
நிறம் மாறும் உலகில், அதாவது நேரத்துக்குத் தக்கப்படி மாறிக் கொள்ளும் உறவுகளில், என்றுமே மாறாதது தாயின் அன்பு மட்டுமே என அழுத்தமாகச் சொல்கிறது இப்படம்.
தாயோடு கோபித்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியேறும் அபி எனும் இளம்பெண்ணை, டிடிஆர் நா.முத்துக்குமார் ட்ரெயினில் சந்திக்கிறார். அவர், அபிக்கு நான்கு கதைகளைச் சொல்கிறார்.
முதல் கதை, மும்பையில் டானாக இருக்கும் அப்துல் மாலிக் பற்றிய கதை. அப்துல் மாலிக்காக நட்டி நடித்துள்ளார். மும்பை சிகப்பு விளக்குப் பகுதியில் பிறக்கும் அப்துல்க்கு அம்மா என்றால் உயிர். அம்மாவின் மரணம் அவனை என்னவாக மாற்றுகிறது என்றும், அம்மாவுடன் இணைந்து கடலிலுள்ள தேவதைகளைக் காணவேண்டுமென்ற அவனது ஆசை நிறைவேறியதா இல்லையா என்பதுதான் இந்த அத்தியாயத்தின் கதை. மாலிக்கின் தொழிற்போட்டியாளராக சுரேஷ் மேனனும், அம்மா ஃபாத்திமாவாக கனிகாவும் நடித்துள்ளனர். தனது பிரத்தியேகமான மாடுலேஷனில், அவர் இளம்பெண்ணை அம்மாவாகப் பாவித்து சொல்லும் ஒப்புதல் வாக்குமூலம் போன்ற சுய கதை ரசிக்கவைக்கிறது.
மற்ற கதைகள், அம்மா மகனுக்கு இடையிலுள்ள பாசக்கதை என்றால், இவ்விரண்டாவது கதை, காதலித்து மணம் புரியும் மனைவியை வயோதிகத் தனிமையின் போது அம்மாவாக உணருகிறார் துவரங்குறிச்சியில் வாழும் ராயப்பன். வயது முதிர்ந்த ராயப்பனாக பாரதிராஜாவும், இளம்வயது ராயப்பனாக ஏகனும் நடித்துள்ளனர். ஏகன், கோழிப்பண்ணை செல்லதுரை படத்தில் நாயகனாக நடித்திருப்பார். ராயப்பனின் மனைவி குழந்தையாக வடிவுக்கரசியும், முல்லை அரசியும் முறையே பாரதிராஜாவிற்கும் ஏகனிற்கும் ஜோடியாக நடித்துள்ளனர். நால்வரும் தாங்கள் ஏற்ற கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். வயதான காலத்தில், பொருளாதார ரீதியாகப் பிள்ளைகளைச் சார்ந்து வாழும் நிலைமை ஏற்பட்டால் அதனால் எழும் சங்கடங்களை வேதனை நிரம்பக் காட்சிப்படுத்தியுள்ளனர்.
மூன்றாவது கதை, காமேஷ்வரத்தில் குண்டடிப்பட்டு இறக்கும் மீனவரின் குடும்பம் பற்றியது. விதவையாகிவிடும் பரிமளமும், அவரது மகன் அதியனுக்கும் இடையேயான பாசப்பிணைப்பைப் பேசும் படம். அம்மா, புற்றுநோய் கடைசி நிலையில் இருக்கிறார் எனத் தெரிந்ததும், மகன் படும்பாடும் முடிவும்தான் படத்தின் கதை. “நீ மத்தவங்களுக்குக் கெடுதல் பண்ணா, எப்படி கடல்ல போடுற குப்பைத் திரும்பி நம்மகிட்டயோ வருதோ, அப்படி அந்தக் கெடுதலும் வரும்” என மகனை அறம் புகட்டி வளர்க்கிறார். அதியனாக ரியோ ராஜும், பரிமளமாக ஆதிராவும், அதியனின் நண்பன் பாலாவாக விக்னேஷ்காந்தும், அறமற்ற வழியில் கிடுகிடுவென வளரும் மகிமையாக மைம் கோபியும் நடித்துள்ளனர்.
நான்காவது கதை, உறவுகள் யாருமற்று சென்னையில் ஆட்டோ ஓட்டுநராக வாழும் அன்பு, தனது ஆட்டோவில் வரும் மஹி எனும் பெண்ணைக் காதலிக்கிறார். மகனும் மருமகளும் வேலைக்கு வெளிநாடு செல்வதால், தாய் அன்னக்கிளியை முதியோர் இல்லத்தில் சேர்க்க நினைக்கின்றனர். அன்னக்கிளியோ, எங்குச் செல்வது என்ற நிச்சயமின்றி அன்புவின் ஆட்டோவில் ஏறுகிறார். அந்த ஆட்டோ பயணம், அன்பு – அன்னக்கிளி வாழ்க்கையில் என்ன மாற்றத்தை உண்டுபண்ணுகிறது என்பதை நெகிழ்ச்சியாகச் சொல்லியுள்ளனர். அன்பாக சாண்டி மாஸ்டரும், மஹியாக ஐரா கிருஷ்ணனும், அன்னக்கிளியாக துளசியும் நடித்துள்ளனர். இந்த அத்தியாயத்தில் இடம்பெறும் “ரங்கம்மா” பாடல் நன்றாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அபு & சால்ஸின் நடன வடிவமைப்பும், A.S.தாவூதின் பாடல் வரிகளும் ரசிக்கும்படி உள்ளது. தேவ் பிரகாஷ் ரீகனின் பின்னணி இசை, படத்தின் கதையோடு ரசிகர்களை ஒன்ற வைக்க உதவியுள்ளது.
டிடிஆர் நா.முத்துக்குமார் யோகிபாபுவும், அவரிடம் கேட்கும் அபியாக லவ்லின் சந்திரசேகரும் நடித்துள்ளனர். அபியின் அம்மாவாக, லவ்லினின் அம்மாவான விஜி சந்திரசேகரே நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் பிரிட்டோ JB, அம்மா செண்ட்டிமென்ட் என தமிழ் சினிமா பிழிந்துவிட்ட மெலோடிராமாவிற்குள் செல்லாமல், உறவுகளை ஆழமாகத் தனது நேர்த்தியான திரைக்கதையால் பேசியுள்ளார்.