25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்திரஜித் படத்தைக்கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். சக்கரக்கட்டி படத்தை இயக்கிய அவரது இளைய மகன் கலாபிரபு இப்படத்தை இயக்கியுள்ளார். கெளதம் கார்த்திக் நாயகனாகவும், சோனாரிகாவும் அஷ்ரிதா ஷெட்டியும் நாயகிகளாகவும் நடித்துள்ளனர்.
அக்டோபர் 15 அன்று நடந்த இசை வெளியீட்டு விழாவில், படத்தின் ட்ரெயிலர் திரையிடப்பட்டது. சாகசப் பயணத்திற்கு அழைத்துச் செல்லுமென்ற நம்பிக்கையை ட்ரெயிலர் ஏற்படுத்தியுள்ளது. ஹாலிவுட் தரத்தில் ஒளிப்பதிவும், VFX-உம் உள்ளதென மகிழ்ச்சியில் உள்ளார் தயாரிப்பாளர் தாணு. ‘இந்தப் படம் கண்டிப்பாகக் காலத்தின் கல்வெட்டாக இருக்கும். இந்தப் படத்தின் வெற்றிக்கு இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் தான் காரணமெனப் பார்க்கும் பொழுதே தெரியும்படி உள்ளது’ எனப் புகழ்ந்தார். கவிஞர் அறிவுமதியின் மகன் இராசாமதி தான் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பாண்டிச்சேரியில் எடுக்கப்பட்ட ஒரு சண்டைக்காட்சிக்கு மட்டும் 46 லட்சம் செலவு செய்துள்ளது படக்குழு. ஸ்டன்ட் சிவாவின் ஆக்ஷன் கோரியோகிராஃபியில், கெளதம் கார்த்திக் முழு நீள ஆக்ஷன் ஹீரோவாக பரிணமித்துள்ளார். பில்லா 2, மீகாமன் ஆகிய படங்களில் நடித்த சுதான்ஷு பாண்டே தான் இப்படத்திற்கு வில்லன்.
கிருஷ்ண பிரசாத் (KP) எனும் அறிமுக இசையமைப்பாளர் படத்திற்கு இசையமைத்துள்ளார். தேவி ஸ்ரீபிரசாதின் குழுவில் இருந்து வந்திருப்பவர். படத்தொகுப்பாளர் கனேஷையும் அறிமுகம் செய்துள்ளனர்.
விஷூவல் ட்ரீட் உறுதி என்ற நம்பிக்கையைத் தருகிறது இந்திரஜித்.