32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ஜென்டில்வுமன் விமர்சனம் | GENTLEWOMAN Review

Dinesh R சேலம் Published: 07/03/2025 3 நிமிட வாசிப்பு Updated: 08/03/2025 சினிமா
எழுத்து அளவு:

பூர்ணிக்கும் அரவிந்த்க்கும் கல்யாணமாகி மூன்று மாதமான நிலையில், அரவிந்த்க்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரிய வர, அரவிந்தைக் கொன்று விடுகிறாள் பூர்ணி. அல்லது இறந்து விட்ட அரவிந்தின் கழுத்தில் கத்தியைப் பாய்ச்சுகிறாள். அரவிந்துடன் மூன்று வருடமாக உறவில் இருக்கும் ஆன்னா, அரவிந்தைக் காணோம் என காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறாள். பூர்ணியின் நிலை என்ன, ஆன்னாவின் நிலை என்ன என்பதே படத்தின் கதை.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

சந்தர்ப்பச் சூழ்நிலையில் எதிர்பாராத விதமாகக் கொன்றுவிட்டு, அச்சிக்கலில் இருந்து வெளிவர நினைக்கும் கதாபாத்திரம் இல்லை பூர்ணி. கொலை செய்த குற்றவுணர்ச்சி கொஞ்சமும் இல்லாமல், எல்லா ஆண்களும் அயோக்கியமானவர்களே என்ற கோட்பாட்டினில் தீவிரமான நம்பிக்கை கொண்டவராக உள்ளார். வாய்ப்பு கிடைக்குந்தோறும் மறுபடியும் மறுபடியும் ஆண்களைக் கொலை செய்யத் தயங்க மாட்டார் என அழுத்தமாகப் படத்தை முடித்துள்ளனர். தன்னை விட வயது குறைவான பெண்ணிடம், “இவ்ளோ நாள் உங்கப்பா உன்னை வேலைக்கு அனுப்பாம, கடன் அதிகம் ஆனதும் வேலைக்கு அனுப்புறார் என்றால் என்ன அர்த்தம்? அப்பா, கணவன் யாரா இருந்தாலும் பொண்ணுங்கள பண்டமாகத்தான் பார்ப்பாங்க” என யோசனை சொல்கிறார் பூர்ணி. பூர்ணியாக லிஜோமோல் நடித்துள்ளார். அவரால் படம் கூடுதல் அழகினைப் பெறுகிறது.

‘அரவிந்த்க்குக் கல்யாணமாகி விட்டால் என்ன? அவன் பக்கத்தில் இருந்தா நான் ரொம்ப ஹேப்பியா ஃபீல் பண்றேன். அதை ஏன் நான் மிஸ் பண்ணணும்?’ என்று கேள்விகேட்கும் மனநிலையில் உள்ளார் ஆன்னா. இயக்குநர் ஜோசுவா சேதுராமனுடன் இணைந்து, கவிஞர் யுகபாரதி வசனமெழுதியுள்ளார். ஆன்னாவாக லாஸ்லியா நடித்துள்ளார். கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். புருஷனைக் கொன்ற மனைவி, கள்ளக்காதலனை எப்படியாவது கண்டுபிடித்து விடவேண்டும் என நினைக்கும் காதலிக்கிடையே நடக்கும் நிகழ்வுகள்கள் படத்தின் சுவாரசியத்தைக் கூட்டியுள்ளன.

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஓர் உயரதிகாரியைக் குறித்து, “டிப்பார்ட்மென்ட் விட்டு வெளில போய் ஆடு, மாடு வளர்த்து ஒரு கட்சிக்குத் தலைவனாகிவிடுவான்” என்று அவர்க்குக் கீழ் பணிபுரியும் நபர் அங்கலாய்த்துக் கொள்வார். காவலர்கள் வரும் அத்தியாயம் முழுவதுமே அவர்களை ஜோக்கர்களாக்கிப் படத்தின் கலகலப்பிற்கு உதவியுள்ளார். அரவிந்தாக, தங்கலான் புகழ் ஹரி கிருஷ்ணன் நடித்துள்ளார். வீட்டில் தனியாக இருக்கும் இளம்பெண்ணிடம், ‘ஃபோனை எடும்மா, சுடுதண்ணி வைம்மா’ என அவர் புரியும் சேட்டைகள் முடியும் முன்பே ஓர் அதிர்ச்சியினைத் தருகிறார் இயக்குநர். அந்த அதிர்ச்சி போதாது என்று, லிஜோமோல் மூலமாக ஓர் அதிர்ச்சியைத் தருகிறார். அதுவரை தத்தித் தத்தி நடந்த திரைக்கதை, அதன் பின் வேகமெடுத்துக் கடைசி வரை அதைத் தக்கவைக்கிறது.

ஃப்ரிடோ காலோ (Frida Kahlo) எனும் மெக்ஸிகன் பெண் ஓவியரின் படங்களைக் குறியீடாகப் பயன்படுத்தியுள்ளனர். ஆன்னா வீட்டில் இருக்கும் போது, அவ்வோவியம், பெண்களின் வலியையும் வேதனையையும் உணர்த்துகிறது. அதே ஓவியம், ஆன்னா வீட்டுக்கு இடம் மாறும்பொழுது, அது பெண்ணியத்தின் குறியீடாக மாறிவிடுகிறது. லிஜோமோல் தன் கணவனின் உடலை என்ன செய்தார் என்ற கேள்வியைப் படம் நெடுகே தக்க வைத்து, அதற்கான பதிலையும் புதிதாக வரையப்பட்டிருக்கும் ஓர் ஓவியத்தின் மூலம் உணர்த்தியுள்ளார் இயக்குநர். பார்வையாளர்கள் எதிர்பார்க்கும் ப்ரீ-க்ளைமேக்ஸைக் கொடுத்துக் கலகலப்பாக்கியவர், க்ளைமேக்ஸில் எதிர்பார்க்காத ஒன்றைக் கொடுத்துச் சுவாரசியப்படுத்தியுள்ளார்.

இயக்குநர் ஜோசுவா மிகப் பெருந்தன்மையுடன், ‘குற்றம் செய்பவர் மட்டுமல்ல, அக்குற்றத்தை மறைப்பவர்களும் மன்னிக்க முடியாத குற்றவாளிகள்’ என எழுத்தின் வாயிலாக மெஸ்ஸேஜ் சொல்லித் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.