Shadow

எந்திரன் விமர்சனம்

Enthiran movie review

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் ஷங்கர் என கடந்த இரண்டு வருடமாக எதிர்பார்ப்பை எகிற வைத்த படம்.

வசீகரன் என்னும் விஞ்ஞானி பத்து வருடம் முயன்று ‘சிட்டி’ என்னும் அன்ட்ரோ- ஹியூமனாய்ட் வகை ரோபோவை இந்திய இராணுவத்திற்கு சேவை செய்ய வைக்கும் நோக்கில் தயாரிக்கிறார். பார்ப்பதற்கு மனிதனை போலவே இருக்கும் அந்த வகை ரோபோக்கள் அதற்கு கொடுக்கும் கட்டளைகள் சிரமேற் கொண்டு, அப்படியே செய்யும் அடிமைகள் போன்றன. மனித உணர்ச்சிகள் பற்றிய பிரக்ஞை இல்லாத ஓர் இயந்திரத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என ஆய்வாளர்கள் குழு மறுக்கிறது. வசீகரன் மீண்டும் ‘சிட்டி’ மனித உணர்ச்சிகளை புரிந்துக் கொள்ளும் படி பயிற்சியளிக்கிறார்.

உணர்ச்சி வந்ததும் வசீகரனின் காதலியான் சனா மேல் ‘சிட்டி’ ரோபோவுக்கு காதல் வருகிறது. காதல் வந்து எடக்கு செய்யும் ‘சிட்டி’ ரோபோவை கடுப்பாகி, வெறுப்பாகி அழித்து விடுகிறார் வசீகரன். தீயவன் ஒருவன் கையில் சிக்கும் அந்த அப்பாவி ‘சிட்டி’ ரோபோ, அழிவு சக்தி கொண்ட மேம்படுத்தப்பட்ட வில்லன் ரோபோவாக உருமாறி சனாவை கடத்தி செல்கிறது. கட்டற்ற சக்தியுடைய வில்லன் ரோபோவிடமிருந்து வசீகரன் தன் காதலியை மீட்டாரா என்ற கேள்விக்கு விடையுடன் படம் நிறைவுறுகிறது.

ரஜினி விஞ்ஞானி வசீகரனாக; ‘சிட்டி’ ரோபோவாக; வில்லன் ரோபோக்களாக; நூற்றுக் கணக்கான அடியாள் ரோபோக்களாக அசத்தியுள்ளார். ரஜினியின் நடிப்பு சில மலரும் நினைவுகளை கிளறக் கூடும். குறிப்பாக அவரது எகத்தாளமான வில்லத்தன நடிப்பு திரையரங்கை அதிர வைக்கிறது. ‘சிட்டி’ ரோபோவாக அவர் ஐஸ்வர்யாராயுடன் நடனமாடும் பொழுது.. அவர் தானா என சந்தேகம் பலமாக எழுகிறது. இயக்குனர் ஷங்கர் தனது பிரும்மாண்டத்தால் ரஜினி என்னும் மாய பிம்பத்தை மூழ்கடிக்க எத்தனித்தாலும்.. ஒரு நடை, ஒரு பார்வை, வசன உச்சரிப்பு, உடல் மொழி என ரஜினி தன் மாய பிம்பத்தை மிக எளிதாக தக்க வைத்துக் கொள்கிறார்.

ஐஸ்வர்யா ராய் நாயகியாக. பாடல்களுக்கு நடனம் மட்டும் ஆடுவதையும் மீறி படத்தின் முதல் பாதியில் அதிகமாகவே திரையில் தோன்றுகிறார். சிவாஜி படத்திலேயே ரஜினியுடன் நடித்திருக்க வேண்டியது. ஆனால் ஷ்ரேயாவிற்கு கிடைத்தது அந்த வாய்ப்பு. இந்த முறையும் ஐஸ்வர்யா அவர்கள் தமது நேரத்தை ஒதுக்கவில்லை எனில்.. தமன்னாவுடன் ரஜினி நடித்திருப்பாரோ என சந்தேகம் எழலாம். ஆனால் உலகளாவிய வியாபாரத்தை மனதில் கொண்டு தயாரிப்பு தரப்பு எவ்வளவு நாள் ஆகி இருந்தாலும் ‘உலக அழகி’ பட்டம் வென்று சர்வதேச அளவில் பரவலாக அறியப்பட்ட ஐஸ்வர்யாராயிற்காக காத்திருந்திருப்பனர்.

சந்தானம், கருணாஸ் நகைச்சுவைக்காக இருப்பார்களோ என்று எண்ணி விட வேண்டாம். அவர்களும் படத்தில் உள்ளனர். அவ்வளவே!! ஆனால் ‘கொச்சின்’ ஹனீஃபா மற்றும் கலாபவன் மணி ஒரு காட்சியிலேயே தோன்றினாலும் ரசிக்க வைக்கிறார்கள். ரஜினியே சகல பாவத்தையும் தனி ஆவர்த்தனமாக செய்வதால்.. நகைச்சுவையாளர்களுக்கு அதிக வேலையில்லாமல் போய் விட்டது. அதே போல் வில்லன் டேன்னி டென்ஞோங்பா.. தன் குரூரத்தை விழிகளில் வெளிப்படுத்தியது மீறி பெரிய அளவில் சோபிக்க வாய்ப்பில்லாமல் போய் விட்டது.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் அருமை எனில் அதை காட்சிகளுடன் பார்த்து அனுபவிக்கும் பொழுது பிரமாதமாக உள்ளது. இயக்குனர் ஷங்கரும், ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவும் படப்பிடிப்பு தொடங்கும் முன், வியன்னா, ரியோ டி ஜெனரியா, ஆஸ்ட்ரியா, பிரேசில், வியட்னாம் என்று உலகச் சுற்றுலா சென்று பாடல் காட்சிகளுக்கு இடம் தேடி உள்ளனர். அப்படி அவர்கள் கண்ணில் சிக்கிய இடம் தான் ‘காதல் அணுக்கள்’ பாட்டில் வரும் மணல் குன்றுகள் நிறைந்த பிரேசிலின் வெள்ளப் பகுதியான ‘லென்கோயிஸ் மாரன்கென்சஸ்’ தேசிய பூங்கா ஆகும். அங்குள்ள சிறு சிறு ஏரிகளை முழுவதும் மேல் கோணத்தில் இருந்து காட்ட, ஹெலிகாப்டரில் பறந்து படம் பிடித்துள்ளனர். அதே போல்.. ‘கிளிமஞ்சாரோ’ பாடலிற்காக உலக அதிசயம் என கருதப்படும் பெரு நாட்டின் ‘மச்சு பிச்சு’ என்னும் மலை மீது படமாக்கப்பட்டுள்ளது. ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவின் மிக அருமையான ஒளிப்பதிவு படத்தின் மாபெரும் பலம். பிண்ணனி இசையின் துல்லியம் அனைத்து காட்சிகளிலும் தெரிகிறது. ரசூல் பூக்குட்டியின் கைங்கரியமாக இருக்கும். ஒளியும், ஒலியும் கை கோர்த்துக் கொண்டு திரையில் விருந்தாக விரிகிறது.

இயக்குனர் ஷங்கர். முதல் பாதி படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் ரசிக்க வைக்கிறார். நாயகன் ரஜினியை விட இயக்குனர் ஷங்கரே நினைவில் வருகிறார். ஆனால் இரண்டாம் பாதியில் தொழில்நுட்பத்தை அபிரிதமாக உபயோகித்து.. ஒரு பிரமிப்பை ஷங்கர் ஏற்படுத்துகிறாரே தவிர ரசிக்க வைத்தாரா என்றால் சந்தேகம் தான். இரண்டாம் பாதியை ஆக்கிரமிப்பது வில்லன் ரோபோவாக வரும் ரஜினியின் நடிப்பு தான். நூறு ரஜினிகள் இயந்திர பந்தாய் மாறுவது, கார்களை விழுங்கும் பாம்பாய் மாறுவது, பெரும் உருளையாய் மாறி புரள்வது, பூமியை துளையிடும் பெரும் இயந்திரமாய் மாறுவது, இராட்ஷ ரோபோவாய் வளருவது என ஷங்கரின் பிரும்மாண்டம் சற்று தலையை கணக்க செய்கிறது. இத்தகைய பெரும் முயற்சி இல்லாமலே முதல் பாதி ரசிக்க வைத்தது. அதுவும் ட்ரெயினில் நடக்கும் சண்டைக் காட்சிகள் அதிரடி பிரியர்களுக்கு பீட்டர் ஹெய்னின் விருந்து. வசனம் பல இடங்களில் ரசிக்க வைக்கிறது. ஆனால் அதற்கு காரணம்.. சுஜாதாவா, ஷங்கரா அல்லது கார்க்கி வைரமுத்துவா என தெரியவில்லை. கதையிலும் அதிகம் மெனக்கெடவில்லை என்றே தோன்றுகிறது. காதல், காதலர்கள், வில்லன் என்ற வட்டத்தை தாண்டவில்லை. கற்பனையை தொழில்நுட்பத்தை எப்படி பயன்படுத்தலாம் என்றே செலுத்தியுள்ளார். அந்த வகையில் இந்த படம் தமிழ்த் திரையுலகத்திற்கு புதிய சாதனை முயற்சி. வில்லன் ரோபோவை மடக்க மின் இணைப்பை துண்டிக்கும் யோசனை அருமை. ஆயினும் அடுத்த காட்சியில் அது தோல்வி என கைவிடுவது ஏன் என்று புரியவில்லை. படம் ஏற்படுத்தி இருக்க வேண்டிய தாக்கத்தை ஷங்கர் தன் பிரும்மாண்டங்கள் மூலமாகவே கலைத்து விடுகிறார்.

சன் பிக்சர்ஸ் நேரடியாக தயாரிக்கும் முதல் படம். ஒரு பைசா கூட தவற விட்டுவிட கூடாதென சிந்தாமல் சிதறாமல் வியாபாரம் செய்கிறார்கள்.

எந்திரன்- ஓர் இயக்குனரின் கனவு, தொழிலதிபர் ஒருவரின் பொன் முட்டை வியாபாரம், சூப்பர் ஸ்டார் என்னும் மாய பிம்பத்தின் விஸ்வரூப நிரூபனம்.