Shadow

“இளையராஜா நம் நாட்டின் அதிசயம்” – இயக்குநர் பாரதிராஜா

கனெக்ட் மீடியா, PK ப்ரைம் ப்ரொடக்ஷன், மெர்குரி மூவீஸ் நிறுவனங்களின் தயாரிப்பில், இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் புதிய திரைப்படத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ் நடிக்க, இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். இப்படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. உலகநாயகன் கமல்ஹாசன் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தி இப்படத்தினைத் துவங்கி வைத்தார். இவ்விழாவினில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, திரு. கங்கை அமரன், இயக்குநர் சந்தான பாரதி, திரு. ரங்கராஜ் பாண்டே, இயக்குநர் வெற்றிமாறன், இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, இயக்குநர் பேரரசு முதலான திரைபிரபலங்கள் கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தினர்.

இயக்குநர் பாரதிராஜா, “உலக அதியசங்கள் என எதை எதையோ சொல்கிறோம். ஆனால் இளையராஜா நம் நாட்டின் அதிசயம். நான் சிறு வயதிலிருந்து அவனுடன் பழகி வருகிறேன். ஆனால் அவனது திறமை, இசை என்னாலேயே நம்பமுடியாதது. கையில் என்ன கிடைத்தாலும் உடனே இசையமைக்க ஆரம்பித்துவிடுவான். அவன் அருகில் இருப்பதால் அவன் அருமை தெரியவில்லை. இந்திய மாநிலங்கள் அனைத்தும் இணைந்து திரைத்துறையினர் ஒன்று சேர்ந்து அவனுக்கு விழா எடுக்க வேண்டும். அதில் நான் பங்கு கொள்ள வேண்டும் அதுவே என் ஆசை. அவன் ஒரு அதிசயப்பிறவி, எத்தனை நூற்றாண்டு காலம் ஆனாலும் இந்திய நாடு இளையராஜாவை மறக்க முடியாது. இளையராஜாவின் பயோபிக்கை எடுப்பது மிகவும் கஷ்டம், நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டும். தனுஷ் இதில் இணைந்துள்ளார். மகிழ்ச்சி. கடவுள் எப்படி ஒன்று சேர்த்துள்ளார் பாருங்கள். அற்புதமான நடிகன். நடிகர், இயக்குநர், பாடலாசிரியர் என அனைத்திலும் ஜொலிக்கக்கூடியவன். தனுஷ் நடிப்பது எனக்குப் பெரு மகிழ்ச்சி. இயக்குநர் அருண் மாதேஸ்வரனுடன் நான் ஒரு படம் செய்திருக்கிறேன். மிகவும் முரட்டுத்தனமான இயக்குநர். என்னையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய ஒரு இயக்குநர் என்றால் அவன் தான். மிகத் திறமைசாலி. அவன், இந்தப் படத்தை இயக்குவது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைய எனது வாழ்த்துக்கள்” என்றார்.

இளையராஜாவின் அற்புதமான பாடல்களின் இசை குறிப்புகளால் நிறைந்த, ஒரு அழகான போஸ்டரை வெளியிட்டு, உலக நாயகன் கமல்ஹாசன் இளையராஜா படத்தினைத் துவக்கி வைத்தார்.