Shadow

“இது, பாரத் ரத்னா இளையராஜாவின் படம்” – கமல் ஹாசன்

கனெக்ட் மீடியா, PK ப்ரைம் ப்ரொடக்ஷன், மெர்குரி மூவீஸ் நிறுவனங்களின் தயாரிப்பில், இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் புதிய திரைப்படத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ் நடிக்க, இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். இப்படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. உலகநாயகன் கமல்ஹாசன் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தி இப்படத்தினைத் துவங்கி வைத்தார். இவ்விழாவினில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, திரு. கங்கை அமரன், இயக்குநர் சந்தான பாரதி, திரு. ரங்கராஜ் பாண்டே, இயக்குநர் வெற்றிமாறன், இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, இயக்குநர் பேரரசு முதலான திரைபிரபலங்கள் கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தினர்.

நடிகர் கமல்ஹாசன், “எங்கிருந்து இதை ஆரம்பிப்பது என்பதே எனக்குப் புரியவில்லை. இது மிக நீண்ட ஒரு பயணம். எங்களுக்கு இடையிலான நட்பு என்பது மிகப் பெரியது. இவர் தான் இளையராஜா என்று தெரியாமல் இருந்த காலத்திலிருந்து அவரை அறிந்தவன் நான். பாவலர் பிரதர்ஸ் உடன் பணி புரியும் காலத்திலிருந்து இவரைத் தெரியும். நான் அப்போது அமர் தான் இளையராஜா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஒரு விழாவில் இளையராஜாவைச் சந்தித்தபோதுதான் தெரிந்தது. அவரது இசைக்கு ரசிகனாக ஆரம்பித்துக் கொஞ்ச நாளில், அவர் எனக்கு அண்ணனாக மாறி பின்பு அய்யாவாக மாறி இன்று வரை தொடர்கிறது. எனக்கு இசையில் நாட்டமில்லை என்பதால் எனக்கு அவர் மீது பொறாமை இல்லை. அவரை ரசித்துக் கொண்டே அவரது வெற்றிகளை எல்லாம் என் வெற்றியாய் நினைத்து பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். குணா படப்பாடல் குணாவுக்கும் அபிராமிக்குமானதல்ல, எனக்கும் அவருக்குமான காதலைச் சொல்லும் பாடல். நான் எழுதினேன், அவர் இசையமைத்தார். எங்கள் காதல் பாடல் அது. ராஜாவின் கதையை எளிதாக எடுக்கலாம். கஷ்டம் அல்ல. அதை எடுக்கணும் என்று நினைத்தால் 8 பார்ட் வரை கூட எடுக்கலாம். ராஜாவைப் பிடிக்காதவர்கள் எடுத்தால் அது ஒரு மாதிரியானது. ராஜாவைப் பிடித்தவர்கள் எடுத்தால் அது வேறு மாதிரியாக இருக்கும். ஆனால் அதில் எல்லாவற்றிலும் இளையராஜா தனித்துவமாக இருப்பார். இங்குப் பலர் தங்கள் வாழ்க்கையையே அவரது பாடல்களுடன் இணைத்துத் தான் ஞாபகத்தில் வைத்துள்ளார்கள். மிக மகிழ்ச்சியுடன் எந்த பிரஷரும் இல்லாமல் படத்தை எடுங்கள். ஏனெனில் இது இளையராஜாவின் படம் கிடையாது. பாரத ரத்னா இளையராஜாவின் படம். தனுஷ் மற்றும் இயக்குநருக்கு என் வாழ்த்துக்கள்” என்றார்.

இளையராஜாவின் அற்புதமான பாடல்களின் இசை குறிப்புகளால் நிறைந்த, ஒரு அழகான போஸ்டரை வெளியிட்டு, உலக நாயகன் கமல்ஹாசன் இளையராஜா படத்தினைத் துவக்கி வைத்தார்.