Search

கஜினிகாந்த் விமர்சனம்

gajinikanth-movie-review

திரையரங்கில், ‘தர்மத்தின் தலைவன்’ படம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது பிறப்பதாலோ என்னவோ, அந்தப் படத்தில் வரும் கதாபாத்திரமான பேராசிரியர் பாலு (ரஜினி) போல, ஆர்யாவிற்குப் பிறந்தது முதலே ஞாபக மறதி. ஆனால், ஆர்யா அந்த ரஜினியை விடவும் சிக்கலானவர். ஒரு விஷயத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது, ஆர்யாவிடம் பேச்சுக் கொடுத்தால், செய்து கொண்டிருக்கும் வேலையிலிருந்து இருந்து கவனத்தைத் திருப்பி, அதை சுத்தமாக அடுத்த வேலையில் மனது திசை திரும்பிவிடும். அதனால் தந்தையாலும் நண்பர்களாலும், ‘கஜினிகாந்த்’ எனக் கிண்டலடிக்கப்படுகிறார்.

இத்தகைய தீவிர ஞாபக மறதியுடைய கஜினிகாந்த்க்குக் காதல் வந்தால்? தனது மறதியை மீறி எப்படித் தன் காதலில் ஜெயிக்கிறார் என்பதே படத்தின் கதை.

‘பலே பலே மகாதிவோய்’ எனும் தெலுங்குப் படத்தின் ரீ-மேக் இந்தப் படம். ‘ஹர ஹர மஹாதேவகி’ புகழ் சன்தோஷ் P.ஜெயக்குமார், ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தையும், கஜினிகாந்தையும் ஒரே நேரத்தில் மாறி மாறி எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2017 செப்டம்பர் இறுதியில் ‘ஹர ஹர மஹாதேவகி’, 2018 மே மாதத்தில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ எனக் குறைந்த காலத்தில் மூன்று படங்களை இயக்கியுள்ளார் சன்தோஷ் P.ஜெயக்குமார். இன்றைய காலகட்டத்தில் இது வியக்கவைக்கும் ஓர் ஆச்சரியமே!

கஜினிகாந்த், அவரது முதல் “U” சான்றிதழ் படமிதென்பது குறிப்பிடத்தக்கது. சன்தோஷின் படங்களில் ஒரு பகடி இழையோடிக் கொண்டே இருக்கும். இப்படத்தின் முடிவில், A film by என்பதில் A, U-வாக மாறுவதாகக் காட்டியிருப்பார். முதல் இரண்டு படங்கள் ‘அடல்ட்’ படங்களாகப் போய்விட்டதால், அவர் மீதான முத்திரை அழுத்தமாகப் பதிந்துவிட்டது என்றே சொல்லவேண்டும். “ச்சீ..” எனத் திரைத்துறைக்குள் இருந்தும் குரல்கள் ஒலித்தப்படியே உள்ளன. அவற்றிற்குப் பதிலடி கொடுக்கும்வண்ணமாகவே இந்தப் படம் அமைந்துள்ளது. அதாவது, குடும்பத்துடன் பார்க்கக் கூடிய முழு நீள நகைச்சுவைப் படமாக கஜினிகாந்த் உள்ளது.

நாயகனுக்கு ஞாபக மறதி என்ற ஒரு விஷயம் போதாதா நகைச்சுவைக்கு? ஆனால், ‘கூகுள் மேப்ஸ்’ வசதி வந்துவிட்ட காலத்தில், தன் குறையைத் தொழில்நுட்பம் கொண்டு சமாளிக்க முயலாமல், திருப்பதிக்குச் செல்ல வழி தவறி பெங்களூரு போய்விட்டதாக எல்லாம் சகட்டுமேனிக்குக் கதை விடுகின்றனர். இதற்கே வழியெங்கும் அறிவிப்புப் பலகைகள் பப்பரப்பாவென உள்ளன. காரில், பின் சீட்டில் அமர்ந்து வரும் காளி வெங்கட் அதைப் படித்துக் கொண்டு வருவதாகவும் காட்டுகின்றனர். ஆனால், முன் சீட்டில் அமர்ந்துள்ள நாயகி சயீஷா சைகலும், காரை ஓட்டி வரும் ஆர்யாவும் அறிவிப்புப் பலகைகளைப் படிக்கமாட்டார்களாம். இப்படியெல்லாம் யோசனை போனாலும், அதை மறந்து ரசிக்க முடிகிறது. ரஜினி ரசிகராக வரும் நாயகனின் தந்தை ஆடுகளம் நரேன் படத்தின் கலகலப்பிற்கு உதவுகிறார். சயீஷாவின் தந்தையாக வரும் சம்பத் காட்டும் கம்பீரம் ரசிக்க வைக்கிறது. கருணாகரனுக்குப் பிரமாதமான ரோல் இல்லை. ஆள்மாறாட்டம் செய்ய சதீஷ்க்கு வாய்ப்புக் கிடைத்தும், நினைவில் நிற்கும்படி காமெடி எதுவும் செய்யாதது குறை.

கபாலி படத்தில், ரஜினி சிறையில் இருந்து வந்ததும், ‘அட கோழிக்கறி’ என நக்கலாய் வரவேற்று வாங்கிக் கட்டிக் கொள்ளும் லிஜீஷ் தான் இந்தப் படத்தின் பிரதான வில்லன். தானொரு வில்லன் என்பதை மறைத்துக் காய்களை நகர்த்தாத நேரடி வில்லன். அவரது முகபாவனையும், உடற்மொழியும் எரிச்சலூட்டும்படி சிறப்பாக நடித்துள்ளார்.

கஜினிகாந்த், ஜாலியாக மைண்டை டைவேர்ட் செய்து பொழுதை மறக்க உத்திரவாதமளிக்கிறது படம்.