Search

மலையாள சினிமாவின் ‘டேக் ஆஃப்’

Take Off Tamil Review

மையத்தை நோக்கி சோம்பலாக நீந்தும் பம்மாத்துக்கள் எதுவும் இல்லாத நேரடியான கதை.

ஏற்கெனவே ஏசியாநெட்டிலும் இன்ன பிற தொலைக்காட்சிகளிலும் அலசப்பட்ட கரு. சில ஆண்டுகளுக்கு முன்னால், ஈராக்கில் பணிபுரிந்து ஐஎஸ் தீவிரவாதிகளின் பிணைக்கதிகளாகச் சிக்கி மீட்கப்பட்டவர்களின் கதைதான் இது என்று தெளிவாகக் கதையின் க்ளைமாக்ஸையே சொல்லி விட்டுத் தொடங்கும் படம்.

வெறும் செய்தியாக மட்டுமே இந்த நிகழ்வுகளைப் பார்த்தவர்களுக்கு அந்தச் செய்திகளுக்குப் பின்னால் இருக்கும் உறைந்து போன நிமிடங்களை, அதிலிருந்த பயத்தை, அந்த நாட்களின் வேதனையை, விட்டு வருவதா அங்கேயே இறப்பதா என்ற ஊசலாட்ட மனநிலையின் வலியை ஆழமாகக் கடத்துவதில்தான் ஒரு தேர்ந்த இயக்குநர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியும். பல படங்களுக்கு எடிட்டராகப் பணிபுரிந்து முதன்முறையாக இயக்கத்தில் ஈடுபட்டிருக்கும் மகேஷ் நாராயணன், தன் முதல் படத்திலேயே தன்னைத் தேர்ந்த இயக்குநராக வெளிப்படுத்தியிருக்கிறார்

இதுதான் க்ளைமாக்ஸ். எப்படியும் இவர்கள் தப்பித்து நாடு வந்து விடுவார்கள் என்ற முன்முடிவோடு இருக்கும் பார்வையாளன், படத்தில் ஏதேனும் ஓர் இடம் சொதப்பினால் கூட எழுந்து விடும் வாய்ப்பும் அபாயமும் இருந்தும், இந்தத் திரைப்படம் மலையாளத் திரையுலகின் அபிமானமாகக் கொண்டாடப்படுவதற்குக் காரணங்கள் பல.

அரசு கையாலாகாததாக மாறும்போது, தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்ற நிலைதான். தடி எடுப்பது ஆளும் மாநிலத்திற்கெதிரான மத்திய அரசாகவும் இருக்கலாம். அமெரிக்கப் பொம்மை அரசுக்கெதிரான ஐஎஸ் தீவிரவாதிகளாகவும் இருக்கலாம். மனிதம் மாய்ந்து போகும் போது தீவிரவாதம் துளிர்விடுகிறது. எனினும் தீவிரவாதத்திற்கான எதிர்க்குரலாகவும் மனிதமே உயிப்புடன் மீண்டெழுகிறது. அரசு இயந்திரம் இயந்திரமாக இல்லாமல் தனிமனிதனின் உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டு செயல்படுவதும் மனித மாண்புதானே? இந்த மனித மாண்பும் படத்தின் அறியப்படாத சரடாகப் பின்பகுதி திரைப்படத்தில் வெளிப்படுகிறது.

இராக் உளநாட்டுப் போர் குறித்த தரவுகள், எந்தத் திரைப்படங்களிலும் அதிகம் பேசப்படாத இந்திய வெளியுறவுத்துறை செயல்படும் முறை குறித்த பார்வை என்று இந்தப் படத்திற்காக வெகுவாக உழைத்திருக்கிறார் மகேஷ். கொஞ்சம் பிசகினாலும் ஆவணப்படமாக மாறி விடக் கூடிய ஆபத்து இருந்தும், இப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுக்கத் துணிச்சலும் தன்னம்பிக்கையும் வேண்டும். கூடவே, அவரது கடும் உழைப்பின் நேர்த்தியும் சேர்ந்தால்தான் அவரது முதல் படமே இலகுவாக “டேக் ஆஃப்” ஆகியிருக்கிறது.

புத்திசாலித்தனமாக படத்தின் முதல் பகுதியில் செவிலியப் பெண்களின் அன்றாட வாழ்க்கைச் சிக்கல்களை மையப்படுத்தி அதன் மூலம் அவர்கள் மீதான பரிதாப உணர்வை அவர்கள் அறியாமலேயே பார்வையாளர்களின் மீது கடத்த முடிந்ததால்தான், இரண்டாம் பகுதியில் தீவிரவாதத்தின் கோர முகத்தையும் அதிலிருந்து செவிலியர்கள் மீள்வதான காட்சிகளையும் ஒரு த்ரில்லர் படத்துக்கான நேர்த்தியுடன் உருவாக்கிப் பார்வையாளர்களை அந்தத் திகில் நிமிடங்களில் ஒன்றிப் போகச் செய்ய முடிந்திருக்கிறது. இந்தப் புத்திசாலித்தனமான செய் நேர்த்திக்காகவே பெரிய சபாஷ் சொல்ல வேண்டும் இயக்குனர் மகேஷ் நாராயணனுக்கும், அவருடன் இணைந்து திரைக்கதை எழுதிய ஷாஜி குமாருக்கும்.

விவாகரத்துப் பெற்று குடும்பத்தின் கடன்களை மீட்பதற்காக, ஆபத்தென்று தெரிந்தும் இராக்கிற்கு செவிலியர் பணிக்குச் செல்லத் தயாராகிறாள் சமீரா. இந்த வேலையை விட்டுவிட்டால் வேறு வழியேயில்லை என்கிற நிலையில், அதுவரை மறுத்து வந்த தனது சக ஊழியன் ஸஹீதின் காதலை ஏற்றுக் கொண்டு அவனைத் திருமணம் செய்து கொள்கிறாள். இவர்களும் இவர்களது குழுவினரும், இராக் சென்ற சில நாட்களில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து விடுகிறது. பிணைக்கைதிகளாக ஐஎஸ் தீவிரவாதிகளிடம் அடைபட்டுவிடும் சமீராவும் அவளது குழுவினரும், இந்தியத் தூதரின் சமயோசிதத்தாலும் இந்திய அரசின் உதவியாலும் எப்படி இந்தியா திரும்புகிறார்கள் என்பதுதான் கதை.

உண்மைச் சம்பவங்களைப் பின்னணியாக வைத்துக் கொண்டாலும் அதில் சுவாரசியமும் கலந்திருக்க வேண்டும் என்பதற்காக உணர்வெழுச்சி மிக்க கதாபாத்திரத்தை மையச்சரடாக உருவாக்கியிருக்கிறார்கள். சமீரா – இந்தப் படத்தின் முதுகெலும்பும் இதயமும் இவள்தான். இவளது வேதனை, சூழல், இன்பம்,துன்பம்,வலிகள் அவமானங்கள் எல்லாவற்றையும் கேள்வி கேட்கும் துணிச்சலும், அதைத் தொடரும் சம்பவங்களுமாக திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார்கள்

வேலைக்குப் போகும் பெண்களுக்கு இஸ்லாமியக் குடும்பங்களில் ஏற்படும் இன்னல்களை சமீரா கதாபாத்திரத்தின் மூலம் வெளிப்படுத்தும்போது இஸ்லாமியச் சமூகத்தைச் சீண்டுவது போலத் தோன்றினாலும், ஷஹீத் பாத்திரத்தின் பெருந்தன்மை மற்றும் விசால சிந்தை மூலம் அதற்குப் பதிலும் தந்திருக்கிறார்கள் மகேஷ் நாராயணனும் அவரது சகாவான ஷாஜி குமாரும்.

“பூமியில் தேவதைகள் என்று கொண்டாடப்படும் செவிலியர்களின் வீடுகளில், தேவதைகளின் நிலை என்ன என்று யாரும் கவலைப்படுவதில்லை” என்கிறாள் சமீரா. மிக இயல்பான அதிகம் வளவளக்காத, காட்சிக்குத் தேவையானதை மட்டும் அளவோடு வெளிப்படுத்தும் வசனங்கள் ஆங்காங்கே மிகக் கூர்மை. கேரளத்திலிருந்து ஐஎஸ் தீவிரவாத பயிற்சி பெற்று மடியக் கிடக்கும் மலையாளி கடைசி நிமிடத்தில் “உம்மா” என்றழைக்க, “மரணத் தருவாயில கிடக்கும்போது மட்டும் உச்சரிக்கப்பட வேண்டிய பெயரா அது?” என்ற கேள்வியும், “எந்த நாட்டிலோ பிறந்து எவனுடைய போராட்டத்துக்காகவோ நாடு விட்டு நாடு வந்து இப்படி அனாதையாகச் சாவது யாருக்காக? நானறிந்த இஸ்லாம் அப்படிச் சொல்லவில்லை. உனக்கு மட்டும் எப்படி?” என்ற கேள்வியை சஹீத் எழுப்பும் காட்சியில் வரும் வசனம் ஓர் உதாரணம்

தனது முதல் கணவன் மூலம் பிறந்த குழந்தையிடம், இரண்டாவது கணவன் மூலம் வயிற்றில் சுமக்கும் கருவைப் பற்றி எப்படிச் சொல்வதென்று தெரியாமல் அலைக்கழியும் காட்சியில், “ஆரம்பத்தில் அப்பாவுக்கு; பின்னர் குடும்பத்துக்கு; பின்னர் கணவனுக்கு; சமூகத்துக்கு; இப்போது குழந்தைக்கு என்று பயந்து பயந்தே வாழ்ந்து முடியும் நாங்கள் எப்போதுதான் எங்களுக்காக வாழ்வது” என்று குமுறும் சமீராவின் மூலமாகவே கதை பின்னப்படுகிறது. அதுவே பிற்பகுதியில் தனது கணவனை மொசூலில் தேடி அலையக் காரணமாகவும் திரைக்கதை சலிப்பின்றி பயணிக்கக் காரணமாகவும் அமைகிறது

சொந்த வாழ்க்கையின் தோல்விகளிலிருந்து தப்பி ஓடுவதற்காக எதற்கெடுத்தாலும் எரிந்து விழும், சமூகக் கட்டுப்பாட்டுகளை எதிர்த்தும் எதிர்க்காமலும், குடும்பப் பொறுப்பைத் தாங்கியும், செவிலியாகத் தனக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கெதிராகக் குரலெழுப்பியும், பாதிப்படம் முழுக்க வீங்கிய வயிறோடு கர்ப்பிணியாவும், எட்டு வயது மகனுக்குத் தாயாகவும் கூடவே சக தோழிகளுக்குப் பாதுகாப்பு அரணாகவும் அமைகின்ற ஒரு முழுமையான கதாபாத்திரம் சமீரா. இத்தனை வலிமை நிறைந்த கதாபாத்திரத்தை தன் தோளில் தூக்கி நடப்பது அத்தனை எளிய காரியமல்ல.

ஆனால் இந்தப் படத்தின் மிகப்பெரும் வெற்றியே கூட, சமீராவாக நடிக்க பார்வதியைத் தேர்வு செய்ததுதான் என்பேன். எம்மாதிரியான நடிகை!! ‘பெங்களூர் டேஸி’ல் ஸாரா, ‘என்னும் நிண்டெ மொய்தீனீ’லே காஞ்சன மாலா, ‘சார்லி’யிலே டெஸ்ஸா என்று படத்துக்குப் படம் வெவ்வேறு பாவனைகளில் அசத்திய பார்வதியின் கிரீடத்தில் சமீரா இன்னுமோர் மின்னும் வைரம். நடிகைகளை முகத்திற்குக் கீழே பார்த்து தான் ரசிக்க வைக்க முடியுமென்று நினைப்பவர்களுக்கு மத்தியில் முகபாவங்களால் கூட சாதாரணப் பார்வையாளனை ரசிகனாக மாற்ற முடியுமென்ற அற்புதமான நடிப்பாற்றலுக்குச் சொந்தக்காரி இந்தப் பார்வதி. இந்த வருடம் தேசிய விருது பார்வதிக்குக் கிடைக்காவிட்டால் தேசிய விருதுக்குத்தான் அவமரியாதை.

Take Off Tamil vimarsanam

பார்வதி என்ற கரைபுரண்டோடும் காட்டாற்றினைக் கரையாகத் தாங்கி நிற்பது குஞ்ஞாக்கோ போபன். சமீராவின் இரண்டாம் கணவன் சஹீதாக நிதானமான மிகையற்ற பாவனைகளோடு வாழ்ந்திருக்கிறார். பாதிப் படம் முடிந்த பின் வரக் கூடிய கதாபாத்திரம். அதுவும் பாதி நேரம் தொலைபேசியில் மட்டுமே பேசுகின்ற கதாபாத்திரமென்று தெரிந்தும் இந்தப் படத்தின் முக்கியத்துவம் உணர்ந்து இந்தியத் தூதர் மனோஜாக மிடுக்கோடு வலம் வந்திருக்கும் ஃபஹத் ஃபாஸிலின் உடல் மொழி அபாரம். ஆசிஃப் அலி உள்ளிட்ட மற்ற பாத்திரங்களும் தேவையறிந்து சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார்கள்.

படத்தின் கலை இயக்குநரையும் ஒளிப்பதிவாளரையும் பாராட்ட வார்த்தைகளே இல்லை. ஈராக்கிற்குப் போகாமல் ஹைதராபாதிலும், கொச்சியிலும், அமீரகத்தின் ராஸ் அல் கைமாவிலும் செட்களை உருவாக்கி அதுவும் மிகக்குறைந்த செலவில் அசத்தியிருக்கும் கலை இயக்குநருக்கு தனி சபாஷ்!!

சானு ஜான் வர்கீஸின் சட்டங்களுக்குள் வண்ண ஜாலங்கள் ஏதுமில்லை எனினும் மகேசின் எண்ணங்களைக் காட்சிகளாகப் பதிவு செய்வதில் எந்தக் குறையுமில்லை. காட்சிக்குத் தேவையான ஒளியை உள்வாங்கி, படத்தின் சூழலுக்கேற்ற வகையில் உறுத்தாத படப்பிடிப்பு. கோபி சுந்தரின் இசைக்கோர்ப்பும், தேவையான இடைவெளிகளில் மௌனமே இசையாய் வெளிப்படுவதும் பெரும் ஆறுதல்

குறையே இல்லையா என்று கேட்காதீர்கள். பெரும் குறை ஒன்றிருக்கிறது. தமிழ் சினிமாவும் எப்போது இது போல நல்ல கதை, நட்சத்திர அலட்டல்கள் இல்லாத எளிமையும் வலிமையும் நிறைந்த திரைப்படங்களோடு டேக் ஆஃப் ஆகுமென்ற அந்தக் குறைதான் மனம் முழுக்க.

– ஆசிப் மீரான்