Shadow

ஆட்டிசம் – விழிப்புணர்வு கருத்தரங்கு

Autism Awareness

ஆட்டிச விழிப்புணர்வு வாரத்தின் பொருட்டு, ஏப்ரல் 8 அன்று, ட்ரைமெடும் நியூரோக்ரிஷும் இணைந்து, The Future of Autism Care என்ற கருத்தரங்கை நிகழ்த்தினார்கள்.

ட்ரைமெட்-இல், மனம் மற்றும் மூளைப் பராமரிப்பிற்கான பிரத்தியேக சிகிச்சை முறையை வடிவமைத்துள்ளனர். ‘புத்தி (Buddhi)’ என்ற அந்தத் திட்டத்தின் கீழ், வித்யாசாகரிலுள்ள 7 முதல் 21 வயது வரையுள்ள 20 ஆட்டிச சிறுவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளித்து ஓர் ஆய்வினை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்தாற்போல் 7 நாட்கள், ஆயுர்வேதம் (Shriroabhyanga), Acupressure, Refloxology போன்ற 21 வகையான தெரபிகள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

TriMed - BUDDHI Programme

ட்ரைமெடின் இந்தச் சிகிச்சை முறையால், குறிப்பிட்டுச் சொல்லும்படியான நல்ல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. அந்த ஆய்விற்கு ஒத்துழைத்த 18 பேரின் முடிவுகள் பின்வருமாறு:

 SleepAppetiteBehavorial Problem
Good result151012
No change224
Got worser142
Result not taken020

கருத்தரங்கின் சிறப்புப் பேச்சாளராக, நிமான்ஸ் (NIMHANS) மருத்துவர் ஷோபா ஸ்ரீநாத் பேசினார். அவர், ‘குழந்தை உள நல மருத்துவம் (Child Psychiatry)’ எனும் துறை நிமான்ஸில் தொடங்குவதற்குக் காரணமாக இருந்தவர்; Behavourial Science என்ற துறையின் டீனாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

“ஆட்டிசத்தைக் குணப்படுத்த மருந்துகள் ஏதுமில்லை. ஆட்டிசம் பரம்பரையாக வருவதில்லை; ஆனால், முதல் குழந்தைக்கு ஆட்டிசம் இருந்தால் இரண்டாம் குழந்தைக்கும் அந்தப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகமுள்ளது. ஆட்டிசம் நோயில்லை; அது ஒரு குறைப்பாடு மட்டுமே! EIBI (Early Intensive Behavourial Interventions) மூலம் மிகச் சிறிய வயதிலேயே கண்டுபிடித்துவிட்டால், அதன் தன்மையைக் குறைக்கலாம். கடுமையில் இருந்து அதிகத்திற்கும், அதிகத்திலிருந்து மத்திமத்திற்கும், மத்திமத்திலிருந்து கம்மியாகவும் ஆட்டிசத்தின் தன்மையைக் குறைத்து, தனது செயல்களை அவர்களே செய்து கொள்ளும்படி பழக்கலாம்.

Dr. Shoba Srinath

ஆட்டிச குழந்தைகள் தங்கள் வேலைகளைத் தாங்களே செய்து கொள்ள வேண்டுமென்ற அக்கறை மருத்துவருக்கோ, ஆசிரியருக்கோ, தெரபிஸ்ட்களுக்கோ இருக்காது. அது பெற்றோர்களுக்கும், வீட்டில் இருப்பவர்களுக்குமான கடமை. ஆக, குடும்பத்தினர்கள் தான் சிறந்த தெரபிஸ்ட்கள். எனக்குத் தெரிந்து ஒரு வீட்டில், அம்மா தன் மகனின் 20வது வயதிலும் பின்னால் கழுவி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவங்களுக்கு தன் மகன் ஏ,பி,சி,டி,.. கற்றுக் கொண்டால் போதும்; அதுவே பெரிய சாதனை என நினைத்து பள்ளிக்கு அனுப்புவதில் அதிக கவனம் செலுத்துகிறார். ‘அம்மா.. தண்ணி’ என பிள்ளை கையை நீட்டினால், ஓடிப்போய் தண்ணீர் கொண்டு வந்து தரும் அம்மாக்கள், அந்தப் பிள்ளையை self help skills-க்குப் பழக்குவதில்லை. ஆனால், ஏபிசிடி-யை விட இதுதான் மிக முக்கியம்.

ஆட்டிசம்எனக்குத் தெரிந்த ஒரு அம்மா இருக்கிறார். அவரது மகன் நாள் முழுவதும் மின் விசிறியை (Fans) மட்டுமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பான். அவனது அம்மா, ஃபேன்களின் மூலம் அளவு (size), நிறம் எனச் சகலத்தையும் கற்றுக் கொடுத்துவிட்டார். அவர்களது உலகத்திற்குள் நுழைய அவர்களது பேஷனை (Passion) உபயோகப்படுத்திக் கொள்ளவேண்டும். அப்படி நுழைந்து, அவர்கள் உலகில் இருந்து நாம் சகலத்தையும் கற்றுக் கொடுக்கலாம்.

ஆட்டிச நிலையில் இருந்து எந்தளவு குழந்தைகள் மீண்டு வருகிறார்களோ, அதன் தொடர்ச்சியாக காக்காய் வலிப்பு நோய், கற்றல் குறைப்பாடு, பேசுவதில் சிக்கல் போன்றவைகளை எதிர்கொள்ள நேரிடும். அவர்கள் பேசச் சிரமப்படும்பொழுது, சைகை மொழியில் தொடர்பு கொள்ள சொல்லித் தரலாம். அப்படிச் செய்வதால் அவர்கள் பேசுவது குறைந்துவிடும் என நினைக்க வேண்டாம். அது தவறான புரிதல். அவர்களை interact செய்ய வைப்பதும், frustrate ஆகாமல் பார்த்துக் கொள்வதும்தான் முக்கியம். ஏதோ ஒரு வகையில் interact செய்து, அவர்கள் உலகத்திற்குச் சென்று நாம் விரும்பியதைக் கற்க வைக்கலாம்.

குழந்தைப் பருவத்தில் இருந்து பதின் பருவத்துக்குச் செல்லும் பொழுது, மற்றவர்களைப் போல் ஆட்டிசக் குறைப்பாடு உள்ளவர்களுக்கும் பாலியல் உணர்ச்சியெழும். அதை மருத்துவரின் ஆலோசனைகளோடு அணுகாவிட்டால், உணர்வுரீதியான பல்வேறு நடத்தைப் பிரச்சனைகளுக்கு இட்டுச் செல்லும். ‘சுய இன்பம்’ பழக்கம் பற்றி வீட்டிலுள்ளவர்கள் பேசவேண்டும். அது கடினமான காரியம்தான். ஆனால், இயலாத ஒன்றல்ல. Abuse, Masturbation, Companionship, Marriage போன்ற விஷயங்களைப் பற்றிப் பேசவேண்டியது மிகவும் அவசியம். ‘தனக்குப் பின் அவர்கள் நிலையென்ன?’ என்பது குறித்தும் அக்கறை கொள்ளவேண்டும்” என்றார் ஷோபா ஸ்ரீநாத்.

“பிறந்து 18 மாதங்கள் ஆகும் வரை குழந்தைகளுக்கு, தொலைக்காட்சியையோ வேறெந்த மீடியாவையோ அறிமுகப்படுத்தக் கூடாது. 18 முதல் 24 மாதங்கள் வரை, நல்ல நிகழ்ச்சிகளைப் பெற்றோர்களின் மேற்பார்வையில் பார்க்க வைப்பதோடு, என்ன பார்க்கிறோம் என அவர்களுக்குப் புரியவும் வைக்கலாம். 2 முதல் 5 வயதாகும் குழந்தைகளுக்கு, தினம் ஒரு மணி நேரம் தொலைக்காட்சி பார்க்க அனுமதிக்கலாம். 6 வயதுக்கு மேல், டி.வி. பார்க்கும் பழக்கம் அவர்களது தூக்கத்தையோ, ஓடியாடி விளையாடும் நேரத்தையோ எடுத்துக் கொள்ளதவாறு கவனமாகப் பார்த்துக் கொள்ளவேண்டும்” என்ற AAP Guideline பற்றியும் இறுதியில் விளக்கினார்.

குழந்தை வளர்ப்பில் பெற்றோர்களின் பங்கு பற்றியும், வீட்டின் சூழல் குறித்த அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருந்தார்.

– தினேஷ் ராம்

1 Comment

Comments are closed.