
“எழுமின்! விழிமின்! குறி சாரும்வரை நில்லாது செல்மின்!” என்பது விவேகானந்தரின் வாக்கு. விஸ்வநாதன், அர்ஜுன் ஸ்போர்ட்ஸ் அகாடெமி தொடங்கும் பொழுது, மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் விவேகானந்தரின் இவ்வாக்கை மேற்கோள் காட்டியே உரையாற்றுகிறார். இது மாணவர்களுக்கான படம். ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் அப்துல் கலாமும், பதாகைகளில் வலம் வருகிறார்.
மாணவர்களுக்குத் தற்காப்புக் கலை ஏன் அவசியம் என்றும், விளையாட்டுத் துறையில் நிலவும் ஊழல் குறித்தும் படம் பேசுகிறது.
அஜய் குங் ஃபூவிலும், கபின் கராத்தேவிலும், வினீத்தும் அர்ஜுனும் பாக்ஸிங்கிலும், சாரா ஜிம்னாஸ்டிக்கிலும், ஆதிரா சிலம்பத்திலும் திறமைசாலிகள். இவர்கள் ஆறு பேரும் நண்பர்கள். இதில் நான்கு பேர் ஏழைக்குடும்பத்தில் இருந்து வருபவர்கள். ‘படிக்காமல் என்ன விளையாட்டு வேண்டிக் கிடக்கு?’ என்ற எண்ணமுடைய அவர்களின் பெற்றோர்களைச் சமாதானம் செய்து, மாணவர்கள் விருப்பப்பட்ட துறையில் சாதிக்கத் தூண்டுகிறார் விவேக். அவருக்கு உற்ற உறுதுணையாக வருகிறார் தேவயானி.
இது குழந்தைகளுக்கான படம். அஜயாக பிரவீனும், கவினாக ஸ்ரீஜித்தும், அர்ஜுனாகச் சுகேஷும், ஆதிர்சவாகக் க்ரித்திகாவும், சாராவாகத் தீபிகாவும், சுட்டிப் பையனாக இயக்குநரின் மகன் வினீத்தும் நடித்துள்ளனர். சிலம்பம் சுற்றும் ஆதிராவைக் கதாநாயகி எனக் கொள்ளுமளவு, அவளுக்கான சண்டைக் காட்சிகள் ஏராளம் வைக்கப்பட்டுள்ளன. பசங்களைக் கொண்டு, ஸ்டன்ட் மாஸ்டர் மிராக்கிள் மைக்கேல் ஆக்ஷனில் அசத்தியுள்ளார்.
குழந்தைகளுக்கான படம் என்பதாலோ என்னவோ, திரைக்கதையில் ஆழமான மெனக்கெடலினைப் போடவில்லை இயக்குநர் V.P.விஜி. ஸ்போர்ட்ஸ் அகாடெமியில் தற்காப்புக் கலைகள் மட்டுமே பயிற்றுவிக்கப்படுவது, உள்ளூர் போட்டிகளோ, மாநில/தேசிய அளவு போட்டிகளோ, காமெடி வில்லனான அழகம்பெருமாளின் அகாடெமி மாணவர்களுக்கும், விவேக்கின் அகாடெமி மாணவர்களுக்கு மட்டுமே போட்டி நடப்பது நல்ல நகைச்சுவை. அதுவும் அந்தப் போட்டிகள் எல்லாம் ஒரே ஒரு சுற்று மட்டுமே கொண்டவை என்பது இன்னும் நகைச்சுவை. காணாமல் போகும் மாணவர்களைக் கண்டுபிடிக்கக் காவல்துறையினர் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் நகைப்புக்குரியதாக உள்ளன. ஆனால், இயக்குநரின் பிரதான நோக்கமான, மாணவர்களுக்குத் தற்காப்புக் கலை அவசியம் என்ற கருத்தினில் இருந்து வழுவாமல், அதற்குப் போதுமான நியாயத்தினைச் செய்துள்ளது சிறப்பு. படத்திலும் வினீத்துக்குத் தந்தையாகக் கேமியோ ரோல் செய்துள்ளார் இயக்குநர்.
கூடுதல் பலன் என பள்ளி விட்டு வந்த பின்னும், ஏதோ ஒரு பாடத்தை மாணவர்களின் மூளைக்குள் திணிப்பதற்குப் பதில், விளையாட்டிலோ தற்காப்புக்கலையிலோ அவர்களது நேரத்தைச் செப்பனிடுவது சாலச் சிறந்தது. தன்னை மட்டும் காத்துக் கொள்ளாமல், பிறரையும் காப்பார்கள் தற்காப்புக் கலை பயின்ற மாணவர்கள் என்ற மெஸ்சேஜ் அழுத்தம் திருத்தமாகச் சொல்லப்பட்டுள்ளது படத்தில்.