ஊரை விட்டுச் சென்னைக்கு வந்துவிட்ட முருகனுக்கும் குபேரனுக்கும் ஒரு பெட்டி நிறைய அமெரிக்க டாலர்கள் ($) கிடைக்கிறது. அப்பணத்தைத் தொலைத்த சேட்டு ஒருபுறமும், அதைச் சேட்டிடம் இருந்து திருடிய போலீஸ் அதிகாரியொருவர் மறுபுறமும் தேடுகின்றனர். அவர்களிடம் சிக்கிக் கொள்ளும் முருகனும் குபேரனும் எப்படித் தப்பிக்கின்றனர், பணம் என்னானது என்பதுதான் படத்தின் கதை.
முருகனாக மிதுன் மகேஸ்வரன் நடித்துள்ளார். படத்தில் எந்தக் கதாப்பாத்திரத்திற்கும் வலுவான பின்னணி இல்லை. சென்னை வரும் முருகனுக்கு, ‘மதுரைக்காரன்’ என்ற ஒரே காரணத்திற்காக வீடு கிடைக்கிறது. அதுவும் மிக மிகச் சுலபமாக. அதை நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் படத்தின் எல்லாக் கதாப்பாத்திரங்களும் இப்படித்தான் வந்து செல்கின்றன. இளமைத் துள்ளலுடன், எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல், மிதுன் மகேஸ்வரன், முருகன் எனும் கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்துள்ளார். எந்தப் பெரிய இலக்குகளுமின்றிச் சுற்றி வரும் இளைஞன் முருகனுக்குக் கண்டதும் காதல் வருகிறது.
மஹி எனும் மகேஸ்வரியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடித்துள்ளார். ஷாப்பர்ஸ் & ஸ்டாப்பர்ஸ் எனும் கடையில் சேல்ஸ் கேர்ளாகப் பணி புரிகிறார் மஹி. நூறு ரூபாயத் திருப்பி வாங்காததால், நாயகன் நல்லவனாகத்தான் இருப்பான் எனக் காதலிக்கத் தொடங்கும் வழக்கமான நாயகி கதாப்பாத்திரம்தான்.
குபேரனாக அப்புக்குட்டி நடித்துள்ளார். நகைச்சுவைக்குப் பெரிதும் உதவவில்லை எனினும், படத்தின் கதாநாயகனான டக்ளஸ் எனும் நாயை இவர்தான் வளர்க்கிறார். நாயின் மைண்ட்-வாய்ஸைப் படம் முழுவதும் உபயோகித்துள்ளனர். அது அவ்வளவு சுவாரசியமாகப் பொருந்தாவிட்டாலும், முருகனுக்கும் குபேரனுக்கும் பணம் கிடைக்கக் காரணமாக இருப்பதோடு, க்ளைமேக்ஸிலும் ஹீரோயிசம் செய்து அசத்துவது டக்ளஸே!
காவல்துறை அதிகாரியாக அருள்தாஸ் நடித்துள்ளார். நாயகன், நாயகி, காமெடியன் அறிமுகத்தை விட, அருள்தாஸின் அறிமுகமும், சேட்டாக நடித்தவரின் அறிமுகத்தைச் சீரியசாகக் கொடுத்துள்ளனர். ஆனாலும், அவை க்ளிஷேகளே! பணத்தைப் புதைத்து வைக்குமிடம் அவர்களால் அணுக முடியாதளவுக்கு மாறுவதும், அதை முருகனும் குபேரனும் திட்டமிட்டு எடுப்பதும் சுவாரசியம். அதை எல்லாம் டக்ளஸ் அநாயாசமாகத் தட்டிக் கொண்டு போய்விடுகிறது.
‘குள்ளநரி கூட்டம்’ படத்தின் இயக்குநரான ஸ்ரீ பாலாஜி இப்படத்தை இயக்கியுள்ளார். A.R.சூர்யாவின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகள் அழகாக ஒளிர்கின்றன. இடைவேளையின் பொழுதுதான் கதை தொடங்கவே செய்கிறது. அதுவரையான ஒப்பேத்தல்களை, இன்னும் கொஞ்சம் சுவாரசியப்படுத்தி இருந்தால், படம் முழுநீள டைம்பாஸ் மூவியாக அமைந்திருக்கும்.