ஏப்ரல் 1 அன்று, நேரடியாக நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ள படம்.
சிறு வயதிலேயே ஊரை விட்டுப் போய்விடும் மீரா, தன் பாட்டி கிருஷ்ணவேனியைப் பார்க்க வேண்டாவெறுப்பாக ஆப்பனூர் எனும் கிராமத்திற்கு வருகிறாள். அவர்கள் உறவுக்குள் என்ன சிக்கல், அது எப்படி நகர்கிறது என்பதுதான் படத்தின் கதை. என்றாலும், ஒருவரின் மரணத்தை ஆப்பனூர் மக்கள் எப்படி அணுகுகின்றனர் என்பது கதையோடு பின்னிப் பிணைந்த இழையாக வருகிறது. இந்த இழை தான் படத்தின் தனித்துவத்திற்கும் சிறப்பிற்கும் காரணம்.
ஜில் ஜங் ஜக் படத்தில், ஜக்-காக நடித்திருந்த அவினாஷ் ரகுதேவன், ஒப்பனைக் கலைஞன் குபேரனாக நடித்துள்ளார். இறந்தவர்களைக் குளிப்பாட்டி, அரிதாரம் (சாயம்) பூசி, நாற்காலியில் இறந்தவரைஅலங்காரத்துடன் ஜம்மென்று உட்கார வைக்கும் கலைஞன். இறந்தவர்களுக்கு இறுதி மரியாதை செய்யும் ஓர் ஆத்மார்த்தமான கர்வம் குபேரனிடம் எப்பொழுதும் இருக்கும். தான் செய்த தவறைப் பொதுவில் ஒத்துக் கொள்ளும் பொழுது, அவனது கர்வம் உடைபடும் காட்சி அற்புதம். அதிலும் குறிப்பாக, அருகில் இருக்கும் நண்பனிடம், மன்னிப்புக் கோரும் ஒரு வசனம் மிக அற்புதம். ‘மன்னிச்சிடு சங்கு! உனக்குக் கூடச் சொல்லலை’ என தவறுக்காகப் பொதுவில் மன்னிப்புக் கேட்கும் பொழுதே, அதை நண்பனிடம் மறைத்ததற்காக ஒரு கிளை மன்னிப்பை இடையே சேர்த்துக் கேட்பான். இப்படியாக, எதார்த்தமான தன்னிச்சையான வசனங்கள் படத்தின் தரத்தை உயர்த்துவதோடு, மேலும் ரசிக்கும்படியும் செய்கிறது.
குபேரனின் நண்பர்கள் சங்குதேவனாகவும், பாகுபலியாகவும் நடித்துள்ள P.ராதாகிருஷ்ணனும், ‘மொசக்குட்டி’ ராஜேந்திரனும் அவர்களின் அறிமுகம் முதலே கவனிக்க வைக்கின்றனர். கிருஷ்ணவேணி பாட்டியுடன் ஒப்பாரி வைக்கும் சக கலைஞி அமுதாவாக, கேப்ரியலா நடித்துள்ளார். பாட்டிக்கும் பேத்திக்கும் இடையில் ஒரு தூணாகவும், சீமையில் இருந்து வந்த படோடோபமான மீராவிற்கு நேரெதிர் கிராமத்துப் பெண்ணின் அடையாளமாகவும் திரையில் மிளிர்கிறார்.
ஒப்பாரிக் கலைஞர் கிருஷ்ணவேனியாக ஸ்ரீலேகா ராஜேந்திரன் நடித்துள்ளார். இவர் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்தவர். அந்த அனுபவத்தை அழகாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார் இயக்குநர் ஆனந்த் ரவிசந்திரன். ஷாம்நாத்தின் இசையில், ஒப்பாரிக் கலையின் உச்சத்தைப் படம் தொட்டிருந்தால், நெஞ்சை நிமிர்த்தி மார்தட்டிக் கொள்ளும் உலக சினிமாவாக இப்படம் பரிணமித்திருக்கும். ஆனால் அதைச் சமன் செய்யும் விதத்தில் படத்தில் இரண்டு அற்புதமான பாடல் உள்ளது. ஒன்று, பள்ளிவாசல் மதிற்சுவரை ஒட்டிய மண் பாதையில் பாட்டியும் பேத்தியும் நடந்து வரும்போது, மெல்ல ஒலிந்தெழும், ‘அண்ணே, அண்ணே, கோடாங்கியண்ணே!’ என்ற பிரமாதமான நாட்டுப்புறப் பாட்டு; மற்றொன்று, முத்துபாண்டி எனும் பாத்திரம், மனம் கொள்ளா மகிழ்ச்சியோடு வைப்பாட்டி வீட்டில் கூடலுக்குத் தயாராகும் பொழுது வரும்,
‘ஜாரி ஜோக்கர் ஐயா
ரெடியா தான் ஆகுறியா?’
என்ற பாடல். அந்தப் பாடல் வரிகள், முத்துபாண்டியாக நடித்திருக்கும் விசித்திரன் தயாராகும் பவுஸு, தயாரான பின் ஒவ்வொரு கதவாக அடைத்துக் கொண்டே செல்லும் ஸ்டைல் எனப் பாடலில் ரசிப்பதற்கு ஏராளமான சங்கதிகள் உள்ளன. ஒளிப்பதிவாளர் மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரியின் வொர்க்கும் செம!
இந்தப் பாடல் ஒரு சின்னஞ்சிறு பிட்டுதான். அதைத் தொடர்ந்து வரும் காட்சி, பிளாக் காமெடியின் உச்சம் எனச் சொல்லுமளவுக்குத் தரமான சம்பவமாக உள்ளது. காரணம், திரையில் நடிப்பைக் கசக்கிப் பிழியப் பிரயாசைப்படாத அசல் கிராமத்து மனிதர்கள் இருப்பதே!
சில்லு கருப்பட்டியில் வரும் ‘காக்கா கடி’ குறும்படத்தில் கலக்கியிருந்த நிவேதிதா சதீஷ், இப்படத்தில், சினிமாவில் பணிபுரியும் மேக்கப் ஆர்டிஸ்ட் மீராவாக அசத்தியுள்ளார். சிகரெட் பிடித்துக் கொண்டே கிராமத்துக்குள் கிளிஷேவாக அறிமுகமானாலும், தன் மனத்தாங்கலைப் பாட்டியிடம் கொட்டும்பொழுது அவரது கதாபாத்திரம் கனமிக்கதாய் மாறுகிறது.
இறந்தவர்களுக்கு ஒப்பனை போடும்பொழுது ஒரு மகத்தான கலையாகத் தெரிந்தது, உயிருள்ளவர்களுக்குப் போடும் பொழுது ஜீவனற்ற பூச்சாய் மலினப்பட்டுவிடுவதை மீரா உணரும் தருணத்தை இன்னும் அழுத்தமாய்ப் பதிந்திருக்கலாம்.
பிறப்பைப் போலவே மரணமும் கொண்டாட்டம் தான் என்ற பாட்டியின் அனுபவத்தைப் பேத்தி சரியாக உள்வாங்கிக் கொள்ளவில்லையோ எனத் தோன்றுகிறது. க்ளைமேக்ஸில், சகிக்க முடியாத மெளனத்தைக் கிழித்துக் கொண்டு எழும் ஒப்பாரிப் பாடல் மனதை ஏதோ செய்திருக்கவேண்டும். ஆனால், படம் அதன் உச்சத்தை இடையிலேயே தொட்டுவிடுவதால், க்ளைமேக்ஸ் ஏற்படுத்தியிருக்க வேண்டிய தாக்கம் முழுமையடையவில்லை.
சினிமாவைப் பொழுதுபோக்காக அணுகுபவர்களையும் சரி, கலையாக அணுகுபவர்களையும் சரி, இரு சாரரையுமே படம் நிச்சயம் திருப்திப்படுத்தும். அறிமுக இயக்குநர் ஆனந்த் ரவிசந்திரனுக்கு வாழ்த்துகள். 💐