Shadow

கட்டா குஸ்தி விமர்சனம்

கட்டா குஸ்தி என்பது கேரளாவின் பிரத்தியேக வகை மல்யுத்தமாகும். அக்கலையில் நிபுணத்துவம் பெற்ற கீர்த்திக்கு, மல்யுத்த வீராங்கனை என்பதால் மாப்பிள்ளை கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. பொள்ளாச்சியைச் சேர்ந்த வீராவிடம், கீர்த்தி ஒரு மல்யுத்த வீராங்கனை என்பதை மறைத்துக் கல்யாணம் செய்து வைக்கிறார் கீர்த்தியின் சித்தப்பா கணேசன். கீர்த்தி பற்றிய உண்மை தெரிந்ததும் ஏற்படும் குழப்பமும் தெளிவும்தான் படத்தின் கதை.

படத்தின் முதல் பாதி நகைச்சுவைக் காட்சிகள் மிகச் சிறப்பாக உள்ளன. கணவன் குறித்து நாயகியிடம் பெண்கள் கூறம் போதும், மனைவி குறித்து நாயகனிடம் கருணாஸ் கூறும் போதும், திரையரங்கில் சிரிப்பொலியைக் கேட்க முடிகிறது. இயக்குநர் செல்லா அய்யாவிற்கு நகைச்சுவை இயல்பாக வருகிறது. வசனத்தில் வரும் ‘சின்னம்மா’வைக் கருணாஸைக் கலாய்த்திருப்பது ரசிக்க வைக்கிறது.

இரண்டாம் பாதியில், சினிமா சுதந்திரத்தைக் கையிலெடுத்து, ஈகோவில் குமுறும் நாயகன், பதினைந்து நாளில் கட்டா குஸ்தி பயின்று, மனைவியுடன் போட்டி போடுவதாகக் கதையை நகர்த்தியுள்ளார் செல்லா அய்யாவு. ஆணாதிக்கவாதியான கருணாஸோ, அவர் பேச்சைக் கேட்டுத் தலையாட்டும் விஷ்ணு விஷாலோ, மனைவியுடன் போட்டி போட்டு வெல்ல நினைப்பதை ஏற்க முடிகிறது. ஆனால், அந்தப் போட்டிக்குப் பதினைந்து வருடங்களாக கட்டா குஸ்தியில் முறைப்படி பயிற்சி பெறும் நாயகி ஒத்துக் கொள்வதைத்தான் ஏற்றுக் கொள்ள சிரமமாக உள்ளது. போதாக்குறைக்கு ஓர் உப்புமா வில்லனும் படத்தில் உண்டு. சென்ட்டிமென்ட்டிற்கான ஸ்கோப் இருந்தும் நகைச்சுவையாகக் கொண்டு போய் முடிக்கவே முயன்றுள்ளார் இயக்குநர்.

ரவி தேஜாவும், விஷ்ணு விஷாலும் இணைந்து கட்டா குஸ்தியைத் தயாரித்துள்ளனர். இது முற்றிலும் கதாநாயகியைப் பிரதிநிதிப்படுத்தும் படம். இப்படியொரு படத்தில் நாயகனாக நடித்ததோடு, அதைத் தயாரித்தும் இருப்பதற்கு விஷ்ணு விஷாலை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வெட்டியாய், வீராப்பாய் அலப்பறையுடன் பந்தா செய்து கொண்டு திரியும் பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியுள்ளார். இரண்டாம் பாதியில், விஷ்ணு விஷாலும், அஜயும் சந்திக்கும் கலகலப்பான காட்சி ஓர் உதாரணம்.

கீர்த்தியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். படத்தின் முதல் ஃப்ரேமே, ஐஸ்வர்யா லக்ஷ்மியின் கட்டா குஸ்தியில் இருந்துதான் தொடங்குகிறது. கோதாவில் ஆக்ரோஷம் காட்டுவதாகட்டும், கணவன் வீட்டில் தன்னியல்பை மறைப்பதாகட்டும், கருணாஸிடம் கோபப்படுவதாகட்டும், தனக்குக் கிடைத்த கதாபாத்திரத்தை மிக அழகாக உபயோகப்படுத்தி ரசிக்க வைக்கிறார். இடைவேளைக் காட்சியில் மாஸ் காட்டியுள்ளார். சண்டைக்காட்சிகளை இரட்டையர்களான அன்பறிவ் பிரமாதப்படுத்தியுள்ளனர். குடும்பத்துடன் ஜாலியாய்ப் பார்க்க ஏற்றதொரு படம்.