ஜேக் ரையன் என்பவர் ஜேம்ஸ் பாண்ட், ஷெர்லாக் ஹோல்ம்ஸ் போல ஒரு சாகசகார ஸ்பெஷல் ஏஜென்ட் கதாபாத்திரம்.
டாம் க்ளென்ஸி எனும் எழுத்தாளர் படைத்த கற்பனை கதாபாத்திரம் இது. கதைப்படி, ஜேக் ரையன், அமெரிக்காவின் உளவுத்துறையில் டேட்டா அனலிஸ்ட்டாக வேலை செய்பவன். உலகெங்கும் நடக்கும் அசாதாரணச் செயற்பாடுகளைக் கண்காணித்து அது குறித்து அரசாங்கத்துக்கு ரிப்போர்ட் அளிக்கும் வேலை. ஆனால், இவனுக்கு டெரரான ஃப்ளாஷ்பேக் இருக்கிறது. அமெரிக்காவின் மெரைன் (கடல் சார்ந்த) ராணுவத்தில் பணியாற்றி, விபத்தால் முதுகுதண்டு உடைந்து குணமான பிறகு மிலிட்டரி அனலிஸ்ட்டாக மாறியவன்.
இந்தக் கதாபாத்திரத்தை வைத்து டாம் க்னென்ஸி பல கதைகள் எழுதியிருக்கிறார். அனைத்தும் பெரிய ஹிட். இந்தக் கதைகள் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளன. அந்த சீரிஸில், 2002 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் “த சம் ஆஃப் ஆல் ஃபியர்ஸ்”.
வழக்கமான ஆக்ஷன் படமாக இல்லாமல், பொலிட்டிக்கல் த்ரில்லராக இருப்பதே இந்தப் படத்தின் சிறப்பம்சம். பயமும், நம்பிக்கையின்மையும் எப்படியெல்லாம் ஆட்சியாளரைக் குழப்பும் என்பதைப் புரிந்து கொள்ள இந்தத் திரைப்படம் உதவும்.
அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் பனிப்போர் நிகழும் காலகட்டம். ரஷ்யாவில் புதிய அதிபர் பதவி ஏற்கிறார். அவர், அமெரிக்க ஆதிக்கக்தை விரும்பாதவர் என்ற இமேஜ் இருக்கிறது. ரையன், அவர் ஆபத்தானவர் அல்ல, நட்பை விரும்புபவர் என்று வாதிடுகிறார். ஆனால், அமெரிக்க உயர்மட்டக் குழு இவரை நம்பவில்லை. ஒரு பாலைவனப்பகுதியில் என்றைக்கோ விபத்துக்குள்ளாகி உடைந்த விமானத்துடன் புதைந்த ஓர் அணுகுண்டு, சதிகாரர்கள் கையில் கிடைக்கிறது. அதனை அமெரிக்காவின் ஒரு விளையாட்டு மைதானத்தின் மீது வீசி பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொல்கின்றனர். அமெரிக்க அதிபர் அந்த குண்டு வீச்சில் அதிர்ஷ்டவசமாகத் தப்பிக்கிறார்.
அமெரிக்க அரசு, இதனை ரஷ்யா தான் செய்தது என நம்பி, ரஷ்யாவின் மீது போர் தொடுக்கத் திட்டமிடுகிறது. ரஷ்யாவும், தன்னைக் காத்துக் கொள்ள பதிலடி கொடுக்கத் தயாராகிறது. இந்தப் பெருங்குழப்பத்தை (Chaos) விரும்பிய சதிகாரர்கள் இதனை மறைவாக ரசிக்கிறார்கள். ரையன், இந்த அணுகுண்டின் பூர்வீகம், அதில் தொடர்புடையவர்களைக் கண்டுபிடித்து, ரஷ்யாவுக்கு இதில் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை நிறுவி, நடக்கவிருக்கும் மிகப் பெரிய அமெரிக்க – ரஷ்யா போரினை நிறுத்துவது தான் கதை.
நாடுகளுக்கிடையே இருக்கும் நம்பிக்கையின்மையும், தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் எடுக்கும் முடிவுகள் எந்தளவுக்கு எளிய மக்களைப் பாதிக்கும் என்பதையும் மிக அழகாக காட்சிப்படுத்தியிருப்பார்கள். குறிப்பாக அமெரிக்க அதிபருக்கும், ரஷ்ய அதிபருக்கும் இடையே நிகழும் ஹாட்லைட் உரையாடல் டாப்-க்ளாஸ்.
ரையனாக பென் அஃப்லெக் (இப்ப பேட்மேனாக நடிப்பவர்) நடித்திருக்கிறார். மார்கன் ஃப்ரீமேனும் இருக்கார்.
ஜேக் ரையன் கதாபாத்திரம் சார்ந்த ஒரு டீவி சீரியலும் அமேசான் ப்ரைமில் ரெண்டு சீசன் வெளிவந்திருக்கிறது. அதன் முதல் சீசன் ரொம்ப நன்றாக இருக்கும்.
– ஜானகிராமன் நா