
காஷ்மீர் ஆசிபா, அயனாவரம் சிறுமி போன்றவர்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளைக் கண்ணுறும்பொழுது, மனிதரகள் இவ்வளவு ஆபத்தானவர்களா என்ற நடுக்கம் அடிமனதில் இருந்து எழுந்தது. சக மனிதர்கள் என்று மனதில் எழும் நெருக்கம் மெல்ல அமிழ்ந்து, இன்னும் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்ற எண்ணம் எழுகிறது. ஆனால், படத்தில் வரும் கதாபாத்திரங்கள் யாரும் அத்தகைய பயத்தை விதைப்பவர்களில்லை.
சிறை சென்றுவிட்டு வரும் மாமன் டேவிட்டும், ரோட்டில் அநாதையாகத் திரிந்து அடிபட்டு வளரும் மருமகன் தாமஸும் இணைந்து ஸ்வேதாவைக் கடத்துகின்றனர். ஸ்வேதா, தாமஸின் காதலி. ஸ்வேதாவும், தாமஸும் இணைந்து டேவிட்டை ஏமாற்றி எல்லாப் பணத்தையும் சுருட்ட முடிவு செய்கின்றனர். யார் யாரை ஏமாற்றுகின்றனர் என்பதே படத்தின் கதை.
ஃபிரான்சிஸ் டி’செளசாவாக யோகி பாபு நடித்துள்ளார். தாமஸின் ரூம் மேட்டாக வரும் இவர் நகைச்சுவைக்குப் பெரிதும் உதவிடவில்லை. ஸ்வேதாவின் அப்பாவாக ஜெயகுமார் நடித்துள்ளார். ஸ்வேதாவாக நடித்திருக்கிறார் வரலட்சுமி சரத்குமார். தன் தந்தை, தன்னையொரு பண்டமாகக் கருதித் திருமணத்தில் அடகு வைப்பதால் தந்தை மீது கோபமாக உள்ளதாகச் சொல்கிறார் வரலட்சுமி. தாமஸ்க்கும் ஸ்வேதாவிற்கும் இடையே எப்படிக் காதல் வந்தது என்ற தெளிவு படத்திலில்லை.
டேவிட்டாக வரும் கிஷோர் வழக்கம் போல் தானேற்ற கதாபாத்திரத்தின் மூலம் ஈர்க்கிறார். தாமஸாக விவேக் ராஜகோபால் அறிமுகமாகியுள்ளார். கதாபாத்திரங்களை மனதிற்கு நெருக்கமாக உணரமுடியவில்லை. ஓய்வு பெற்ற காவலதிகாரியாக வரும் சத்யராஜின் பாத்திரம் கூட அப்படியே உள்ளது. கடத்தல்காரர்கள் உபயோகப்படுத்தும் கார் டயரின் தடம் கிடைக்கிறது. அதை ஃபாரன்சிக் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கிறார் சத்யராஜ். அது Eeco காருடைய டயர் இல்லை என ஃபாரன்சிக்கில் சொல்கின்றனர். ஆனால், அவர்களால் எந்தக் காரின் டயர் தடம் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லையாம். சத்யராஜ், வீதிக்குச் சென்று ஒவ்வொரு கார் டயராக செக் செய்வது நல்ல காமெடி.
சத்யராஜ்க்கு ஒரு மகள் இருக்கிறார். அவளுக்குத் திடீர் திடீரென, உடம்பின் வெப்பநிலை மிகவும் தாழ்ந்து குளிரத் தொடங்கிவிடும். தாழ்வெப்பநிலையில் (hypothermia) நடுங்கும் அந்தச் சிறுமியின் நிலையைப் பார்க்கவே சங்கடமாக உள்ளது.
படம் துண்டு துண்டாகப் பயணிப்பது போலுள்ளது. காரணம், யார் படத்தின் நாயகன் எனத் தீர்மானிப்பதில் குழப்பம் நேருகிறது. கிஷோரா, சத்யராஜா, விவேக் ராஜகோபாலா, யார் கதையின் மையம் என்ற தெளிவில்லை. அனைவருமே மனிதர்களே, எச்சரிக்கையுடன் இருக்கவேண்டுமென்ற ஜஸ்டிஃபிகேஷனும் மிஸ்ஸிங்.
லக்ஷ்மி, மா ஆகிய குறும்படங்களை இயக்கிப் பரவலான கவனத்தைப் பெற்ற இயக்குநர் சர்ஜுனின் படமிது. படத்தின் அறிமுகக் காட்சிகள் நிமிர்ந்து அமரச் செய்கின்றன. இய்யக்குநர் மணிரத்னத்தின் தாக்கம் அந்தக் காட்சியில் தெரிந்தாலும், அதன் பின், படம் தொடங்கியதும் அது இல்லாமல் போய்விடுகிறது. The disappearance of Alice Creed (2009), கடல் (2013) போன்ற படங்களில் இருந்து இன்ஸ்பையராகி உள்ளதாக க்ரெடிட் கொடுத்துள்ளது சிறப்பு.