பாபநாசம் படத்தின் மூலம் நம் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் ஜீத்து ஜோசப்.
பாபநாசத்தைப் போலவே தம்பியும் ஒரு த்ரில்லிங் அனுபவத்தைக் கொடுக்கின்றது. கதை சொல்வதில் தனது த்ரில்லர் திறமையைக் கொட்டி இருக்கிறார் ஜீத்து. ஆனால் கொஞ்சம் அதிகமாகவே கொட்டியுள்ளார்.
கதைக்கு ட்விஸ்ட் என்பது சுவாரசியமாகவும், ஆர்வத்தைத் தூண்டக் கூடியதாகவும் இருக்கும் என்பது உண்மைதான். ஆனால், ட்விஸ்ட்டுக்கு மேல் ட்விஸ்ட் என்று வெறும் ட்விஸ்டாக மட்டுமே கொடுத்துக் கொண்டு இருந்தால் எப்படி?
ஜீத்து, மலையாள வாசத்தோடு படத்தை எடுத்துள்ளார். கதாபாத்திரங்கள் அனைவரும் தமிழில்தான் பேசுகிறார்கள். ஆனால் அது மலையாளப் படமாகத்தான் நகருகிறது. தமிழில் பேசுவதாலேயே தமிழ்ப்படம் என்று சொல்ல முடியாது.
ஏன் என்றால், ஒவ்வொரு காட்சிக்குமான அரேஞ்ச்மென்ட்ஸ் மலையாள மார்க்கமாகவே இருக்கிறது. ஒரு காட்சிக்குள் படிப்படியாகக் கதாபாத்திரங்களைக் கொண்டு வர இயக்குநர் கம்போஸ் செய்திருக்கும் ஷாட்டுக்களின் மூட்(mood) எல்லாமே மலையாள மயம். லொக்கேஷன் இந்தப் படத்தின் ஒரு பெரிய குறை.
ஜீத்து ஜோசெப், நடிப்பையும் மனிதர்களின் உணர்ச்சிக் கொந்தளிப்பையும் ஆதாரமாகக் கொண்டு படம் எடுப்பவர் என்பதால், இப்படத்தில் ஜோதிகா சுலபமாக இணைந்து விடுகிறார். அதே நேரத்தில், ஜோதிகாவுக்கு, நடிப்புக்கான பெரிய ஸ்கோப்பை உருவாக்கி விட்டு அதற்குமேல் எதுவும் செய்ய முடியாமல் திணறி இருக்கிறார் ஜீத்து ஜோசப். ஜோதிகாவின் கேரக்டர் வீணடிக்கப்பட்டு இருப்பது அப்படமாகத் தெரிகிறது. அம்மு, இந்தப் படத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரத்தில் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவுக்கு ஒரு சிறந்த குணச்சித்திர நடிகை கிடைத்து இருக்கிறார்.
முதல் காட்சியில் குதிரையில் தோன்றும் ஜோதிகா டாவின்சியின் மோனாலிசா ஓவியம் போல அழகாக ஜொலிக்கிறார். தொடரும் அந்த ஷாட்டுக்களில், முகத்தில் அவர் கொடுக்கும் உணர்ச்சி மாறுதல்கள் ஜோதிகாவின் முதிர்ந்த நடிப்புக்குச் சான்று. இது ஜோதிகாவின் படமாக இருந்திருக்க வேண்டும். ஜீத்து சொதப்பி விட்டார்.
வழக்காமான தனது சிரிப்பைக் கொஞ்சமாகத் தவிர்த்து இருக்கிறார் கார்த்தி. அதுவே அவர் மீது கவனத்தைப் பெற்றுத் தருகிறது. கார்த்திக்கு நடிக்க அருமையான வாய்ப்பு கிட்டி இருக்கிறது. அதை அவர் மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார். ஒரே காட்சியில், ஏன் ஒரே ஷாட்டில் தனது முகத்தில் சரவணனையும் பழைய ஃப்ராடுப் பையனையும் மிக எளிதாக முகத்தில் கொண்டு வந்து வியக்க வைக்கிறார். கார்த்திக்கிற்கு இது ஒரு சிறந்த படமாக அமையும்.
இந்தப் படத்தில் லாஜிக் குறைபாடு எதுவும் இல்லை. ரசிகனின் அறிவைப் பின்னுக்கு இழுக்கும் எந்த காட்சித்தொகுப்பும் இல்லை. அந்த வகையிலும் இது நல்ல படம்.
– ம.தொல்காப்பியன்