தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் ஒருவருக்குத் துணையாக வேலைக்குச் சேர்கிறான் துறுதுறு இந்திரஜித். மருத்துவக் குணம் கொண்ட விண்கல் ஒன்றைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள அந்தக் குழு, சவால்களையுக் எதிரிகளையும் சமாளித்துச் சாதித்தனரா என்பதே படத்தின் கதை.
படத்தின் எந்தக் காட்சியும் மனதில் பதியவில்லை. ரோலர் கோஸ்டர் பயணம் போலவும், அவசரமானதொரு சாகசப் பயணம் போலவும் படம் முடிகிறது. ராசாமதியின் ஒளிப்பதிவில் கேரளக் காடுகளும், கோவா காடுகளும் கண்களுக்கு மிகக் குளிர்ச்சியாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அந்தப் பசுமையையும், இயற்கையின் செழுமையையும் தான் படத்தின் மிகப் பெரிய ஆறுதல்.
சோனாரிகா என்றொரு கதாநாயகி மின்னல் போல் மின்னி மறைகிறார். பாடலுக்காக மட்டும் வந்து போகிறார். யானை மீது அறிமுகமாகும் அஷ்ரிதா ஷெட்டி தான் படத்தின் நாயகி. அவரும் பாடலுக்காகத்தான் என்றாலும் மின்னி மறையாமல் படம் நெடுகேவும் வருகிறார்.
மயிலாப்பூர் தீக்ஷிதர் சங்கரராமன் பற்றிய லைன் அனிமேஷன் நன்றாக உள்ளது. சூரியனில் இருந்து விடுபடும் துகள், விண்கல்லோடு மோதுவது என்ற பூர்வாங்கப் பீடிகையும், அதன் விஷூவல் சித்தரிப்பும் கூட ரசிக்கும்படி இருந்தது. எனினும் கதை ஓட்டம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாததோடு, காட்சிகள் மாற்றத்தில் ஒரு ஜம்ப் இருந்து கொண்டே உள்ளது.
சலீம் பாய் எனும் காமெடி மாவோயிஸ்ட்டாக வருகிறார் எம்.எஸ்.பாஸ்கர். படத்தில் கொஞ்சம் கூட சீரியஸ்னஸ் இருந்து விடக்கூடாது எனத் தெளிவாக இருந்துள்ளார் போல் இயக்குநர் கலாபிரபு. கெளதம் கார்த்திக் பாறைகளில் உருளுகிறார்; குண்டுகளுக்கு நடுவில் புகுந்து தப்பிக்கிறார்; விழுதுகளைப் பிடித்துக் கொண்டு ஏரிலேயே (Air) பயணிக்கிறார். க்ளிஷே காட்சிகளால் படத்தை நிரப்பியுள்ளது அயற்சியைத் தருகிறது. ஆம், ஹீரோயின் மலை முகட்டில் தொங்கும் அந்தப் பரபர ஐய்யோ அம்மா காட்சி இந்தப் படத்திலும் உண்டு.
விமானத்தில் அறிமுகமாகும் சுதான்ஷு பாண்டே, முதல் காட்சியில் இருந்தே கவருகிறார். கதையில் இல்லாத சீரியஸ்னஸைத் தன் கதாபாத்திரத்தில் அநாயாசமாகக் கொண்டு வந்து அசத்துகிறார். நாயகனை விடவும் அழகாக உள்ளார். மாவோயிஸ்ட் குழு ஒன்றின் தலைவனாக நடித்திருக்கும் ரஜ்வீர் சிங்கும் தன் பங்கை அழகாகச் செய்துள்ளார்.
நாயகன் தன் இலக்கை அடையும் போது எழ வேண்டிய மகிழ்ச்சியும் சிலிர்ப்பும் சரியாகப் பார்வையாளர்களுக்குக் கடத்தப்பட்டிருப்பின், கலாபிரபுவின் புதிய முயற்சி இந்திரஜித்துக்கு மகத்தான ஜெயத்தைக் கொணர்ந்திருக்கும்.