Shadow

DSP விமர்சனம்

DSP ஆகவேண்டுமென்பது, நாயகி அன்னபூரணியின்  கனவு. ஆனால், முட்டை ரவியால் கொல்லப்படக்கூடாதென ஊரை விட்டு ஓடும் வாஸ்கோடகாமா, துணைக் காவல் கண்காணிபாளராகி (DSP) விடுகிறார். அதற்குள் முட்டை ரவி, சட்டமன்ற உறுப்பினராகிவிடுகிறார். துகாக-விடம் சிக்கிய சமஉ-வின் கதி என்னவென்பதுதான் படத்தின் கதை.

மாஸான என்ட்ரியும், அதை உறுதிப்படுத்தும் சண்டைக் காட்சியும் முடிந்ததும், தான் யார் என்ற பூர்வாங்கத்தைச் சொல்லத் தொடங்குகிறார் நாயகனான விஜய் சேதுபதி. குடும்பம், கிரிக்கெட் விளையாடி பொழுதைக் கழித்தல், தங்கைக்கு மாப்பிள்ளை பார்த்தல், மொட்டை மாடியில் குடிப்பது, நாயகியைச் சந்திப்பது, முட்டை ரவியை அடித்து வம்பைத் தேடிக் கொள்வதென முதற்பாதியைச் சவ்வாக இழுத்துவிடுகிறார் இயக்குநர் பொன்ராம்.

எவ்வளவு நேரம் தான் விஜய் சேதுபதியே ஒப்பேற்றிச் சமாளிப்பாரென அவரது உதவிக்கு, இரண்டாம் பாதியில் பால் பண்ணை முதலாளி மாப்பிள்ளை விநாயகமாக விமல் வந்து தன் பங்கிற்கு நேரத்தை வளர்க்கிறார். இடையிடையே விஜய் டிவி புகழ் நகைச்சுவைக்காக மிகவும் மெனக்கெடுகிறார்.

ஃபெமினா மிஸ் இந்தியா 2018 பட்டம் வென்ற அனுகீர்த்திவாஸ் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். அவரைத் திண்டுக்கல் பெண்ணாகப் பார்வையாளர்கள் மனதில் பதிய வைக்க, ஒப்பனைக் கலைஞரும், ஒளிப்பதிவாளர்களும் தவறியுள்ளனர். படத்தோடு ஒட்டாமல் மிகவும் அந்நியமாகத் தெரிகிறார்.

வாஸ்கோடகாமாவாக விஜய் சேதுபதி, எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் ஜாலியாக வந்து செல்கிறார். கதையை நகர்த்தும் காட்சிகளாக இல்லாமல், திரைக்கதையும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் போல் நோக்கமற்று ஜாலியாகத் துள்ளித் திரிகிறது.