Shadow

ஃபைட் க்ளப் விமர்சனம்

உப்புக்காற்றும் உறை மணலும் உறவாடும்  வடசென்னைப் பகுதிகளை களமாக எடுத்துக் கொண்டு, அம்மக்களின் மனநிலையிலும் வாழ்க்கையிலும் ஒளிந்திருக்கும் இருவேறுவிதமான முரண்பட்ட வாழ்க்கை முறையை  யதார்த்த அழகியலுடன் பேச முற்பட்டிருக்கிறது ஃபைட் கிளப்.

வடசென்னை என்றாலே கால்பந்தாட்டமும், கேரம் போர்டுகளும், ரெளடியிசமும், கேங்க் வார்களும், போதைப் பொருட்களும் தானா? இதைத் தாண்டி அம்மக்களிடம் வாழ்க்கை மற்றும் வாழ்வியலுக்கான கூறுகள் ஏதுமே இல்லையா  என்கின்ற கேள்வி எவ்வளவு நியாயமானதோ,  அதே அளவிற்கு நியாயமானது, அங்கு ஏன் ரெளடிசமும், கேங்க் வார்களும், போதைப் பொருட்களும் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அம்சங்கள் ஆகின்றது என்பதும்.  இவற்றை மாற்ற அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகள் என்ன  என்கின்ற கேள்விகளும் முக்கியமானவை.

வடசென்னை என்பது புரசைவாக்கத்தின் பின்புறமுள்ள அயனாவரத்தில் துவங்கி பெரம்பூர், வில்லிவாக்கம், யானைகவுனி, வியாசர்பாடி, புளியந்தோப்பு, ராயபுரம், காசிமேடு, பழைய வண்ணாரப்பேட்டை, எண்ணூர், ஆந்திர பார்டரில் வரும் அத்திப்பட்டு வரை பரவி விரிந்து கிடக்கிறது. இதில் வடசென்னையில் கடலோரப் பரப்புடன் தொடர்புள்ள பகுதிகள் என்றால் ராயபுரம், காசிமேடு மற்றும் எண்ணூர் துறைமுகப்பகுதி மட்டும் தான். இவை தவிர்த்து பிற பகுதிகளான பெரம்பூர், வில்லிவாக்கம், அயனாவராம் போன்றவை எல்லாம் தொழில்துறைப் பகுதிகள். உடல் உழைப்பை மட்டுமே நம்பி வாழும் உழைக்கும் வர்க்கத்தினருக்கான சிறு பெரு தொழில் நிறுவனங்கள் இயங்கும் பகுதி அது. அங்கெல்லாம் அன்றாட கூலித் தொழிலாளர்கள் முதற்கொண்டு, மாத சம்பளம் பெறும் நடுத்தர வர்க்க குடும்பங்களும் அதிகம்.  ஆனால் தமிழ் சினிமா பெரும்பாலும் காட்டும் வடசென்னைப் பகுதி என்பது கடலோரப்பகுதிகளான எண்ணூர், காசிமேடு மற்றும் ராயபுரம் பகுதிகளை உள்ளடக்கியது.  இங்கிருக்கும் பெருவாரி மக்களின் வாழ்வாதாரம் கடலும், கடல் சார்ந்த தொழிலும் தான்.  கடல் சார்ந்த தொழில் என்றால் கடல்சார் உணவுகள் தொடர்பான தொழில்களும்,  கடற்கொள்ளை மற்றும் கடல்வழிக் கடத்தல் தொடர்பான தொழில்களும்.  இதில் ஈடுபடும் நபர்கள் அல்லது மக்களின் எண்ணிக்கை சதவிகித அடிப்படையில் மிகக் குறைவாக இருந்தாலும்  இவர்களின் அடையாளமே ஒட்டு மொத்த வடசென்னை மக்களின் அடையாளமாக மாறிப் போனது என்னவோ அழிக்கமுடியாத ஓர் அவலம் தான்.

அதற்கு வடசென்னையின் அந்த நிலவரையமைப்பும் ஒரு முக்கிய காரணம். எப்படியென்றால் தமிழ்நாட்டில் இருக்கும் முக்கியமான துறைமுகங்களுள் எண்ணூர் துறைமுகம் மிக முக்கியமானது. சென்னை துறைமுகத்தை விட இது அளவிலும் பெரியது. அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவிற்கு சரக்குகள் பெரும்பாலும் எண்ணூர் துறைமுகங்களில் இருந்தே அனுப்பப்படுகின்றன. கடல்சார் உணவுகளான நண்டு, மீன், இறால் போன்றவையே ஒரு நாளைக்கு 150 டன் இறங்குகிறது. இதில் 30 சதவிகிதம் அண்டை மாநிலங்களுக்கு ஏற்றுமதி ஆகிறது. இந்த உணவுப் பொருட்களின் ஊடாக கள்ளச் சந்தையில் இறக்கப்படும் சட்டத்திற்குப்  புறம்பான பொருட்களும் பெரும்பாலும் எண்ணூர் துறைமுகம் வழியாகவே கைமாற்றப்படுகிறது என்கின்றது புள்ளிவிவரங்கள். இதனால் எளிய மீனவ மக்களும், இது போன்ற சட்டத்திற்குப் புறம்பான தொழில் செய்யும் சில மனிதர்களும் இயல்பாகவே கலந்து இருக்கும் சூழல் உருவாகிறது. இதனால் இங்கு வாழும் மக்களில் பலர் தொழில் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் நீதிக்கும் அநீதிக்குமான மன மற்றும் உடல் போராட்டங்களை நித்தம் நித்தம் எதிர்கொள்ளும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர். இது பெரும்பாலான நேரங்களில் அவர்களின் வாழ்க்கையை சிதைக்கிறது.

இதைத்தான் இயக்குநரும் நடிகருமான விஜயகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் “ஃபைட் கிளப்” திரைப்படமும் பேசி இருக்கிறது. நேர்மையான முறையில் தன் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளப் பார்க்கும் பெஞ்சமின் (கார்த்திகேயன் சந்தானம்) அது முடியாமல் போகும் போது தன் மக்களுக்காவது அந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கப் போராடுகிறான்.  அதில் இளவயது செல்வாவின் (விஜயகுமார்) வாழ்க்கையும் அடக்கம். அதே நேரம் பெஞ்சமினின் தம்பி ஜோசப்பும், அவன் கூட்டாளி கிருபாவும் குறுக்குவழியில் கள்ளப்படகுகள் வழியாக இறக்கப்படும் கஞ்சாவை விற்று முன்னேற முயலுகிறார்கள்.  ஒரு கட்டத்தில் பெஞ்சமினுக்கும் ஜோசப்பிற்கும் முட்டிக் கொள்வதைத் தொடர்ந்து யார் யாரின் வாழ்க்கை எப்படியெல்லாம் திசைமாறிப் போனது என்பதை ரத்தம் தெறிக்கக் காட்டியிருக்கிறது “ஃபைட் க்ளப்” திரைப்படம்.

செல்வாவாக விஜயகுமார்.  தன்னை ஒரு சிறந்த கால்பந்தாட்ட வீரனாக முன் நிறுத்தப் போராடும் முனைப்பு மிக்க கதாபாத்திரம்.  அந்தக் கனவு முடியாமல் தோற்கும் போது அடுத்து என்ன செய்வது என்றே தெரியாமல் விட்டேத்தித்தனமாக திரிவதும்,  தனக்குள் பொதிந்திருந்த வன்மத்திற்கு தீனி கிடைத்ததும் தன்னைப் பற்றியோ, தன் குடும்பத்தைப் பற்றியோ அல்லது தன்னை சுற்றி இருப்பவர்களைப் பற்றியோ சற்றும் எண்ணிப் பார்க்காமல் கவலை கொள்ளாமல் முட்டாள்தனமான முடிவுகளை எடுக்கும் இடத்தில், அந்த வாழ்க்கையின் வலிகளையும், விரோதமும் கோபமும் புத்தியை மழுங்கடிக்கச் செய்வதையும் கண் முன் நிறுத்துகிறார். ஆக்‌ஷன் காட்சிகளுக்கு உதவும் உடல்மொழியும் கண்களும், எமோஷ்னல் காட்சிகளுக்கு பெரிதாக ஒத்துழைக்காதது ஒரு குறை. மற்றபடி ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.

ஜோசப்பாக நடித்திருக்கும் அவினாஷ் ரகுதேவன் நடிப்பில் மிரட்டி இருக்கிறார். இவரின் கதாபாத்திர வடிவமைப்பும் மிக நேர்த்தியான ஒன்றாக இருக்கிறது. இயலாமையையும் துரோகத்தையும் ஒரு சேர கண்களில் காட்டிக் கொண்டே தன் வன்மத்தை தீர்த்துக் கொள்ள காய் நகர்த்தும் ‘கன்னிங்’ நிறைந்த கதாபாத்திரம். வெகு சிறப்பாக நடித்திருக்கிறார். இவர் சில இடங்களில் காட்டும் முதிர்ச்சியான நடிப்பு ஆச்சரியப்படுத்துகிறது. தான் ஏமாற்றப்பட்ட வலியுடனே தன்னை ஏமாற்றியவனைப் பழிவாங்க இன்னொருவனை ஏமாற்றும் குரூர சிந்தனையை உடலுக்குள் ஒளித்துக் கொண்டு ஒட்டி உறவாடும் அவரைப் பார்க்கும் போது நமக்கே கொலைவெறி தோன்றுகிறது.

கிருபாவாக வரும் சங்கர் தாஸும் சிறப்பாக நடித்திருக்கிறார். பொட்டலம் ஓட்டும் போது ஒரு உடல்மொழி. கவுன்சிலர் ஆனப் பின்பு வேறுவிதமான  உடல்மொழி என்று நடிப்பில் வெரைட்டி காட்டி அசத்தி இருக்கிறார். ஆரம்பத்தில் தன் நோக்கமாக எதைக் கூறினாரோ அதை அச்சு அசலாக செய்து முடித்து தலை நிமிரும் கதாபாத்திரம், முன்னாள் விதைத்த வினைக்கு வீழ்ந்து போவது போல் படைக்கப்பட்ட பாத்திரப் படைப்பு சிறப்பு. அதற்கு தன் அற்புதமான இயல்பான நடிப்பின் மூலம் உயிர் கொடுத்திருக்கிறார் சங்கர் தாஸ். வாழ்த்துக்கள்.

இவர்கள் தவிர்த்து பெஞ்சமினாக வரும் கார்த்திகேயன் சந்தானம், ரஸாக் ஆக வரும் வடசென்னை அன்பு,  கார்த்தியாக வரும் சரவணவேல், உதயாவாக வரும் சார்பட்டா சாய் தமிழ் என எல்லோருமே சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.

லியோன் பிரிட்டோவின் ஒளிப்பதிவு பழக்கப்பட்ட வடசென்னையை வேறு ஒரு ஒளிவண்ணத்தில் காட்டி கண்களுக்கு விருந்தளிக்கிறது. கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை, கொலைக்காட்சிகளில் கூட உள்ளத்தை கொள்ளை கொண்டு போய்கிறது.  வன்மத்தின் மீதான அழகியலை தன் இசையில் தடம் பிடித்து காட்சிகளோடு கோர்த்திருக்கிறார் மனிதர். அது ஒட்டு மொத்தப் படத்திற்கே வேறொரு கலரைக் கொடுத்து கலக்கி இருக்கிறது. கிருபாகரணின் தனித்துவமான புதுமையான எடிட்டிங் யுக்திகள் புதுவிதமான கதை சொல்லலுக்கு இயக்குநருக்கு வழியமைத்துக் கொடுத்திருக்கின்றன.  யார் கையை யார் பிடித்துக் கொண்டு செல்கிறார்கள் என்று தெரியாத அளவிற்கு காட்சிக் கோர்வையின் மீதான வெட்டுக்களும், இசைக் கோர்ப்புகளும் உல்லாசம் அனுபவிக்கும் அரவங்களைப் போல் பின்னிப் பிணைந்து படம் எங்கும் நெடிந்து விரிந்து கிடக்கின்றன.

இயக்குநர் அபாஸ் அ ரஹமத் தனது முதலாவது படத்திலேயே வித்தியாசமான பாணியிலான கதை சொல்லல் மூலம் கவனம் ஈர்த்திருக்கிறார். பழக்கப்பட்ட  கதை, பெரிய ஈர்ப்பில்லாத திரைக்கதையாக இருந்தாலும் அதை வழங்கியவிதத்தில் தான் ஒரு தனித்துவமான இயக்குநர் என்பதை நிருபித்திருக்கிறார். இசையையும் எடிட்டிங் யுக்திகளையும் கதை சொல்லும் பாணிக்கு பயன்படுத்திய விதம் பாராட்டுதலுக்குரியது. மேலும் ஜோசப், கிருபா மற்றும் செல்வம் ஆகிய மூன்று கதைமாந்தர்களின் கதாபாத்திர வடிவமைப்பு சிறப்பு.

குறையாகப் பார்த்தால், பழக்கப்பட்ட கதை, திரும்ப திரும்ப நடக்கும் கேங்க் வார் மோதல்கள், சுவாரஸ்யமற்ற வடசென்னை, பொல்லாதவன் போன்ற திரைப்படங்களை நினைவுபடுத்தும் திரைக்கதை ஆகியவற்றைச் சொல்லலாம்.

மொத்தத்தில் வன்முறையின் அழகியலை காட்சிப்படுத்திய அழகிற்காகவும், புதுவிதமான காட்சிகளுக்கு வலுசேர்க்கும்  துள்ளலான பின்னணி இசைக்காகவும், புதுமையான படுவேகமான எடிட்டிங் யுக்திகளுக்காகவும் இந்த “ஃபைட் கிளப்”பை நிச்சயமாகப் பார்க்கலாம்.

– இன்பராஜா ராஜாலிங்கம்