Shadow

கடிகார மனிதர்கள் விமர்சனம்

Kadikara-manitharkal-movie-review

ஒண்டிக் குடித்தனத்தில் வாடகைக்குக் குடியிருப்போர்களைக் குறிக்கும் குறியீட்டுச் சொல்லாகக் கடிகார மனிதர்கள் தலைப்பினைப் பொருள் கொள்ளலாம். தங்கள் வருமானத்தின் பெரும்பகுதி வாடகையிலேயே கழிந்து விடுவதாலும், அதிலிருந்து தப்பிக்கவோ, இளைப்பாறவோ இயலாச் சூழலில், கடிகார முட்கள் போல் ஓடிக் கொண்டே இருந்தால் தான் சமாளிக்க இயலும். பேக்கரியில் வேலை செய்யும் கிஷோரைப் பெரிய முள்ளாகவும், பூ கட்டி விற்கும் அவரது மனைவி லதா ராவைச் சிறிய முள்ளாகவும் கற்பனை செய்து கொள்ளலாம்.

ஒரு மகள், இரண்டு மகன், கணவன், மனைவி எனக் கிஷோரின் குடும்பத்தில் மொத்தம் ஐந்து பேர். எவ்வித முன்னறிவிப்புமின்றி, வீட்டைக் காலி செய்யவேண்டிய இக்கட்டான சூழல் நேர்கிறது. பொருட்களை வண்டியில் ஏற்றிய பின்பே வீடு தேடி அலைகின்றனர். பல போராட்டத்திற்குப் பிறகு, 3500 ரூபாய்க்கு ஒரு வீடு வாடகைக்குக் கிடைக்கிறது. ஆனால், ஒரு வீட்டில் அதிகபட்சம் நான்கு பேர் தான் தங்கவேண்டுமென வீட்டு உரிமையாளர் பாலாசிங் கறாராகச் சொல்லிவிடுகிறார்.

அந்த ஒண்டிக்குடித்தனத்துக்குள், தனது கடைசி மகனை எவருக்கும் தெரியாமல் வளர்க்கப் படாதபாடுபடுவதுதான் படத்தின் கதை.

உறைவிடம் என்பது மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று. வீடு தேடி அலைந்தவர்களுக்கும், வீட்டு உரிமையாளரின் தொல்லைகளுக்கு ஆளானவர்களுக்கும் படம் மிக நெருக்கமானதாக இருக்கும். தண்ணீர், மின்சாரம், விருந்தாளிகள் ஒருநாளுக்கு மேல் தங்கக்கூடாது என எத்தனை எத்தனை கண்டிஷன்கள்?

குடும்பத்தலைவனாகத் தகப்பனாகக் கணவனாகக் கிஷோர் கலக்கியுள்ளார். தன் மகனைப் பெட்டிக்குள் வைத்து யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டுக் கொண்டு வரும் வலியையும் குற்றவுணர்வையும் பரிதவிப்பையும் அழகாகப் பிரதிபலித்துள்ளார். வீட்டிற்காகக் குடும்பத்துடன் நடுத்தெருவில் கிஷோர் நிற்கும் காட்சியில் தான் படம் தொடங்குகிறது. பதற்றமடையாமல் அந்தக் காட்சிகளைக் கடப்பது சிரமம். லதா ராவும் சிறப்பாக நடித்துள்ளார்.

வீட்டு உரிமையாளரின் மகளைக் கல்யாணம் செய்து கொண்டு ‘ஹவுஸ் ஓனர்’ ஆவதுதான் கருணாகரனின் கனவும் லட்சியமும். பேச்சுலருக்கு வீடில்லை என்பதால், சாலையில் பிச்சையெடுக்கும் ஒரு பாட்டியுடன் வாடகை வீட்டில் குடியேறுகிறார். படத்தின் கலகலப்புக்கு உதவுவது அந்தப் பாட்டி தான்.

யாருக்கும் பாலா சிங் போலவும், அவரது அம்மா போலவும் வீட்டு உரிமையாளர்கள் அமைந்துவிடவே கூடாது. ஒரு மரணம் நிகழ்ந்துவிடுகிறது. அப்பொழுது, “வாடகை வீட்டில் சாகுறதே தப்பு. அதில் இவ்ளோ நேரம் பிணத்தை எடுக்காமல் வச்சிருப்பீங்களா?” எனத் தயவு தாட்சண்யம் இல்லாமல் எரிந்து விழுவார்கள். பெரியவர்களின் உலகில் தன்னை மறைத்துக் கொண்டு வாழும் சிறுவன் கவியாக மாஸ்டர் ரிஷியும் நன்றாக நடித்துள்ளான். விடியற்காலையில் முதல் ஆளாக எழுந்து எவருக்கும் தெரியாமல் கழிவறைக்குச் சென்று காலைக்கடன்களை முடித்துப் பள்ளிக்குத் தயாராகவேண்டும். வீட்டை விட்டுப் போவதும் வருவதும் ஒரு பெட்டிக்குள் ஒடுங்கிய பயணமாகிறது அச்சிறுவனுக்கு. தனது வீட்டில் வரிசையாகச் செல்லும் எறும்புகளைப் பார்த்து, “இந்த எறும்புகளுக்கு எல்லாம் சொந்த வீடா வாடகை வீடாப்பா?” எனக் கேட்கிறான் சிறுவன். “அதற்கும் சேர்த்துத்தான் நாம வாடகை கட்டுறோம்” என விரக்தியாகப் பதில் சொல்வார் கிஷோர். அந்த விரக்தியும் ஏக்கமும் கிஷோரை எந்த அளவுக்குக் கொண்டு செல்கிறது என்பதுதான் படத்தின் முடிவு.

வாழ்வியலைத் தேடிக் கிராமத்திலிருந்து நகரத்திற்கு வருபவர்கள், தாங்கள் உழைக்கும் ஊதியத்தைப் பெரும்பாலும் வாடகை தந்தே இழக்கின்றனர். வீட்டு உரிமையாளர் எப்பொழுது வேண்டுமானாலும் காலி செய்யச் சொல்வார். ‘சொந்த வீடில்லாதவன் இங்கே உள்நாட்டு அகதியே’ என்கிற கருத்தை ஆழப்பதிக்கிறது படம். சாம் C.S.-இன் ஒலிப்பதிவும், உமா சங்கரின் ஒளிப்பதிவும், சாமானியனின் பரிதவிப்பைக் கச்சித.மாகப் பதிந்துள்ளன. இயக்குநர் வைகறை பாலனின் வசனங்கள் மையக்கருவை விட்டு விலகாமல் படத்திற்கு மேலும் அழுத்தத்தைக் கொடுக்கின்றன.