, மண்ணுல உன்னாட்டும்’ என பாசமான இசையைப் படம் நெடுகும் பின்னணியில் ஒலித்தவண்ணமே உள்ளது. ஜோதிகாவின் ஏக்கமான பாவனையும், இமானின் இசையும், ஜோதிகாவும் சசிகுமாரும் சீக்கிரம் இணைந்துவிடவேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்த வண்ணம் உள்ளது.

மகாபாரதத்தில், யுதிஷ்ட்ரர் ஒரு சகோதரனை மட்டும் உயிர்ப்பித்துக் கொள்ளலாம் என யக்‌ஷன் நிபந்தனை விதிக்கும் பொழுது, தன் சிற்றன்னையான மாத்ரியின் மைந்தர் நகுலன் பெயரைச் சொல்வார். அவரது முடிவு விருப்பு வெறுப்பற்ற அறம் சார்ந்தது. அது போல், தண்ணீரில் சிக்கிய இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தையைத் தான் காப்பாற்ற இயலும் என்ற சூழல் வரும் பொழுது, ஜோதிகா, பெற்ற மகனைத் தாரை வார்த்து அண்ணனின் ஒற்றை மகனைக் காப்பாற்றுகிறார். யுதிஷ்ட்ரனின் தர்மத்தையும் மிஞ்சிய அசாதாரண செயலிது. ஏனெனில் உலகில் மிகவும் கொடுமையானது புத்திர சோகம். அச்சோகத்தைத் தேர்ந்தெடுக்குமளவு ஜோதிகாவின் சகோதரப் பாசம் மிகவும் உயர்ந்ததாய் உள்ளது. இவ்வகை கடுமையான முடிவுகளை எடுக்க உறுதியான மனம் வாய்த்தவர்களால் தான் இயலும். அப்படியான அழுத்தமிகு கதாபாத்திரம் ஜோதிகாவிற்கு வாய்த்திருக்கிறது. நியாயமாக, ‘உன்னாட்டும் தங்கை யாருண்டு’ என சசிகுமார் தான் உருகியிருக்க வேண்டும். பட முடிவில், மாதங்கியான ஜோதிகாவிடம் “நீ தான்ம்மா சாமி” என சமுத்திரக்கனி சரண் அடைவது ஆறுதல். அப்புள்ளியில், நவராத்திரிக் கொண்டாட்டத்திற்கான பெர்ஃபெக்ட் படமாக ‘உடன்பிறப்பே’ ஏற்றம் காண்கிறது.