
ஜி.வி.பிரகாஷ் குமார் நாயகனாக நடிக்கும் 25 ஆவது படம். இப்படத்தை அவரே தனது சொந்த நிறுவனமான பேரரல் யுனிசெர்ஸ் பிக்சர்ஸ் மூலம் தயாரித்துள்ளார்.
தூவத்தூர் எனும் கடலோரக் கிராமத்தில், 1982 ஆம் ஆண்டு முதல் கடலில் இறங்கத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. தங்கப்பசி கொண்ட ஒருவனது பிணத்தைக் கடலில் வீசி விடுவதால், சபிக்கப்பட்டதாக மாறும் அக்கடல், கடலுக்குச் செல்பவர்களை எல்லாம் பலி வாங்குகிறது. ஊரின் வாழ்வாதாரத்திற்காக, கிங்ஸ்டன் கடலில் இறங்கி மீன் பிடித்து ஊராரின், அக்கிராமத்தின் ஆதித் தொழிலை மீட்டெடுக்க முயற்சி செய்கிறான். கடலில் இறங்கும் கிங்ஸ்டன் எதிர்கொள்ளும் அமானுஷ்யமான சம்பவங்கள் தான் படத்தின் இரண்டாம் பாதிக்கதை.
இடைவேளையில்தான் தூவத்தூர் கடலில் இறங்குகிறார் கிங்ஸ்டன். அதுவரை அந்த அமானுஷய்த்திற்காகப் பார்வையாளர்களைத் தயார்ப்படுத்துகின்றனர். அதுவும் நேரடியாகக் கதைச் சொல்லாமல், 1982, 2009, 2025 என திரைக்கதை ஒரு புதிர் போல் முன்னும்பின்னும் சென்று வருகிறது. கதையின் நாயகன் கிங்ஸ்டன் அறிமுகமாகும் முன், தூத்துக்குடி வட்டார வழக்கில் கதை ஒரு களத்தை அமைக்கிறது. நாயகன் தோன்றி கானா பாட்டு பாடுகிறார். எந்தவொரு காட்சியும் முற்று பெறாமல், சட்சட்டென அடுத்த காட்சிக்கு முன்னும் பின்னும் நகர்கிறது. அதனால் எந்தக் கதாபாத்திரத்தின் மனநிலையும் சரியாகப் பதியப்படாமல், படம் பார்வையாளர்களோடு கனெக்ட் ஆவதில் சிரமத்தை எதிர்கொள்கிறது.
கிங்ஸ்டனின் தாத்தா மார்ட்டின், ஆனா மார்ட்டினை வளர்ப்புப் பிள்ளையாக வளர்த்தது கிங்ஸ்டனின் தாத்தா சாலமன், சாலமனின் நண்பர் ஸ்டீஃபன் போஸ், ஸ்டீஃபன் போஸ் அவரது நண்பர் அந்தோணியை சாலமனுக்கு உதவ அனுப்பி வைக்க, அவர் இறந்து விடுகிறார் என்பதை முறுக்கு போல் சுத்திச் சுத்திச் சொல்லியுள்ளதைத் தவிர்த்திருக்கலாம். படத்தின் முதற்பாதி கதையில் சுவாரசியம் இல்லாததால், அதைச் சுவாரசியமாக்கிட நான்-லீனியர் பாணிக்குப் போயுள்ளனர் போலும்! இரண்டாம் பாதியில், கடல், அமானுஷ்யம், வி.எஃப்.எக்ஸ். என முடிவான பின், சோதிக்காமல் கதையை நேரடியாகச் சொல்லிவிடுகின்றனர். அதிலும் ஆடியன்ஸ்க்கு ஒரு ட்விஸ்ட்டை அளித்தாக வேண்டுமென உண்மையான வில்லனைப் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றனர். ‘ஐ’ படத்தில் சுரேஷ் கோபி தான் வில்லன் என ஷங்கர் கொடுத்த ட்விஸ்ட்க்கு நிகரான ட்விஸ்ட்டை அளித்துள்ளார் அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ். தயாரிப்பாளரான ஜி.வி.பிரகாஷோ ஒரு படி மேலே சென்று, படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டின் பொழுது, வில்லன் கதாபாத்திரத்திற்கு யாரை, அவர் எந்தப் படத்தில் நடித்தைப் பார்த்துத் தேர்ந்தெடுத்தார் என்பது வரை விரிவாகச் சொல்லி நன்றி தெரிவித்திருந்தார்.
கிங்ஸ்டனின் நண்பர்கள் லிபின், காட்ஸன், பிலிப்ஸாக முறையே ஆண்டனி, ராஜேஷ் பாலசந்திரன், அருணாசலேஸ்வரன் ஆகியோர் நடித்துள்ளனர். கிங்ஸ்டன் அளவுக்குச் சோதிக்காத பாத்திரமாக ராபர்டின் மகன் பெஞ்சமின் ரசிக்க வைக்கிறான். பெஞ்சமினாக நடித்துள்ள பிரவீன் பிரமாதமாக நடித்துமுள்ளார். தூத்துக்குடியைத் தனது ஆளுகைக்குள் வைத்திருக்கும் தாமஸாக மலையாள நடிகர் சாபுமோன் அப்துசாமத் நடித்துள்ளார். டெரரான வில்லனாகக் காட்டிவிட்டு, எசகுபிசகான நேரத்தில், “எனக்கு ஃப்ளாஷ்-பேக் சொல்லலைன்னா தலையே வெடிச்சுடும்” என நடுக்கடலில் கிங்ஸ்டனிடம் கதையைச் சொல்கிறார். பேய் தாமஸைக் கொல்லும் இடம் (place) ஆசுவாசத்தை அளிக்கிறது. கிங்ஸ்டனின் காதலி ரோஸாக திவ்யபாரதி தோன்றியிராவிட்டாலும் கூடப் படத்தின் கதைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத அளவு அவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. அச்சுறுத்தும் வினோத ஜந்துவாக நடித்துள்ள ஃபயர் கார்த்திக்கிற்கு ஒப்பனை போட்டவரின் கைவண்ணம் பிரமாதம்.
கதையின் களத்தை ஃபேண்டஸிக்கு ஏற்றாற்போல் தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால் திரைக்கதையில் சுவாரசியத்தைக் கூட்டுவதற்குப் போதுமான விவரணைகள் இல்லாமல் வெறுமையாக உள்ளது. ஃபேண்டஸிக்கு விதிகளை உருவாக்கி அதற்குள் கதையையும் கதாபாத்திரங்களையும் இயங்கவைக்க வேண்டும். இயக்குநர் செம ஜாலியாக எதையும் பொருட்படுத்தாமல் திரைக்கதையை அணுகியுள்ளார். படத்தின் முதற்பாதியில், தூவத்தூரில் இருந்து 6 கி.மீ.-இலுள்ள தூத்துக்குடியில் இருந்து படகில் பயணித்து நடுக்கடல் வரை செல்கிறார் கிங்ஸ்டன். தூவத்தூர் கரையிலிருந்து கடலில் எத்தனை கி.மீ. வரை பேய் தனது கன்ட்ரோலில் வைத்திருந்து என்பதில் தெளிவில்லை. கடலில் என்ன நடக்கிறது என்ற குழப்பம் தீரும் முன், ‘கடலில் இருக்கிற அந்த பிணப்பெட்டியைக் கண்டுபிடிச்சுட்டோம்ன்னா..’ என தீர்வை முன்மொழிகிறார் நாயகன். வைக்கோல்போரில் கூட ஊசியைத் தேடி விடலாம், 36 ஆண்டுகளுக்கு முன் கடலில விடப்பட்ட சவப்பெட்டியை எங்கே எப்படித் தேடுவார் எனும் கேள்வியெழுகிறது. ‘நீங்க யோசிச்சுட்டு இருங்கய்யா?’ என பார்வையாளர்களை அம்போவென விட்டுவிட்டு, ஜி.வி. தொபக்கடீர்னு கடலில் குதித்தி சிரமமின்றி சவப்பெட்டியைக் கண்டடைகிறார். கிங்ஸ்டனான ஜி.வி.பிரகாஷைப் போலவே, லாஜிக்கையோ, மேஜிக்கையோ எதிர்பார்க்காமல் கேள்விகளைப் புறந்தள்ளி விட்டுப் படத்தைப் பார்த்தால் இப்படத்தை நன்றாக ரசிக்க இயலும். தொழில்நுட்ப ரீதியாக, ஃபேண்டஸியில் ஒரு பாய்ச்சலுக்கு முயன்றுள்ளனர் படக்குழு.