லவ் ஃபெயிலியரான ஒருத்தனின் மூன்று பெஸ்ட் ஃப்ரெண்ட்கள் படும் அவஸ்தை தான் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ படத்தின் கதை. தில்லுக்கு துட்டு ‘லொள்ளு சபா’ ராம்பாலாவிடம் பணியாற்றிய மகேந்திரன் ராஜமணி இப்படத்தை இயக்குகிறார்.
‘ஆக, நண்பர்கள் தான் நாயகனின் அடிமைகளா?’ என்ற கேள்விக்கு, “நண்பர்கள் அன்புக்கு அடிமை. நமக்காக எதுவும் செய்வார்கள் என்ற அர்த்தத்தில் தலைப்பை வைத்தோம். தலைவியிடம் (ஜெ.) சொல்லப்படும் இந்தப் பிரபலமான வசனத்தை எங்க கதைக்குத் தகுந்தாற்போல் உபயோகித்துக் கொண்டோம்” என்றார் மகேந்திரன் ராஜமணி.
“இந்தக் கதாபாத்திரத்திற்கு என்னை விட்டா வேறு யாரும் பொருந்த மாட்டாங்க எனக் கதை கேட்டதும் ஜெய் சொன்னார். படம் பார்த்ததும் ஆடியன்ஸும் அதைச் சொல்வாங்க. நான் படத்துக்குப் போகணும்னா நினைச்சா ஜாலியான ஒரு படத்துக்குத்தான் போவேன். அந்த மாதிரி தான் என் படத்தையும் எடுத்திருக்கேன். கண்டிப்பா மக்களும் இந்தப் படத்தை நல்லா என்ஜாய் செய்வாங்க” என மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறார் மகேந்திரன். ஜெய்யின் நண்பர்களாக கருணாகரன், காளி வெங்கட், நவீன் ஆகியோர் நடித்துள்ளனர். சகுனி படத்து நாயகி ப்ரணீதா ஜெய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.
அஞ்சாதே, மெளனகுரு, குட்டிப்புலி, திருநாள் எனப் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருந்தாலும் மகேஷ் முத்துசாமியின் பெயர் அதிகம் ஒலிக்கப்படவில்லை. ஆனால், அவரது ஒளிப்பதிவு தனது படத்திற்குக் கிடைத்ததை மிகப் பெரிய பாக்கியமாக நினைக்கிறார் மகேந்திரன்.
சந்தானத்தின் ‘இனிமே இப்படித்தான்’ படத்துக்கு இசையமைத்த சந்தோஷ் தயாநிதி இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ‘ஒன்றோடுதான் ஒன்றாக’, ‘கண்ணாடி பூவுக்கு’, ‘மண்ணெண்ண வேப்பெண்ண விளக்கெண்ண’ என படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள். இதில் ‘மண்ணெண்ண வேப்பெண்ண’ பாடலுக்கு காளி வெங்கட் செமயாக நடனம் ஆடியுள்ளார். படம் வெளியான பிறகு, ‘காளி ஜாக்சன்’ என்றே அழைக்கப்படுவார் என படக்குழுவினர் சொல்கின்றனர். சேதுபதி படத்தைத் தயாரித்த வான்சன் மூவிஸ் ஷாம் சுதர்சன் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.