Shadow

ஹீரோ விமர்சனம்

Hero-movie-review

ஜென்டில் மேன் 2 என்றே படத்திற்குத் தலைப்பு வைத்திருக்கலாம். அனைவருக்கும் இலவசக் கல்வி என்ற நன்நோக்கமுடைய கொள்ளைக்காரன் சத்தியமூர்த்தியாக அர்ஜுன் வருகிறார். படத்தின் நாயகன் அவர் தான்.

ஸ்கூல் படிக்கும் பொழுது சக்திமான் தொடர் பார்த்து சூப்பர் ஹீரோ ஆகவேண்டுமென ஆசைப்படுகிறான் சக்தி. வளர்ந்த பின்னும் அந்த ஆசை விடாமல் சக்தியைத் துரத்த, ஜென்டில் மேன் சத்தியமூர்த்தியின் உதவியுடன், ஒரு முகமூடி அணிந்து சூப்பர் ஹீரோவாகி விடுகிறான் என்பதுதான் படத்தின் கதை.

தொழிலதிபர் மகாதேவாக அபய் தியோல். சத்தம் போடாத, பணம் சம்பாதிப்பதில் கண்ணாக இருக்கும் காரிய வில்லனாக அசத்துகிறார். ஆனாலும், க்ளைமேக்ஸில் அவரை வழக்கமான சோப்ளாங்கி வில்லனாக்கி, சூப்பர் வில்லனாகப் பரிணமிக்க வேண்டியவரைச் சாதாரண வில்லனாக்கி உச்சபட்ச அநியாயம் செய்துள்ளார் இயக்குநர் பி.எஸ்.மித்ரன். கடல் நீரில் ஓடும் வாகனத்தைக் கண்டுபிடித்ததற்கான பேடன்ட் உரிமையை வைத்திருக்கும் பெரும் தொழிலதிபரான அபய் தியோல் எவ்வளவு நல்லவர் என்றால், இந்தக் கண்டுபிடிப்பு வெளியானால், ‘அரபு ஷேக் வருமானத்திற்கு என்ன செய்வார்? ஐயோ பாவம்?’ என அவரை அழைத்து 60000 கோடிக்கு அந்த உரிமையை விற்று விடுகிறார். அபய் தியோல் மட்டும் சுயநலக்காரராக இருந்தால், பொன்முட்டை போடும் அந்த பேடன்ட் உரிமையைக் கொண்டு மிகப் பெரிய அதிர்ஷ்டத்தைத் தனக்குத் தேடிக் கொண்டிருந்திருப்பார்.

படத்தின் நாயகனான சிவகார்த்திகேயனின் பாத்திரம், அவசரபுத்தியையும் குறுக்குபுத்தியையும் ஹோல்சேலில் எடுத்து வைத்திருக்கும் ஒன்னாம் நம்பர் ஃப்ராடு எனச் சித்திரிக்கப்படுகிறது. ‘எவன் சுயமா சிந்திக்கிறானோ அவன் தான் சூப்பர் ஹீரோ’ எனச் சொல்பவர், கடைசி வரை எதையும் சுயமாகச் சிந்தித்து உருப்படியாகச் செய்வதில்லை. சக்திக்கு, சத்தியமூர்த்தி எனும் ஜென்டில் மேன் தேவைப்படுகிறது.

பெரிதாக ஏதோ சாதிப்பதை நினைத்துக் கொண்டு, ஒரு பெண்ணின் மரணத்திற்குக் காரணமாகி விடும் ஹீரோ, ஜென்டில் மேன்னைப் பார்த்து, “உண்மைய சொல்லுங்க நீங்க யார்?” என்று இரண்டாம் பாதியில் சீரியசாகக் கேட்கும் பொழுது, திரையரங்கில் அனைவரும் சிரித்துவிடுகின்றனர். இரும்புத்திரை இயக்கிய மித்திரனா இது எனப் பரிதாபம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை!

போலி சான்றிதழ் அச்சடித்துத் தரும் ஒரு ஏமாற்றுப் பேர்வழி, சூப்பர் ஹீரோவாக மாறுவதற்கு இடைவேளை முடிந்து, அதன் பின் ஒரு ஃப்ளாஷ்-பேக் வேற தேவைப்படுகிறது. மோடியும், அமித் ஷாவும் CAA & NRC – ஐ அமுல்படுத்துவதில் பிசியாக இருப்பதை அறிந்து கொண்ட அந்த அரபு ஷேக்குகள், 60000 கோடியையும் 2000 ரூபாய் நோட்களாக மாற்றி, நேரடியாக RBI இல் இருந்தே வில்லனின் கல்லூரிக்கே அனுப்பிவிடுகிறார்கள். இப்படியாக, பா.ஜ.க.வின் டிஜிட்டல் இந்தியாவைக் கிண்டல் செய்திருப்பது மட்டுந்தான் படத்தின் ஒரே ஆறுதல். இரும்புத்திரை படத்திலும் அத்தகைய பரவசத்தைக் கொடுத்திருந்தார் இயக்குநர் மித்திரன்.

இந்தப் படத்தின் மற்றொரு ஹைலைட் என்னவென்றால், அந்த மாஸ்க்கை மட்டும் கழட்டிவிட்டால் சிவகார்த்திகேயன் ஒரு மாஸ் ஹீரோவாக இருந்திருப்பார். கண்களுக்கு மாஸ்க் போட்டுக் கொள்வதால் சூப்பர் ஹீரோவாகிவிடுகிறார். அடடே!!

பி.கு.: இது ஒரு சூப்பர் ஹீரோ ஸ்பூஃப் மூவி என்பது 10 வருடங்களுக்குப் பிறகுதான் ரசிகர்களுக்குப் புரியும் போன்ற கமென்ட்கள் இரும்புக்கரம் கொண்டு பிளாக் செய்யப்படும்.